Wednesday, May 27, 2026

 இன்று பிரதோஷ நன்னாள்,



                 <> வழிநடத்தும் பரமன் <>

                     திருச்சிற்றம்பலம்

       

அகந்தையை அழிப்பாய் நீஎன்(று) அகிலம்வாழ் மாந்தர் காண

அத்தியைப் புலியை மாய்த்தாங்(கு) அவற்றுரி போர்த்தி நின்றாய்

சகந்தனில் கால ஓட்டந் தனைஅவர்க்(கு) உணர்த்து(ம்) வண்ணஞ்

… தளும்பிடும்) நதியை உன்றன் சடையினில் வைத்தாய்; நாடி

உகந்தனை துறவிக் கோலம் உலகில்காண் பொருளில் பற்றை

உதறுதல் வேண்டு(ம்) முக்தி உற்றிட என்று காட்ட;

பகர்ந்திடப் போமோ இங்ஙன் பற்பல வகையாய் எம்மைப்

.. பரிவுடன் வழிந டத்தும் பரம!நின் அருளின் மேன்மை.

(தளும்புதல் - மனங்கலங்குதல் (எ. கா.) அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள்: திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713)

                                         ..அனந்த் 28-5-2026

Wednesday, May 13, 2026

 உ  திருச்சிற்றம்பலம் 


இன்று பிரதோஷ நன்னாள். 

திருச்சிற்றம்பலம் 


     <> மனத்திற்கோர் மடல் <>





 செல்லும் வழிமுடிந் தாச்சு - வேறு

... திசையில் திரும்பிடும் நேரம்வந் தாச்சு


தொல்லை தருமுடல் நோயில் - படும்

..துன்பத்தில் நீவாடும் இத்தறு வாயில்

இல்லை துணையுனக் கென்று - நீ

..ஏங்கிடக் காரணம் சொல்கின்றேன் இன்று.  

அல்லும் பகலும் அலைந்தாய் – உன்றன்

.. ஆசைக்கு வானமே கூரையாய் வேய்ந்தாய்

சொல்லில்பொய் யாவு முரைத்தாய் – அற்பச்

… சுகத்தைப் பெறப்பல தீமையி ழைத்தாய்  (செல்லும்)


தன்னலம் கொண்டு திரிந்தாய் – தலை

.. தாழ்தல் பிழையென்று சாற்றி நடந்தாய்

உன்னை எதிர்த்தவர் தம்மைத் – தூற்றி

..ஒடுக்க உபயோகித் தாய்கொடும் வன்மை. 


திரையோ(டு) உரை,நடை மாற்றம் – உன்றன்

.. தெம்பில்லா உள்ளத்தில் காணும்ஏ மாற்றம்

புரையொடு நாளும்போ ராட்டம் - கண்கள் 

.. பூத்துத் தெரியு(து) ஒருபனி மூட்டம்  (செல்லும்)


பொருளை நினைத்தேனோ தேட்டம் - நீ

.. போவதில் தான்இங்(கு) இருப்பவர் நாட்டம் 

இருக்குமிந் நாளில்ஏன் காட்டம் – பிறர்  

.. ஏச்செலாம் கேளா(து) எடுப்பாய்நீ ஓட்டம்  (செல்லும்)


செருக்கோடு வாழ்ந்திட்ட காலம் – தன்னில்

… தெம்போடு செய்த பலப்பல ஜாலம்

இருக்கும் அவஸ்தைக்கு மூலம் – அதை

.. இன்னும் உணரா(து) எழுப்புவாய் ஓலம்  (செல்லும்)


உள்ள மிகச்சில நாளில் -உனக்(கு)

.. உதவக் கரம்நீட்டு வோனை மனத்தில்

 உள்ளின் கிடைக்கும்மெய்ஞ் ஞானம் – அதில் 

 ..ஊறிப் பருகுவாய் பேரின்பப் பானம்  (செல்லும்)

    

அம்பலத் தாடிடும் ஈசன் – உனக்(கு)

.. அருளிடக் காத்துநிற் பானந்த நேசன்

நம்பி அவன்தாளைப் பற்று – அந்த

.. நாளேநீ ஆவாய் துயரேதும் அற்று. (செல்லும்)


                                         .. அனந்த் 13-5-2026