Monday, December 30, 2013

இவன் எழில்


இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

Inline image 1

திருச்சிற்றம்பலம் 
<> இவன் எழில் <>
பாலைநிகர்  மேனியதில் பாதியினைப் பச்சைநிற
மாலவனின் சோதரிக்கு வழங்கியிரு வண்ணங்கொள்
கோலமுடன் மன்றினிலே கூத்தாடும் இவனழகில்
காலமெனும் கணக்கெல்லாம் கரைந்தழிய மூழ்குவனே.

விண்ணவர்தம் மணிமுடிகள் வீசுமொளித் திருப்பாதம்
வெண்ணிறநீ(று) அணிந்துவிடை மேலேறும் திருக்காட்சி
தண்மதியம் போல்முகத்தில் தவழ்முறுவல் யாவையுமென்
கண்களினால் விழுங்கிடுவேன் கரைந்திடுமென் துயரெல்லாம்.

சூடிடுவான் கொன்றையுடன் தும்பையுமாம் நீள்செவியில்
ஆடிடுமாம் தோடெனஈர் அரவங்கள் மிளிர்மிடற்றில்
கூடிடுமாம் ஆழிவிடம் கூத்தாடி இவனெழிலைப்
பாடிடுமாம் என்நாவும் பலப்பலவாய்க் களிமிகுந்தே

(மேனி முழுவதும் வெண்ணீறு பூசி இருப்பதால், பால்வண்ணன்)

பின் குறிப்பு:

வகைவகையாய் உனதுருவின் வடிவழகை மாந்திமனக்

குகையினுளே வைத்துவப்பேன் கூத்தாடித் திரிவோய்!என்

புகைப்படத்தை யாகிலும்நீ பார்த்ததுண்டோ? பார்த்திருப்பின்

தகைமையில்லா எளியேன்பால் தயைகாட்டத் தவிராயே!

30-12-2013

Saturday, December 14, 2013

திருச்சிற்றம்பலம்

Inline image 1Inline image 1


 

<> தாபம் தணியாயோ? <>



நெஞ்சமென்னும் கல்லில்நின் சிலைவ டித்து

... நிஷ்டையெனும் பீடத்தில் நிறுத்திவைத்துக்


கொஞ்சமுமோர் குறைவின்றிப் பக்திப் பாலைக்

... கொட்டியுனக்(கு) அபிடேகம் செய்து பின்னர்


செஞ்சுவைசேர் நைவேத்யம் ஆக உள்ளே

.. சேமித்த நல்வினையை ஊட்டி யுன்னை


வஞ்சமின்றிப் பூசையைநான் செய்வதற்கு

... வகையேதும் செய்யாயோ தில்லைமன்னே!



அனந்த் 14-12-2013

Saturday, November 30, 2013

திருச்சிற்றம்பலம்

Inline image 1

<> தடை <>


அருள்தரும் விழியுடன் அம்பலத் தாடிநீ
….அம்புயக் கரத்தை நீட்டி
.….அடியவர் பாலுன(து) அன்பினைக் காட்டுமோர்
.....ஆவலில் காத்து நிற்க,

பெருமிடர் மலிந்ததிவ் வாழ்வென உணர்ந்தினிப்
….பிறந்திடா வகையை நாடிப்
…..பேதையேன் இவ்விடம் பெரும!நின் கருணையைப்
……..பெற்றிட வேண்டி நிற்க,
 
மருள்தரும் வகையினில் மாபெரும் தடையென
…..மனமெனும் பகைவன் என்றன்
…...வழியினை மறைப்பதன் மருமம்ஏன்? உன்னிலும்
……...வல்லவன் இல்லை என்று

கருதிநான் இருந்ததும் கனவென ஆகுமோ?
…..காலனைச் செறுத்த கோவே!
…....கணத்தினில் விரைந்துன கழலடி சேர்த்தெனைக்
…….....காத்தலுன் கடமை அன்றோ? 


..அனந்த் 30-11-2013

Friday, November 15, 2013

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


Inline image 1


<> பிறவா வரம் அருள்வாய் <>



26-சீர் வண்ண விருத்தம்

சந்தக்குழிப்பு: தான தந்தன தானா தனாதன

தான தந்தன தானா தனாதன

தான தந்தன தானா தனாதன    தனதான

(நாத விந்துக லாதீ நமோநம – என்று தொடங்கும் திருப்புகழ்ச் சந்தம்)



வானி ழிந்திடு நீரோ டுபாதிநி லாவ ணிந்திடு நாதா மனோகர

.....மாது டன்மலை மீதே குலாவிடும்         பரமேசா

..வாரி சம்மென மாகாந் திமேவிய பாத மென்மலர் மேலே மதாணியாய்

.....வானு றைந்திடு தேவா தியோர்முடி       அணிவோனே



மானொ டும்மழு வாளோ டுமேலெழு தீயொ டுந்துடி வாகா கவேந்துமுன் 

.....வாகு வின்வலி யாலே முவாசையும்       துகளாகி

..வாத னந்தரு மாமா யையாலினி வாடி டுங்கதி வாரா மலேசெயு

.....மாத வன்புகழ் மாதே வதேவசிற்            சபைவாசா



தேனி னின்சொலி தேவா னையோடுபின் கான கந்தரு மாதோ டுமேவிய

.....தேவ ருந்தொழு சேனா பதீயெனும்        இளையோனும்

..தேடி டும்பொருள் தாயோ டுதாதையுள்  ளேயு றைந்திடு மாமே எனாமனம்

.....தேறி யன்றொரு தேமா வையேபெறு      தமையோன்போல்



நானு முன்மக வாமே எனாநினைந் தேயு னன்பையெ லாமே ழைமீதிலும்

......நாத! வந்தினி மேலே னுநீபொழிந்       ததன்மேலும்

..நானி லந்தனில் நாயேன் சதாபிறந் தேஇ றந்திட லாகா தவாறுன

.....நாம மென்னுள மேமே வநீயருள்          புரிவாயே.



(வாரிசம் (வாரிஜம்) = தாமரை; மதாணி= அணி,பதக்கம்; துடி= உடுக்கை; வாகாக= அழகாக; வாகு (பாஹு)= தோள்; வலி= வலிமை; வாதனம்= வருத்தம்; சொலி= சொல்லையுடையவள்; எனா= என; தேறி= தெளிந்து, உறுதிகொண்டு)


இணைப்பு: இசை ஒலிப்பதிவு.


பொருள் விளக்கம்: வானத்திலிருந்து இறங்கிவந்த கங்கை நதியையும், பாதிப்பிறை மதியையும் (சடையில்) சூடிடும் தலைவனே! மனத்துக்கினியவனே! உமையாளுடன் கைலை மலையில் மகிழ்ந்திருக்கும் பரம்பொருளே! உனது தாமரை போன்ற, மிகுந்த ஒளி பொருந்திய மென்மையான திருவடி மலர்மேல், வானுலகில் வசிக்கும் (உன்னை வணங்கிநிற்கும்) தேவர் முதலானவர்களின் கிரீடங்களை ஒரு அணியாகப் பூண்டவனே! மான், மழு, வாள், கொழுந்து விட்டெரியும் தீ, உடுக்கை ஆகியவற்றை அழகாக (திறமையோடு) ஏந்தும் உனது தோள்களின் பலத்தாலே என்னிடமுள்ள மண், பெண், பொன் என்னும் ஆசைகள் தூளாகும்படி நீ செய்து, இனிமேல் நான் என்னை வருத்தும் பெரும் மாயையால்  துன்புற்றுச் சோர்வடையும் நிலையடையாதபடி செய்ய வல்லவனே! பெருந்தவத்தோர் வணங்கும் தேவதேவனே! சிற்றம்பலத்தில் வசிப்பவனே!

தேனினும் இனிய சொல்லாளாகிய தேவயானையையும் காட்டில் உறையும் வள்ளியம்மையோடும் சேர்ந்து நிற்போனும், தேவர்கள் தமது சேனைத்தலைவன் எனத் தொழப்படுபவனுமாகிய உனது இளைய மகனாகிய முருகனையும், தேடற்குரிய யாவும் அன்னை தந்தையரிடமே உள்ளது என்று தன் மனத்தில் உறுதிபூண்டு முன்பொரு வேளையில் இனிக்கும் மாம்பழத்தைப் பெற்ற, முருகனுக்கு அண்ணனாகிய, விநாயகப் பெருமானையும் போல நானும் உனது மகனாவேன் என்று கருதி உன் அன்பை எல்லாம் இந்த எளியவன் மீது பொழிவாயாக. அத்தோடு, இந்தப் புவியில் நான் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும்படியான நிலை வாராமல் செய்ய உனது திருநாமம் என் மனத்துள்ளே நிலைக்கும்படியாகவும் நீ அருள்புரிவாயாக.


அனந்த் 15-11-2013

Friday, November 1, 2013

தவம்

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம்

Inline image 1
                 
<> தவம் <>

கதவம் அடைத்தேன் தனியறையில்
..கண்ணை மூடி அமர்ந்திருந்தேன்
...கையில் முத்தி ரைபிடித்தேன்
.....காற்றை உள்ளே இழுத்தெறிந்தேன்

இதயம் தன்னில் உன்நினைவை
..இறுக்கிப் பிடிக்க இவைபோல
...இன்னும் நூலில் நான்படித்த(து)
.....எல்லாம் செய்து காத்திருந்தேன்

எதுவும் என்னுள் நிகழாமல்
..இருக்கக் கண்டேன் இடிந்துநின்றேன்
...ஈசா! இனிமேல் என்செய்வேன்
.....எனநான் கதறி உருண்டழுதேன்

இதமாய் ஒருகை எனைஎழுப்பி
..இங்கே பாரென் றலும்,ஆகா!
...என்னை இழந்தேன் எல்லையிலா
.....இன்பப் புனலில் ஆழ்ந்தனனே!

.அனந்த் 1-11-2013

(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். முன் அரையடி: புளிமா மா காய் மா மா காய்

பின் அரையடி: மா மா காய் மா மா காய்)

படம்:  ஹாமில்டன் (Hamilton) கோவிலில் சிவபெருமான் - நடராஜர் அலங்காரம்)

Wednesday, October 16, 2013

இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
Inline image 1
<> இடம் தந்த காரணம் <>  
 
அன்னை உமைக்குன் இடப்பாகம்
..அளிக்கத் தூண்டிய காரணத்தை
…..அடியேன் அறிவேன் அன்றொருநாள்
…....அவையோர் முன்பு நாட்டியத்தில்
தன்னை விஞ்சும் தகைமையளாய்த்
..தையல் இருந்த துணர்ந்துன்றன்
…..தாளைத் தலைமேல் தூக்கிநின்ற
…....சதியை அறிந்தும் பின்னொருநாள் 
இன்னல் விளைக்கும் நஞ்சுண்ண
…ஈசன் நீயும் துணிகையிலே
…..இல்லாள் அவளுன் உடலுள்விடம்
…....இறங்கா வண்ணம் காத்ததன்பின்
இன்னும் இதுபோல் சங்கடங்கள்
..எழுங்கால் எல்லாம் தீர்த்துவைக்க
…..என்றும் அகலா துன்னிடத்தில்
…....இருத்தி வைத்தாய் அன்னையையே!
  
.. அனந்த் 16-10-2013
படம்:  திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட “நடராசப் பெருமான்” நூலிலிருந்து , நன்றியுடன். படத்தை வரைந்தவர் பேர்பெற்ற சிற்பியான திரு. கணபதி ஸ்தபதி என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க.)

Wednesday, October 2, 2013

வழி காட்டும் வண்மை

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 Inline image 1

<> வழிகாட்டும் வண்மை <>

மறைகளும் உபநிட தங்களும் மானிடர்
.... மனத்தினால் உன்ன வொண்ணா
..  வத்துவாய் விளங்கிடும் சித்துநீ என்றுனை 
…. வருணனை செய்வ தாலே

அறியவே இயன்றிடான் இவனென எம்மனோர்
.. அடைந்திட முயற்சி செய்யா(து)
... அழிந்திடல் தவிர்த்திட ஐய!நின் திருவுளத்(து)
..... அளவிலா அன்பி னாலே

எறிதிரை உலகெலாம் இயக்கிடும் ஈசன்நீ
என்பதைக் காட்டும் வண்ணம்
…. ஏந்துவாய் கைகளில் இரைபறை ஒன்றையும்
….. எரியழல் இவற்றினோடு  

மறியொரு கரத்திலும் மற்றொரு கரத்திலே
வரம்தரும் சின்ன மேந்தி
வருபவர்க்(கு) உன்பதம் வழியெனக் காட்டுமுன்
வண்மையை வழுத்து வேனே.
 
.. அனந்த் 2-10-2013



பொருள் விளக்கம்: 

மனிதரின் அறிவிற்கெட்டாத பரம்பொருளாவான் சிவபெருமான் என வேதங்கள் கூறுவதைக் கேட்டு, என்போன்றோர் அவனை அறியவும் அடையவும் முயலாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட அப்பெருமான், நடராசத் திருவுருவம் தாங்கி நம் கண் முன்னே காட்சி தந்துள்ளான். அவ்வடிவில், அவன் கைகளில் தாங்கியுள்ள உடுக்கை, தீ போன்றவற்றால், தான் நம் கண்முன் தெரியும் உலகை (படைத்தல், காத்தல் அழித்தல்  தொழில்கள் மூலம்) இயக்குபவன் ஆவான் என்று தெளிவுறுத்துவான். அவ்வாறு அவனை அறிவதற்குத் தன் திருவடிகளைப் பற்றுவதே எளிய வழி என்றும் ஒரு கையினால்  (வலப்புறம் உள்ள அபயகரத்தால்) அவன் நமக்குக் காட்டுகிறான்.

குறிப்புரை:

எல்லாம் கடந்தவன் (நிர்க்குணப் பிரமம்) என்று கூறப்படும் கடவுளே பிரபஞ்சங்களாயும் அவற்றில் உள்ள தாவர ஜங்கமப் பொருள்களாகவும் விளங்குகிறான். இப்படி அவனைப் புரிந்துகொள்ள ஏதுவாகத் தானே ஒரு வடிவம் கொண்டு (ஸகுணப்ரம்மம்) நமக்குக் காட்சி தருகிறான். அவ்வடிவை வழிபடுவதன் வழியாக நாம் நிர்க்குணப் பிரமத்தை அறிந்து பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம்.   

 

Tuesday, September 17, 2013

கூளம் மறைந்தது


திருச்சிற்றம்பலம் 
  Inline image 1

<> கூளம் மறைந்தது <>

உடலம் இதனை விடமலங்கள்
.. உறையும் எனது மனத்தினையுன்

இடமாய் உகந்தாய் இறைவாநான்
.. ஏனென் றறியும் முனமதனில்

நடனம் புரியத் தொடங்கிவிட்டாய்
.. நானும் அதுகண் டுகுத்தகண்ணீர்

குடமாய்க் கொட்ட அதிலென்றன்
.. கூளம் கரைந்து மறைந்ததுவே

அனந்த் 17-9-2013

==============
உடலினிலும் மலமலிந்த உளம்தேர்ந்த உமையரசன்
நடமிடும னந்துலக்க நயனத்தில் நீரெடுத்தான்
உடலுறுப்பும் உயிருளமும் உறுமுறவை உணர்த்திவிட்டான்
சடமெனநாம் சபிக்குமுடல் சர்வேசன் தந்ததன்றோ!

நல்வாழ்த்துக்களுடன்
கோபால்.

Monday, September 2, 2013

நிலையான பொருள்


திருச்சிற்றம்பலம்
 
Inline image 1

                    <> நிலையான பொருள் <>

(14-சீர் ஆசிரிய விருத்தம்: அரையடி- கருவிளம் காய் விளம் காய் விளம் மா தேமா) 


முதுபெரும் பொருளாக முற்றிலும் புதிதாக மூலபண் டார மாக
..முதல்நடு முடிவேதும் இலாதஓர் முழுதாக மோனஓங் கார மாக


எதுஎவண் நிகழ்ந்தாலும் எங்ஙனம் நடந்தாலும் இயற்கையாய் அவற்றை எல்லாம்
..இயக்கிடும் விதியாக எதிர்வினைப் பயனாக இலங்கிஓர் வரைய றைக்குள்


அதுவென இதுவாமென் றியம்பிட இயலாமல் அனைத்துமே ஆகி ஆங்கே
..அணுவிலும் அணுவாக அண்டபே ரண்டங்கள் யாவினும் மேல தாகப்


பொதுவினில் நிலையான பொருளிதே எனுமாறு பூம்பதம் தாங்கி ஆடும்
..புகலரும் பரஞான பூரணா! எனையாளும் புண்ணியா! எனது வாழ்வே!




.. அனந்த் 2-9-2013
இணைப்பு: இசை ஒலிப்பதிவு