Friday, December 19, 2014

கருணை மழை

திருச்சிற்றம்பலம் 



<> கருணை மழை <>

பாளம் பலவாய்ச் சிதறுண்ட
..
பாவி யேனின் மனப்புனத்தில்

காள மேக மாய்த்தோன்றி
..
கருணை மாரி பொழிந்துயிரின்

நாளம் வழியே பாயவைத்து
..
நட்டான் பக்திப் பயிரையங்குத்

தாளத் தோடு தில்லையில்பொற்
..
சபையில் ஆடும் எனதிறையே!

 (மனப் புனம் = உள்ளமென்னும் வயல்; காளமேகம் = கறுத்த(கார்) மேகம்; நாளம் = குழாய்)

.. அனந்த் 19-12-2014  

Thursday, December 4, 2014

யாரே நம்புவார் ?


திருச்சிற்றம்பலம்
 


<> யாரே நம்புவார் ? <> 

மேனியோர் மரக தக்கல் மேவிய பவளக் குன்று*
.. மிடற்றிலே நீலக் கண்டி மாணிக்கச் செவ்வி தழ்கள் 
வானமீன் போல மின்னும் வைரப்பல் வரிசை வானோர்
.. வணங்கிடும் அடிகள் பொன்னாம் வாய்த்தஇச் செல்வத் தோடே
ஊன்நிறை ஓட்டை ஏந்தி ஊரெலாம் ஊணுக் காக
.. உலவிடும் ஈச! இந்த உலகுளோர் ஏழை என்றே
ஏனுமை நம்பு வார்என்று எண்ணினீர் அறியேன் நீவிர்
.. எவ்வகை தோன்றி னாலும் ஏகும்என் மனம்உம் பாலே!
 
(*இது பச்சை வண்ண உமையம்மையுடன் இணைந்த செம்மேனிப் பெம்மான் உருவைக் குறிப்பது; கண்டி = கழுத்தணி)
.. அனந்த் 4-12-2014

Wednesday, November 19, 2014

சிற்றம்பலப் பழம்

<> சிற்றம்பலப் பழம் <>



திருச்சிற்றம்பலம்
 
கற்றைச் சடையா!  கனலார் நிறத்தா!
…காதார் குழையழகா!
……கடிமா மலர்பூண் உமையாள் பாகா!
………கணங்கட் கோர்தலைவா!

ஒற்றைத் தனியாய் உருவில் பலவாய்
…உலவும் முழுமுதல்வா!
……ஊனாய் ஊனுள் உயிராய் உறையும்
……….ஒருவா! மாலயனும்

முற்றும் அறியாப் பரமா! முன்னம்
….முனிவர் முன்னிலையில்
……மோனம் பயின்ற குரவா! மறையின்
………முடிவே! தாளிணையைப்

பற்றிப் பிடித்த அடியார்க் கருளும்
…. பரிவே! சிறந்தபெரும்
பற்றப் புலியூர்ச் சிற்றம்பலத்துப்
…. பழமே! பேரருளே!

(பழமே = பழமையானவனே)


அனந்த் 19-11-2014

Tuesday, November 4, 2014

இது தருணம்


திருச்சிற்றம்பலம்


           
                      <> இது தருணம் <>

(பன்னிருசீர் விருத்தம்; சந்தம்: தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தானா தானானா)


கனகமென ஒளியுமிழும் கலுழன்மிசை உலவிவரு மாயோன் சேயோடு
... ககனவெளி தனில்வதியு மமரர்களுங் கயிலைமலை வாயில் சேராநின்(று)

அனவரதம் அரனுனது அடிநிழலில் புகழ்பரவு வேளை நாயேனிங்(கு)
... அழுவிழியுந் தொழுகரமும் அகமுழுதும் உனநினைவும் மேவ நீயோர்நாள்

எனையுமுன தடியவரில் கடைநிலையன் எனும்நினைவில் வாழ்வோன் ஆவானென்(று) 
..இறையுனது மனமதனில் கருதியொரு கணமுனது சேவை தாராயோ?


தனதுகழல் நினையடியர் தமதுதுயர் களைதலைவன் நீயே ஆமென்று
... சகமுணருந் தருணமிது சடிதிஎன முனம்விரைந்து காவாய் தேவேசா

(கலுழன்= கருடன்; ககனம்=ஆகாயம்; வதியும்=வசிக்கும்; சேராநின்று=சேர்ந்து; அனவரதம்=எப்போதும்; உன= உனது; கடைநிலையன்=புறவாயிலில் இருப்பவன்; சேவை=தரிசனம்; சடிதி= விரைவில்; என = எனது)

.. அனந்த் 4-11-2014

Tuesday, October 21, 2014

பிணிக்கு மருந்து

இன்று பிரதோஷ நன்னாள். 
 
திருச்சிற்றம்பலம் 




<> பிணிக்கு மருந்து <>

(பதினான்கு சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: புளிமாங்காய், மா, காய், மா, காய், மா, புளிமா)

நிலையாத இந்த நெடுமேனி தன்னை நிலையாக்க எண்ணி மனிதர்
.. நிரையாக நித்தம்  அலைபோலத் தம்முள்  வருநோயை நீக்கு விதமாய்க்

கலையாவும் பேணிக் கணந்தோறும் நூறு வகையான பேர்கொள் மருந்தைக் 
.. கடிதாகக் கொண்டு வருவார்உ டம்பு குணமான பின்னும் மனத்தின் 

அலைபாயும் தன்மை  தொலையாமல் தொல்லை உறு(ம்)வேளை எந்த வகையில்
.. அதைநீக்கு வோமென்(று) அறியாமல் வாடி அழியாதி ருக்கக் கயிலை

மலைமீது ஞான மருந்தாய்இ லங்கும் மாதேவன் தாளை நினைக்கில்
.. மறுசன்ம மென்னும் பிணிநீங்கி  என்றும் மறையாத இன்பம் றுமே.

... அனந்த்
21-10-2014

Monday, October 6, 2014

மேலும் ஒரு பணி

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
 

<> மேலும் ஒரு பணி <>


முத்தொழி லோடு மேலிரு செயல்புரி

... முக்கணா! இனிஇவ் விடத்தில்


சொத்தையாம் உடலில் தொற்றிய நோயொடு

... சொல்லவும் கூசும் படியாய்


அத்தனைக் கொடிய நினைவுகள் மலிந்துள

... அகத்தொடும் திரியும் எனையுன்


பத்தனாய் மாற்றும் பணியையும் கருதிஉம்

... பட்டியல் தனில்சேர்த் திடுமே.

(மேலிரு தொழில்கள் – படைத்தல், காத்தல், அழைத்தல் என்னும் மூன்று தொழில்களோடு, மறைத்தல், அருளல் என்பனவும் சேர்ந்த பஞ்சகிருத்தியங்களைச் சிவபெருமான் செய்வதைக் குறிப்பது.  சொத்தை= சீர்கேடு, ஊனம். எழுசீர் விருத்தம்: கூவிளம், மா, விளம், விளம், விளம், மா, புளிமா)

.அனந்த்  
6-10-2014

Sunday, September 21, 2014

நீயும் நானும்


இன்று பிரதோஷ நன்னாள்


திருச்சிற்றம்பலம்


<> நீயும் நானும் <>


நரையுடை யேன்நான் நீயோ

... நரைவெண் விடையுடையாய் 



திரையுடை யேன்நான் நீயோ

...திரைபாய்   புனலுடையாய்



வரையுடை யேன்நான் நீயோ

...வரையில் உறைவுடையாய்



நிரைநிரை யாய்நான் நின்றன்

...நேரென் றுரைத்திடுமே!



(திரை = தோல் சுருக்கம், அலை; வரை= அளவு, மலை; ; நிரை=வரிசை)    



அனந்த் 21-9-2014

---------------------------

கீழே காணும் பாடல்கள் நான் அண்மையில் இதய சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்தபோது மனத்தில் எழுந்தவை:

                     <> விந்தை புரிந்தாய்! <>

           தில்லைத் தலத்தினைக் கண்டவ னைஇன்று 
           தில்லியம்* தன்னையும் காணவைத்தாய் - உன்றன்
           எல்லைஇல் லாத கருணையி னாலங்(கு) 
           இருந்திட்ட காலம்கு றைத்துவைத்தாய்!

           கல்லைக் கனியாக்கும் விந்தையி னைஇந்தப்
           புல்லியன் கண்முன்நி கழ்த்திவைத்தாய் – யாரும்
           ஒல்ல இயலாதவோர் காரியத் தைநீயோ
           ஒல்லை புரிந்தென்னைக் காத்துவிட்டாய்!

           தொல்லை இனியெனக் கேதுமில் லைஆயின்
           தொல்லை உனக்குண்(டு)அ(து) என்னவென்றால் - நான்
           அல்லும் பகலும்என் நெஞ்சத்தி லேஉன்னை
           அடைத்துவைத் தேயங்கே ஆடவைப்பேன்!
    
(*தில்லியம் = ட்ரில்லியம் (Trillium) என்ற பெயர்கொண்ட டொராண்டோ மருத்துவ மனை; ஒல்லுதல் = ஆற்றுதல், இயலுதல்; ஒல்லை = விரைவு, காலந்தாழ்த்தாமை).
                   -------------------------------------------------

                  <> இதயநலம் காப்பாய் <>


        பதுமத்தில் அமர்ந்திருந்து படைத்திடுவான் வாணிபதி

        மெதுஅரவின் மேலுறங்கிக் காத்திடுவான் பூமகளோன்

        இதுமாந்தர் கண்(டு)இயங்கா(து) இராவண்ணம் களிநடனம்

        பொதுநடுவில் ஆடிஎன்றும் புரப்பைஎம(து) இதயநலம்!

        (புரப்பை  = புரப்பாய், காத்திடுவாய்; இதயநலம் = cardiac health) 
           

Saturday, September 6, 2014

இதயத்துள் இருப்போன்

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


​ 
<> இதயத்துள் இருப்போன் <>


இதயத் துள்ளே இருந்ததனை
.. இயக்கும் கூத்தா! உன்மகிமைக்  

கதையை அன்றி வேறெதுவும்
.. கருதா வண்ணம் அதனைக்காத்(து) 

உதயத் தெழுமோர் கதிரவனாய்
.. உன்றன் ஒளியால் விளக்கிஅதை   

எதையும் தாங்கும் திறம்படைத்தே  
.. இருக்கத் துணைசெய் தருளுவையே!

அனந்த் 
6-9-2014

Friday, August 22, 2014

என் மகிழ்ச்சி


திருச்சிற்றம்பலம்





<> என் மகிழ்ச்சி <>

மலையு முண்டு பனியு முண்டு மங்கை உடலில் பாதி உண்டு
... மகிமை வாய்ந்த மைந்தர் உண்டொர்   அணியாகக்

கலைகு றைந்த மதியு முண்டு கங்கை தலையில் அலைவ துண்டு  
.. கணங்கள் உண்டு படையு முண்டிங்(கு)  இவையோடு      

தலைகள் ஐந்து தாமு முண்டு தாவி ஏற விடையு முண்டு
.. சததம் ஆடச்  சதிரு முண்(டு)இவ்    விதமான

நிலையில் இந்த நீசன் பாலும் நேச முண்டி வர்க்(கு)என் றெண்ணி   
.. நிதமும் அந்த நினைவில் நீந்தி         மகிழ்வேனே.

(சததம்= எப்பொழுதும்; சதிர் = நாட்டிய சபை; பதின்மூன்று சீர் ஆசிரிய விருத்தம், வாய்பாடு: 1, 9 சீர்கள் புளிமா, மற்றவை மாச்சீர், இறுதிச்சீர் புளிமாங்காய்; )

அனந்த் 22-8-2014

Friday, August 8, 2014

நாடி வந்தேன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 





                          <> நாடி வந்தேன் <>

ஆசையொடு கோபமும் அகந்தையும் மோகமும் ஆனதோர் அசுரர் கூட்டம்
.. அறிவெனும் தீயிடை அழிவெனும் சிதையிலே எரிந்துவெண் சாம்ப ராகி

நாசமுறு வண்ணமாய் நாத!நின் நாமமென் நாவிலே நிலைக்க அருள்வாய்
.. நாதமாய் விந்துவாய் நாடுபல் உருவமாய் நானிலம் விண்ணு மாகி

ஈசனென இலங்குமுன் ஏற்றமிவ் வேழையேன் அறிகிலேன் ஆயி னும்நீ
.. எளியனாய் நின்னடி ஏத்துவோர்க்(கு) இரங்கிடும் இயல்பினன் என்று போற்றும்

நேசர்பலர் சொல்லைநான் நிசமென நம்பிநின் நீள்கழல் நாடி வந்தேன்
.. நிலவொடு தண்புனல் நிலவிடும் சடைய!பொன் அம்பலத் தாடு வோனே.  
    
..அனந்த்  8-8-2014
(பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
வாய்பாடு: கூவிளங்காய் விளம் விளம் விளம் விளம் மா மா
விளம் விளம் விளம் விளம் விளம் மா மா)