இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பரதேசி <>
நானோர் பரதேசி – பல
.. நாடெல்லாம் சுற்றியென்
நாட்களைப் போக்கும் (நானோர்)
ஏனோ கவலையில்லை – என்றன்
.. ஈசனும் என்னைப்போல்
ஊர்சுற்றி ஆவான்
தானொரு மாடேறித் – தன்
.. தாரம் மனையைத் துறந்து
திரிவான்
ஊனார் தலையோட்டில் – தன்
.. ஊணைப் பலர்இல் இரந்து
புசிப்பான்
கானொரு மேடையென்று – தன்
.. காலொன்றைத் தூக்கி நடனமும்
செய்வான்
மானோர் கரமேந்தி – அந்த
.. வாகில் அடியாரைத்
தன்வசம் ஈர்ப்பான்
வானோர் அதைக்காணத் – தலை
.. வாசலின் முன்வந்து
காத்துக் கிடப்பார்
கோனாய்ப் பொதுவெளியில் – ஒரு
.. கூத்தாடி ஏராளம் கூட்டத்தைச்
சேர்ப்பான்
மோனம் பயின்றவண்ணம் – தவ
.. முனிவர்க்குச்
சாடையில் ஏதோ மொழிவான்
நானுமிங்(கு) ஆங்கவன்போல் – ஒரு
.. நாடக மேடை உலகெனக் கொண்டு
வான்தீ வளிநீரும் - மண்ணும்
.. வார்க்கும் பலவான
மாற்றங்கள் ஊடே
நானார் எனஅறியும் – அந்த
.. ஞானத்தை ஈய அவனருள் வேண்டிச்
சோணா சலத்தினிலே – என்றும்
.. சும்மா இருந்தென்றன் காலங் கழிப்பேன் (நானோர்..)
.. சும்மா இருந்தென்றன் காலங் கழிப்பேன் (நானோர்..)
.. அனந்த் 14-1-2018 (பிரதோஷம், திருவண்ணாமலை)
No comments:
Post a Comment