Wednesday, November 27, 2024

 இன்று பிரதோஷ நன்னாள். 


திருச்சிற்றம்பலம் 

                          <> நெஞ்சில் பதியாயோ? <> 

   


      இடக்கால் தூக்கிப் பொற்சபையில் 
     .. எழிலோ டாடுங் கால்வலக்கால் 

      முடக்கு நோயார் முயலகன்மேல் 
     .. மீளா வண்ணம் வைத்தவனை 

      மடக்கி நின்ற இறைவா!பின் 
      .. மதுரை  மன்றில் கால்மாற்றி 

      நடத்தைத் தொடங்கும் இடைவெளியில் 
      .. நாயேன் நெஞ்சுள் பதியாயோ?

 (ஆடுங்கால் -> ஆடும்போது; நோயார் -> நோய் ஆர், நோயுற்ற; மடக்கல் = அடக்கல், தடுத்தல், ஒடுக்கல்; பதித்தல் = அழுத்தி வைத்தல்.)

                                .. அனந்த் 28-11-2024 

Tuesday, November 12, 2024

 

திருச்சிற்றம்பலம்

 

        <> ந்தையில் ஆடும் சிவன் <>

      


 

சத்தமிகு சந்தையிலே ஆடிநிற்கும் ஐயாநீ

 

நித்தமும் ஆடும் நியதியைப்பேய் - கத்துகின்ற

 

வெங்காட்டில் காட்டிப்பின்  விண்விஞ்சும் தில்லையாம்

 

அங்காடிக் காட்டிடுவாய் ஆர்த்து. 

{சந்தை= சத்தம் = ஒலிஏழு (சப்தம்)வேத ஒலிகளையும்,அவற்றில் உள்ள ஏழுவகைச் சந்தத்தையும் குறிக்கும் (காயத்ரிஉஷ்ணிக்அனுஷ்டுப்ப்ருகதிபங்க்தித்ருஷ்டுப்ஜகதி)  musical flow, rhythmic movement of verse; 2. vedic prosody; 3. the veda; 4. stanza; verse. சந்தை = (கழக அகராதி: கடைவீதிவேதம் ஓதும் இடம்; அடியார்கள் எழுப்பும் ஓசை நிரம்பிய பொன்னம்பலத்தையும் குறிப்பதாகக் கொள்ளலாம்)வெங்காடு = வெம்காடுசுடுகாடுஅங்காடி = அங்குடி; ஆர்த்து = ஒலி எழுப்பிக்கொண்டு

 

                                                         ....... அனந்த் 12/13-11-2024

அவன் கருணை


இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 


<> அவன் கருணை <>


ஆதி யோகி.jpg


பாரோர் இகழும் புழுவொன்று

… பரமன் உறையும் பனிமலைமேல்


ஏற முயன்று முடியாமல்

.. இளைத்துக் களைத்து விழுந்தருணம்


கூற வியலாக் கருணையுடன்

… குருவின் கரங்கள் தாங்கிரணம்


ஆறச் செய்து சிகரத்தில்

.. அமர்த்தி வைத்த அருளென்னே!


..அனந்த் 28-10-2024


Monday, October 14, 2024

 இன்று பிரதோஷ நன்னாள்.

                                                                <> கறுப்புப் பணக்காரன் <>


                                                          



                                        காசுபண மில்லான்போல் கையில் தலையோட்டைக்

                                       கூசாமல் ஊரார்முன் கொண்டிரக்கும் - ஈசன்

                                      கரும்பணத்தைக் கச்சையிலே கட்டியுள்ளான் என்றிங்(கு)

                                       ஒருவருங்கா ணாததே னோ?     

(பணம் = காசு, பாம்பு; கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க- திருவாசகம், திருவண்டப் பகுதி)

                                                                                                                       15-10-2024                                            


Saturday, September 28, 2024

  இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                                   <> வந்திப்பேனே <>



                       


  தத்தித்தா மென்னத்தான் தாளந்தான் சேர்த்துத்தான் ஆடுங் காலை

சத்தித்தான் சாடித்தான் பார்த்துப்பின் தோற்றுத்தான் போக வைத்தோய்! 

பத்தித்தான் நித்தந்தான் பண்ணித்தான் மண்ணில்தான் பாவி யேனும்

முத்தித்தான் கிட்டத்தான் முந்தித்தான் உன்னைத்தான் வந்திப்பேனே!


.... அனந்த் 29-9-2024

 

Sunday, September 15, 2024

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 



பன்னலமும் வாய்ந்துதிகழ் மெய்யடியார்

… பலரிருக்கப் பிழைமலிந்த   

புன்மதியேன் தன்னையுமோர் பொருளாக்கிப்

புவிவாழ்வின் நிலையில்லாத்

தன்மையையான் உணரவைத்துத் தலைவநின்றன்

தாளிணைக்கீழ் நிற்கவைத்தாய்

அன்னையினும் மேலானோய் அம்பலத்தில்

அடியவர்முன் ஆடுமையே.

 

…… அனந்த் 15-9-2024 

               

Friday, August 30, 2024

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                                                           திருச்சிற்றம்பலம்
                                                         

 

உண்டுடுத் துறங்கி உலகினில் உழன்றிங்(கு)

.. ஒடுங்கவோ நாயினேன் பிறந்தேன்?

 

கண்டதே மெய்யாய்க் கருதிவாழ்ந் தலந்தேன்

.. யவர்தம் கூட்டிலே உழன்றேன்

 

பண்டுநாள் என்போல் பாவியர் தமக்குப்

.. பரிந்துநீ அருளிய தறிந்தேன்

 

தண்டனிட் டின்றுன் தாளினில் விழுந்தேன்

.. தள்ளிடின் உயிர்தரிக் கிலனே.


(அலந்தேன் = வருந்தினேன்.)


                                                …… அனந்த் 30/31-8-2024

 

 




Friday, August 16, 2024

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

 திருச்சிற்றம்பலம் 


          

அழியும் உடலம் இதனைக்கொண்(டு)
 ... அழியாப் பரமாம் உனையடைய 

 விழையும் கடையேன் எனையேற்க 
 ... விரும்பா திருந்தால் உனைப்பழியேன் 

இழியும் புனலை இளமதியை
 ... இண்டைச் சடையில் இருத்திவைத்த 

எழிலார் இறைவா எளியேற்கோர் 
... இடமுன் அடிக்கீழ் ஈயாயோ?

                                                             .... அனந்த் 17-8-2024

Wednesday, July 31, 2024

இன்று பிரதோஷ நன்னாள். 

                                                                திருச்சிற்றம்பலம் 

                                     <> விந்தை புரிவாய் <>


கல்லேன்யான் ஆயினும்பொய் சொல்லேன் உனைவழுத்த 

வல்லேன்யான் அல்லேன்உன் அடியிணைக்கீழ் வந்துநின்றேன்

*கல்லானை தனையன்று கரும்புண்ணச் செய்தோயிப்

பொல்லேனின் பிழைபொறுத்துன் அடியாருள் புகுத்துவையே.

(*இது ஆலவாய் நகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களில் ஒன்று.)

                                     ********

                            

                        






 




கையாலா காதஇக் கடையேனுன் திருப்பாதம்

கையாலே பற்றினேன் காவாயோ வந்தென்னை?

கையாலே அருள்காட்டிக் கனகசபை தனிலாடும்

ஐயாநீ ஆளாயேல் ஆருள்ளார் புகல்வாயே.



.... அனந்த் 31-7-2024/ 1-8-2024





Thursday, July 18, 2024

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

             <> சேவகம் அருள்வாய் <>



ஏவிய கணையை யொத்தென் இருவினைப் பயன்கள் என்னை

மேவியென் நடப்பின் போக்கை விதித்திடுங் காலை உன்னைக்

கூவிநான் அழைத்தென் கையைக் குவித்துனைப் போற்றிப் பாடுஞ்

சேவகம் அருளாய் எற்குத் தில்லைதே வாதி தேவே.   

(கூவிளம் புளிமா தேமா கருவிளம் புளிமா தேமா; விதித்தல் = உண்டாக்கல், நியமித்தல்,.. ) 

                      *****************

               <> வீடடையும் வழி <>




உதைபந்து போல உலகிலடி பட்டு

வதையுற்று வாடிய வேளை - சிதைமலிந்த

காடதனில் ஆடிடும் காலடியைச் சுட்டினான்          

வீடடையும் மார்க்கமீ தென்று.

                        *****************

                                                                                 ... அனந்த்  18/19-7-2024

                                          

Tuesday, July 2, 2024

விளக்கிடுவாய்


 திருச்சிற்றம்பலம்

 <> விளக்கிடுவாய் <>





                                                                      
எவ்விடம் ஆயினும்  எப்பொழு தாயினும் இலங்குமோர்  பரமுன் னையோர்
.. எல்லையுள் இருத்தியுன் இயல்பிதே ஆமென இயம்பிடல் தவறே னும்யான்

வெவ்வகை யாகஉன் வடிவினை ஐயநீ விரும்பிடும் அடியர் பலரும்
.. விரித்துன துருவினை விளம்பிடக் கேட்டுளேன் மேலும்நீ  ஆங்க வற்றுள்

இவ்விடத் துள்ளனன் காணுவீர் என்றொரு தலத்தையோ அன்றி அருகில்
... எழில்திகழ் சிலையையோ என்முனம் இருத்துவர் என்மனம் அதையும் ஏற்கும்

வெவ்விடம் தன்னையுன் மிடற்றினில் அடக்கியோய் வெகுளியென் மயக்கை நீக்க
... விரைவிலென் அகத்துளே விளங்கியுன்  சால்பினை விளக்கிட வேண்டு வேனே.

 

 

                           ….. அனந்த் 2-7-2024