Monday, December 19, 2022

திருச்சிற்றம்பலம்


                       <> வரையத் தரமோ? <>


         


 உறவைக் காட்டி உலகைக் காட்டி

.. உளவாய்த் தெரியும் பொருள்கள் காட்டிப்

பிறந்த நாள்தொட் டிந்நாள் வரைஇப்

... பார்மேல் பற்றைப் பலவாய் வளர்த்தே

இறையுன் இருப்பை இறைப்போ தேனும்

.. எண்ணா திருந்த எளியேன் எனைநீ

மறவா துன்பால் வலிய ஈர்த்த

.. வரையில் அருளை வரையத் தரமோ? 

(இறைப் போதும் - ஒரு கண நேரமும்; வரையில் = வரம்பில்லாத


அனந்த் 20-12-2022

Sunday, December 4, 2022

 

திருச்சிற்றம்பலம்

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள். 

                                  <>  பூரணன்  <>

                 திருச்சிற்றம்பலம்


                   


 

குங்கும நிறத்தான் குழையணி செவியான்


.. குறைமதி புனைந்தான் காணுமிடம்

 


எங்குமி ருப்பான் எனதுளம் புகுந்தே


.. எனையழித் தமர்ந்தான் எண்ணரிய

 


கங்குலும் பகலும் கடந்திடின் என்னே


… கணக்கிட இங்கே யாருளர்காண்

 


அங்குமிங் கெங்கும் அனனிய மாக


… ஆனபின் அனைத்தும் பூரணமே.


 

(அனனியமாக = இரண்டற்றவாறு)



 
அனந்த் 5-12-2022

 


Sunday, November 20, 2022

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.


                                          திருச்சிற்றம்பலம்

                                    <> ஒன்ற வைப்பாய் <>

Chidhambara_Natarajar.jpg      Arunachalam+ Bhagavan edited.jpg

கண்டஅக் கணத்திலுன் கவின்மிகு நடத்தினில்
... கனிந்துன வசத்தில் வீழ்ந்து
....... கைதலை மேலதாய்க் கண்கள்நீர் சொரியநின்
............கருணையைப் புகழ்ந்து பாடும்

தொண்டர்தம் தொண்டரின் தொண்டரின் தொண்டரைத்
... தொழுதிட ஆசை கொண்டேன்
.. தோத்திரம் செய்திடத் தெரிந்திலேன் எனினுமுள்
....... தோன்றிடும் சொற்கள் ஏற்று

விண்டவர் கண்டிலா விந்தையாய் ஓங்கிடும்
… விசித்திர அருணை மேவி
........வெளியினில் காணுமிவ் வுலகிதன் மாயையை
............ விடுத்துளே ஏக மாகக்

கண்டதோர் ஞானிமுன் கழறிய மெய்யினைக்
... கடையனும் அறிய வைத்துக்
..... கனகமா அவையினில் ககனமாய்த் தோன்றிடும்
.........காட்சியில் ஒன்ற வைப்பாய்.  

(கனிந்துன = கனிந்துன் (உன, உன் இரண்டும் ஒரேபொருள் கொண்டவை.); ககனம் = ஆகாசம், இங்கு, சிதம்பர இரகசியம் என்னும் சிதாகாச வெளி.); விண்டவர் = விரித்துச் சொல்பவர். அருணை மேவி.... கண்டிடும் ஞானியர்= இது, தமது சிறுவயதில் திருவண்ணாமலையை அடைந்து ஞானநிலையில் அமர்ந்த பகவான் ஸ்ரீரமண மஹர்ஷியைக் குறிப்பது. கழறிய = கூறிய; கனகமா அவை = பொன்னம்பலப் பேரவை, கனகசபை.)
 
அனந்த் 20-11-2022

Friday, November 4, 2022

இது போதும்

 திருச்சிற்றம்பலம்


    <> இது போதும் <>

     natana sundhara moorthi.jpg

எண்ணம் அழிந்தபின் எஞ்சியென் உளத்துள்
,,இலங்கும் உணர்வுநீ என்றுரைப்பார்

திண்ணம் அதுதிருத் தில்லையில் வெளியாய்த்
.. தெரியும் பரமெனச் செப்பிடுவார்

வண்ணம் பொலியுமிவ் வானமும் புவியும்
.. வந்த விதம்நடம் காட்டுமென்பார்

கண்ணா எனக்குநின் காலிணை எழிலைக்
.. கண்டு களித்தலே போதுமய்யே!



                     🌸🌺🌸 


    Sri Nataraja - 2020.jpg

கண்முன் தெரியுமுன் காட்சியின் மாட்சியைக்
... கண்டவர் விண்டிலர் என்றிடுவார்

பண்ணோ டிசைக்குமுன் பத்தரின் பாட்டிலுன்
.. பதத்தெழும் சிலம்பொலி கேட்பவரின்

உண்ணின்(று) உலகையும் தாண்டிநின் றோங்கிடும்
.. உண்மையை அன்னவர் அறிந்திலரே

நண்ணும் மெய்யடி யார்குழு தன்னிலே
.. நானுமி ணைந்திடச் செய்குவையே  

(உண்ணின்று = உள் நின்று)


அனந்த் 5-11-2022  சனிப்பிரதோஷம்

Saturday, October 22, 2022

 திருச்சிற்றம்பலம்


                    <> அன்னை அருள் <>


   Chidhambara Natarajar- Sivakami .jpg


மன்றில் நடம்புரியும் மாமணியே நின்னன்பர்

..மன்னி உன்னருளை வேண்டிநிற்கும் வேளையிலே

ஒன்றும் அறியேனை என்னருகே வாவெனநீ  

.. உந்திக் கொணர்ந்தனைவல் லூழின் பிடிசிக்கிக்

கன்றி வாடிநிற்கும் கடையேன்யான் எனக்குன்றன்

.. கருணை மழைபொழியக் காரணந்தான் என்னேயோ

ஒன்றாய் இரண்டின்றி உன்னுடனே உறைந்திந்த

.. உலகைப் புரந்தருளும் உமையாளின் செயலிதுவே.


                                     🌸🌺🌸 

  

                     <> காட்டுத் தீ <>


      Sri Natarajar- அழகுமயம்.jpg


வரம்பில்லாக் காட்டுத்தீ யொத்தஎன தகத்தினிலே

பரந்தெரியும் வல்லகந்தைப் பேரனலை நின்விழியில்

சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக்

கரங்குவித்து வேண்டிநின்றேன் காத்திடுவாய் எம்மானே


... அனந்த் 21-10-2022 

Friday, October 7, 2022

என்றடைவேன்?

 திருச்சிற்றம்பலம் 



                <> என்றடைவேன்? <>


    

   IMG_0453.JPG


கண்முன் தெரியும் உலகில் காலம்


... கடிதே விரைதல் தெரிகிறது



எண்ணச் சுமையும் இரவும் பகலும்


... ஏறிக் கொண்டே செல்கிறது



உண்ணும் போதும் உறங்கும் போதும்


... உள்ளே நான்,நான் எனுமுணர்வு



எண்ணந் தாண்டி இருப்பாய் ஒளிரும்


.... எழிலில் அமைதி  என்றடைவேன்?

 

                          🌸🌺🌸 



         <> ஆலும் அடியும் <>



         16d6c355-6906-48a8-8e5e-c5502ee302d9.jpg


கல்லாலடிக் கீழமர் தேவ!முன் னாளினில்நீ


கல்லாலடி பெற்றதன் காரணம் ஏதறியேன்


கல்லாவொரு ஏழைஉன் காலினைச் சார்ந்தமைக்கும்


இல்லேனொரு காரணம் இயம்பிட என்னரசே


                     🌸🌺🌸 


அனந்த் 7-10-2022


Thursday, September 22, 2022

 திருச்சிற்றம்பலம்

        <> போதம் பிறக்கச் செய்தருள் <>




தானந் தனத்தத் தனதான

தானந் தனத்தத் தனதான தனதானா

 

காலொன் றுயர்த்தித் தலைமீது

....காணுங் குறிப்பைச் செயகாளி

......தோலும் படிக்குப் பணிநீமுன்

.........பேரம் பலத்திற் கொருராச னெனுமாய

 

சாலம் பிறர்க்குத் தெரியாமல்

....ஞாலம் பதித்துப் பிறபாதம்

.......மேலென் றிருத்தித் தொழுவோர்கள்

.........காணும் படிக்குச் செயுலீலை தனைநானு

 

மாலங் குடித்துத் தடுமாறி

....யாடுங் கணத்திற் சுடுதீயுன்

......னாகங் கெடுத்துப் பரவாம

.........லாகும் படிக்குச் செயுமாது மறிவோமே

 

காலம் பெருக்கிக் கடைநாளில்

....காலன் பிடித்துச் செலுநாளுன்

.......காலின் சிறப்பைத் தெரிஞான

………. போதம் பிறக்கக் குறியாயென் பெருமானே.

 

பதம்பிரித்து:

 

கால் ஒன்று உயர்த்தித் தலை மீது

....காணும் குறிப்பைச் செய காளி

......தோலும் படிக்குப் பணி நீ முன்

.........பேர் அம்பலத்திற்கு ஒரு ராசன்  எனும் மாய

 

சாலம் பிறர்க்குத் தெரியாமல்

....ஞாலம் பதித்துப் பிற பாதம்

.......மேல் என்று இருத்தித் தொழுவோர்கள்

.........காணும் படிக்குச் செயும் லீலை தனை நானும்

 

ஆலம் குடித்துத் தடுமாறி

....ஆடுங் கணத்தில் சுடு தீ உன்

......ஆகம் கெடுத்துப் பரவாமல்

.........ஆகும் படிக்குச் செயும் மாதும் அறிவோமே 

 

காலம் பெருக்கிக் கடை நாளில்

....காலன் பிடித்துச் செலும் நாள் உன்

.......காலின் சிறப்பைத் தெரிஞான

………..போதம் பிறக்கக் குறியாய் என் பெருமானே.

 

(பணி = பண்ணி என்பது சந்தத்திற்காகக் குறுகியது; பணிநீமுன் – முன் நீ ப(ண்)ணி எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவும்; ஆகம் = உடல்..)

பொருள் விளக்கம்: பெருமானே! நீ முன்னமொரு காலத்தில், உனது (வலது) காலை உன் தலைக்கு மேலாக உயர்த்தி ஒரு நடனத்தைச் செய்து, உன்னுடன் போட்டியிட்ட காளியன்னையைத் தோல்வியுறச் செய்து தில்லைப் பேரம்பலத்திற்கு நீயே அரசனெனச் செய்த மாயா சாலமானது மற்றோர்க்குத் தெரியாத வண்ணம், அச்சபையில் உன்னைத் தொழவரும் அடியார்முன், வலது காலைப் பூமியில் பதித்து இடது காலை மேலே உயர்த்திக் காட்டி அப்பாதத்தை அவர்கள் பணிய வரும்படி செய்த திருவிளையாட்டை, திருப்பாற் கடலிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சு உன் உடலில் பரவிச் சுட்டுத் தீங்கு விளைவிக்கா வண்ணம் உன்னைக் காப்பாற்றிய உமையம்மையும் அடியேனும் அறிவோம்.   எனது வாழ்நாளை வீணாக்கி, இறுதியில் இயமன் வந்து என்னைப் பிடித்துச் செல்லுங் காலத்தில் உனது இரு கால்களின் மேன்மையை உணரும் மெய்யறிவைத் தர நீ உளங்கொள்வாயாக..   

படம் : தூண் சிற்பம், பேரூர் (இணையத்திலிருந்து.)

அனந்த் 23-9-2022 பிரதோஷம்

Wednesday, September 7, 2022

       திருச்சிற்றம்பலம்

                             <> திருவடித் திறம் <>


        Sri Natarajar-Sivakami.jpg 

ஓடுங்கால் உண்டிநிதம் ஏற்றுண்ணநாரணன்முன்

தேடுங்கால்மெய்யடியார் தில்லையிலே காணற்கு

நாடுங்கால் நங்கையுமை பார்த்திருக்க மேல்தூக்கி

ஆடுங்கால்  அம்பலத்தான் கால்.

                          🌺🌷🌺


                       <> மலரடி <>



         Nataraja- Chola Bronze statue.JPG  


 

                 அடிநாள் உனையணுகா அற்பனெனைக் காலன் 


                 அடிநாள் வருமுன் அரனுன்  அடிநாண் 


                  மலரணுக வைத்தென் மனமுலவு மாயா 


                  மலமகலச் செய்தெனை மாற்று.

 

             (நாண் மலர் = நாள் மலர்; உன் நாள் மலர்அடி எனக் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க.)

 

                                         🌺🌷🌺


 

                     <> காலழகன் <>

 




             


                 கால்கள் இரண்டுண்டு காசினியோர் பற்றுதற்கு)அன்


                 றாலமுண்ட கண்டர்க்(கு) அறிவம்;அவர் – கோலத்தில்


                 காலொன்று பூணும் கழல்சிலம்பு மற்றுமொரு


                காலோ சிலம்பணியும் காண்.


                                      🌺🌷🌺

 

   ..அனந்த் 7-9-2022 பிரதோஷம்


Tuesday, August 23, 2022

 திருச்சிற்றம்பலம்

                                    

             


                                          <> என்னிறை <>

 

பன்னிரு கையனும் பணிபவர் இடரறு மூத்தோன் ஐங்கரனும்

……..பக்கல் அமர்ந்துனைப் பரிவுறை விழிகொடு பார்க்கும் பார்வதியும்

 

பின்னிய சடையுறை பிறையொடு கங்கையும் சூழ நீதனியோர்

…...பீடுடன் கயிலையில் வீற்றிடப் பிரமனும் மாலும் தேவர்களும்  

 

துன்னிய கரத்தொடு துதிசொலிப் பணிவதைக் கண்டு மெய்ம்மறந்து

……..சுருதியின் முடிபெனும் சுத்தமெய்ப் பொருளிவன் காணீர் இவனேதான்

 

என்னிறை என்றென தெதிர்வரு பவர்முனம் நாளும் பேசுதல்கேட்(டு)

... என்னையும் உன்னடி யவனென ஏற்றிட எண்ணம் கொள்ளுவையே.

 

(பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்கூவிளம் விளம் விளம் விளம் மா கூவிளங்காய்.)

அனந்த் 24-8-2022 pradhosham

Monday, August 8, 2022

உபதேசிகன்

திருச்சிற்றம்பலம்

 

   <> உபதேசிகன் <>


Arunachalam.jpg


தானனா தந்தன தானனா தந்தன

தானனா தந்தன தானனா தந்தன

தானனா தந்தன தனதானா

 

போகுநாள் வந்திடு காடுவா வென்றிடு

.. போதிலே யுன்பத மேயுளே நின்றிடு

....... பேறுநீ தந்திட மறவாதே


வேகுகா யந்தனை வேகமே வெந்தழன்

.... மீதிலே யுந்திடு வேளைநீ றென்றுன

....... மேனியே யண்டிட விழைவேனே 

 

பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்

.... பாரெலாந் தந்தையர் பேருளே கண்டவவ்

....... வாறுயான் கண்டிட ருளாயோ


மாகமா யன்றொரு நாளிலே நின்றுப

.. தேசமே தந்துமெய் யோதியா முய்ந்திடு

….. மாறரு டந்ததை நினைவேனே.

 


பதம் பிரித்து:

போகுநாள் வந்து இடுகாடு வா ன்றிடு

.. போதிலே உன்பத மேஉளே நின்றிடு

....... பேறுநீ தந்திட மறவாதே


வேகுகா யந்தனை வேகமே வெந்தழல்

.... மீதிலே உந்திடு வேளை நீறு என்று 

....... மேனியே ண்டிட விழைவேனே  


பாகுநேர் செஞ்சொலள் பாகனே ஐங்கரன்

.... பார்எலாம் தந்தையர் பேர் உளே கண்

....... அவ்வாறு யான் கண்டிட அருளாயோ


மாகமாய் அன்று ஒரு நாளிலே நின்று

.. உபதேசமே தந்து மெய் ஓதி யாம் உய்ந்திடுமாறு

….. அருள் தந்ததை நினைவேனே.

 

(உன = உனது; இரண்டாம் அடியின் பொருள்: எனது மேனியை உற்றார் விரைவில் நெருப்பின் மீது தள்ளிடும் போதினில், என் உடல் சாம்பராய் மாறுகையில் அது இடுகாட்டில் நடம் புரியும் உன் மேனியை அடைய விரும்புவேன்.)   


அனந்த் 9-8-2022