Saturday, December 23, 2023

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


        <> ஏக்கம் அறிந்திலையோ? <>



(வாய்பாடு: கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் 

           கூவிளம் புளிமா தேமா)


எங்கிருந் துன்னைநான் எண்ணினும் நெஞ்சினை  

…. எரியினில் மெழுக தாக்கி 

… ஏதுநான் செய்யினும் இறைவ!நீ என்முனம்  

…   இருப்பதாய் உணர வைத்துப்  

 

பொங்கிடும் அன்புடன் புனித!நின் பொற்பினைப்  

…. பொழுதெலாம் பேச வைத்துப் 

……..புன்மையன் என்னைநீ மாற்றிடின் புவியெலாம்  

……….புகழ்ந்திடும் உன்னை அன்றோ?  

 

மங்கையோ டென்முனே வந்தெனைக் காத்திட 

…. வருவதாய்க் கனவு காண்பேன் 

……. எங்கணும் என்றுமே இலங்கிடும் பரம!என்  

………..ஏக்கம்நீ அறிந்தி லாயோ? 

 

கங்கையும் திங்களும் கொன்றையும் சடையில்நின் 

….. கருணையைச் சாற்று மன்றோ? 

….. கனகமா மன்றிலே கதிசுதி சேரவோர் 

…….. களிநடம் ஆடு வோனே. 


  ..... அனந்த் 24-12-2023

Saturday, December 9, 2023

இடபத்தின் அழைப்பு

திருச்சிற்றம்பலம்
 இன்று பிரதோஷ நன்னாள்


       <> இடபத்தின் அழைப்பு <>





அடியார் வேடம் நான்தரித்துன்
.. அருகே நின்றிங்(கு) அரற்றுவது

செடியார் புன்சொல் எனஉனக்குத்
…தெரியு மென்று நானறிவேன்

துடியார் கரத்தோய்! துட்டரையும்
..தூய்மைப் படுத்தும் உனதருளைக்

கொடியார் இடபம் கூறுவது
.. கொண்டே கூட்டம் திரளுமிங்கே!

(செடிஆர் = அற்பமான, குணமில்லாத; துடி = உடுக்கை; கொடி ஆர் = கொடியில் உள்ள.)

  … அனந்த் 10-12-2023





Thursday, November 23, 2023

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                       <> அண்டி வந்தேன் <>


                     


ஆசை மிகுந்துன் அருட்பதம் பற்றிட அண்டிவந்தேன்

ஈச! அருள்தர ஏன்நீ தயங்குவை என்றறியேன்

நீச னெனத்தாய் மகவினை யாங்ஙணும் நீக்குவளோ

தேசுடன் தில்லைத் தலத்தில் நடமிடு தெள்ளமுதே.


                                  🌺🌺🌺


                   <> உவகை ஒளி <>


   

   காலம் இல்லா முழுப்பொருளைக்

   ... கண்டஞ் செய்து பற்பலவாய்க்

   கோலங் கொடுத்துக் குவலயத்தில்

   ... கூட்டி வைக்கும் மாயையதன்

   சாலம் உணர்ந்த ஞானியவன்

   ... சலியா தகத்தில் பன்மையெழும்

 மூலம் நாடி மெய்யுணர்வில்

... மூழ்கி முழுமை உற்றிடுமே.  


    .... அனந்த் 24-11-2023  

Thursday, November 9, 2023

ஒன்று பலவாகி

 


இன்று பிரதோஷ நன்னாள்

          <> யாரே அறிவார்? <>


     ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீ நடராஜர்- கோனேரிராஜபுரம்.jpg
     
ஒருகால்* ஒயிலாய் ஒருகா லுயர்த்தி
.. ஒருகை நிமிர்த்தி உன்பே ரெழிலில்

உருகா என்றன் உளத்தை மெழுகாய்
.. உருகும் படியாய்ச் செய்வாய் மறுகால்

வருவாய் இலிங்க வடிவில் அதனில்
.. மயங்கி நிற்பேன் மற்றோர் போதில்

அருவாய் ஒளிர்வாய் ஐயா! உன்றன்
.. ஆட்டை யாரே அறிய வலரே!

(*ஒருகால் = ஒரு வேளையில்; மறுகால் = இன்னொரு வேளையில்; ஆட்டை = ஆட்டத்தை. சிதம்பரத்தில் ஐயன் உரு, அருவுரு, அரு என்னும் மூன்று வகை நிலைகளில் காட்சிதருவதைக் குறிப்பது. படம்: இணையத்திலிருந்து.)

... அனந்த் 9/10-11-2023 


Wednesday, October 25, 2023

உனது நாடகம்

 


 

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


            <> உனது நாடகம் <> 


                           

நானென தெனுமிரு நாண்களைக் கொண்டு

மானிடர் தம்மை ஊனொடு பிணைத்துப்

புலன்களின் அடிமையாய்ப் புவியில் பிறப்பித்(து)

அலைந்திடச் செய்(து)அவர் அவதிபல பட்டாங்(கு)

உலைந்தும் எய்த்தும் உலவிட வைத்(து)அவர்

கலங்கிய மனத்தராய்க் கதறிடுங் காலுன்

காலை அவர்முன் காட்டி அவர்தமை

இன்முகத் தோ(டுநீ ஈர்த்திதைப் பற்றென

நன்னெறி காட்டி நாடகம் ஆடுவ(து)
 ஏனெனக் கேட்க
மானிகர் விழியளே

வாய்திற வாளெனின் யார்பால்

போயிதைக் கேட்போம் புகல்வாய் நீயே!

 

            .. அனந்த் 26-10-2023


Wednesday, October 11, 2023

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்

 

           <> யான் அறியேன் <>

                                       

தென்புலி யூரிலே திருநடம் ஆடிடும்

.. தேவ!நீ தொழுமடி யாருக்(கு)

என்னையே தருவனென் றெழில்கரம் நீட்டி

ஈர்த்திடல் கண்டுமிப் பாரோர்

பொன்னிலும் பொருளிலும் தம்முடைப் பொழுதைப்

.. போக்குவர் என்றுயான் அறியேன்

முன்னைசெய் தீவினை அத்துணைப் பெரிதோ

… மொழிவைநீ முதலினும் முதலே.

                      🌸🙏🏽🌸


                                   < மனங்கொள்வீர் >

                 

பணிபலயான் ஆற்றியுன்றன் பாதவிணை பற்றுகையில்

பணிபலஎற் குளவுன்னைப் பார்த்திடப்போ தில்லையெனின்

அணிபலபூண் டருகிருக்கும் அன்னையுனைக் கடியாளோ?

மணிபலசேர் மன்றிலுறை மன்ன!இதை மனம்வையே


                                                                    .... அனந்த் 12-10-2023

Tuesday, September 26, 2023

துணைபுரிவாய்

 

இன்று பிரதோஷ நன்னாள்.


திருச்சிற்றம்பலம் 




                          


 

       <> துணைபுரிவாய் <>

 

படித்தவர்பால் சென்று பரமனுனைப்

.. பணிவகையைப் பயிலா நாயனையேன் 

 

நடித்திடுவேன் நல்லோன் எனப்பிறர்முன்

.. நகையுடன்நீ அதனைக் கண்டுமென்னை

 

அடிக்காதுன் தாள்பால் அணுகுதற்(கு)

.. அனுமதியும் அளித்தாய் ஆங்கதனால்

 

துடிக்கின்றேன் உன்றன் அருட்பெருக்கின்

…திறம்நினைத்துப் புலியூர்த் தூமணியே

 

 

                                                      ……. அனந்த் 26-9-2023

Monday, September 11, 2023

 இன்று பிரதோஷ நன்னாள். 

திருச்சிற்றம்பலம்

 

        <> புலியூர்த் துரை <>

 

 

                                 Natarajar_at_chidambaram-2.jpg

 

முழங்கிடும் துடியொடும் முடியணி மதியொடும்

…. முத்தொழில் புரிந்து ஞானம்

 

வழங்கிடும் கரத்துடன் மன்றினில் நடமிடும்

.. வள்ளலே அடியர் உள்ளப்

 

பழங்குடில் தொறுமெழுந் தருளுமெய்ப் பொருளுன

.. பாங்கினைப் பகரல் ஆமோ?

 

செழுங்கதிர் எனவொளிர் சிவபுரத் தரச!எம்

.. செல்வமே புலியூர்த் தேவே!

 

(பொருளுன = பொருள் உனது)    

 

……………..  அனந்த் 12-9-2023


Sunday, August 27, 2023

 திருச்சிற்றம்பலம் 

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்,


                         <>  மயக்கும் முரண் <>





வெண்ணீற்று மேனியில் கரியுரியைப் போர்த்திடுவாய்

தண்ணீரைத் தாங்கித் தழலையும்கை ஏந்திடுவாய்

கண்மூன்றும் மூடிக் கைச்சாடை காட்டிடுவாய்

எண்ணில்இம் முரணன்றே எனையுன்பால் ஈர்த்ததுவே.


                               


                             *********


                  <> அளவிலாப் பரிவு <>



                                                                                                                                                    

பாவியிவன் என்றிந்தும் பரிவுடனே ஏற்றுத்

தேவனுன்றன் திருவடியார் கூட்டினிலே சேர்த்து

மூவினைகள் எனைமயக்கில் மூழ்கவிடா வண்ணம்

மூவிலைவேல் ஏந்திடுவோய் முத்திநிலை சேர்ப்பாய்

 

(நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா)

 

                      …………….அனந்த் 27/28-8-2023                                     

 



Sunday, August 13, 2023

      

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்


        <> ஆட்டுவித்தான் <>


                



உலக மென்னும் மேடையிலே

.. உவகை யுடனே ஏறிநின்று


பலவாய் அங்க அசைவுகளைப்

.. பாங்காய்க் காட்டிப் பரிசுபெற்றும்


அலந்தேன் உடலம் தளர்ந்துநிதம்

.. அழுதல் விட்டுப்  புலியூர்அம்


பலவன் என்னை ஆட்டுவிக்கப்

பெற்றேன் இனியோர் துயரிலனே.  

                                          

(அலந்தேன் = துன்பப்பட்டேன்)


                           ... அனந்த்  13-8-2023

 


Sunday, July 30, 2023

காத்திடுவாய்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                   <>      ாத்திடுவாய் <>


                                                                        ThirukkazukkunRam.jpeg

அழுக்கு நெஞ்சினன் அடிக்கடி யுன்றன் நினைப்பினின்று

வழுக்கி மண்ணிதன் மயக்கெனும் குழியுள் விழுந்திடுங்கால்

இழுக்கிப் பாவியைப் புரத்தலென் றெண்ணா தெனக்கருள்வாய்

கழுக்குன் றத்துறை கடவுளுன் கரத்தை நீட்டியின்றே.

                        *************


                                              <>      என் பேறு <>


                                                                            Chidambaram_Sri Natarajar with Sivakami.jpg


 

வாக்கால் வழுத்தியுன  தாட்கீழ் வந்தடையும் அடியவர்க்குத்

தூக்கிப்  பதமலரைக் காட்டித் துரிசகற்றும் தூயனுனைப்

பார்க்கும் வகையளித்த பேற்றை எண்ணிநிதம் பாவியன்யான்

போக்கு வேனெனது  வாழ்வில் மிஞ்சியஎன் பொழுதினையே


 … அனந்த் 30-7-2023


https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

Thursday, July 13, 2023

இன்று பிரதோஷ நன்னாள். <> நடன நயம் <>
… அனந்த் 13-7-2023

Friday, June 30, 2023

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள். திருச்சிற்றம்பலம்

Wednesday, June 14, 2023

 

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


<> விசித்திரத் திருடன் <>


 


இருளில் திரிந்து பொருளைத் திருடும்

…. இயல்சேர் கள்வர் கண்டுள்ளேன்

இருளில் நடமா டொருவன் மாறாய்

…. என்றன் அகத்துள் தான்புகுந்தே

இருளைத் திருடி இணையில் சிவமாம்

…. பொருளை விட்டுப் போயினனே!

அருளின் வடிவோன் அழகார் தில்லை

…. அரசன் செயலை ஆரறிவார்?

 

.. அனந்த் 15-6-2023