Saturday, February 20, 2016

பரிந்துரை கூறீரோ?



திருச்சிற்றம்பலம்

 

<> பரிந்துரை கூறீரோ? <> 

முந்தி அரன்ஆணை முற்றும் நிறைவேற்றும்
நந்திப் பெருமகனே! நாதனை – எந்தக்
கணமும் தொடரும் கணங்களே! பத்தர்
கணக்கிலெனைக் கூட்டச்சொல் வீர்!

எம்மான் திருமுடியில் ஏற்றமுடன் வீற்றிருக்கும்
அம்மா,பா கீரதியே! ஐயனிடம் – உம்பார்வைக்(கு)
ஏங்கிநிற்கும் ஏழைஇவன் என்றுரைத்(து) எந்தையருள் 
வாங்கித் தருவீர் விரைந்து.  

பாலன்ன வெண்மைப் பனிநிலவே! சார்ந்தோர்தம்
பால்எப் பிழையையும் பாராத – சீலனென
நீயறிவாய் அந்த நிமலனை எனையுமவன்
காயாது காக்கக் கழறு. 

கொன்றை மலரே!  குழகன் குழல்முடியில்
என்றும் விரும்பியணி ஏற்றமுள்ளோய்! – சென்றவற்கு
என்றன் நிலையை எடுத்துரைத்து ஆங்கவனை
இன்றே எனக்கருளச் செய்.  

மிடற்றில் கரத்தில் விரிமார்பில் அண்ணல்
இடையில் செவியில்என எங்கும் – படஅரவே!
அண்ணலின் மேனி அலங்கரிக்கும் நீஅடியேன்
விண்ணப்பம் விளம்பாய் அவற்கு.

காமனை எரித்தமுக் கண்ணரைக்கண் ணால்மயக்கி
வாமபா கம்தர வைத்தவளே! – போம்உம்மை
அன்றிவே றெத்துணையும் அற்றஇப் பிள்ளையை
இன்றேகாப் பாற்றுமென ஏவு.

அனந்த் 19-2-2016

Friday, February 5, 2016

மீண்டும் வாராயோ?


திருச்சிற்றம்பலம்


 

      <> மீண்டும் வாராயோ? <>

கட்டிப் பிடித்துனைக் கணமு(ம்)வில காதுமனக்
....கோட்டையின் உட்பு றத்தில்
.....களிப்புமீ தூரநான் காத்துவரும் போதிலே
........கனகசபைச்  செல்வ மே!என் 
..........கண்ணி(ல்)மண் தூவியே காணாமல் சென்றனை
............கடவுள்நீ இருந்த இடத்தில் 

துட்டத்  தனத்தவர் சுற்றமொடு  குடியேறச்
....செய்தெனை வாட்டு முன்றன்
......சோதனை தன்னிலே நீகண்டு வருகின்ற
  ........சுகம்யாது கூறு வாயோ? 
   ……..தொடர்ந்துநீ இங்ஙனம் செய்யும்இதைக் காணுவோர்
...............சொல்பழியைக் கேட்டி டாயோ?

கட்டம் மலிந்தஇக் காசினியில் உழலுவதைக்
....கடந்திட வேண்டி யுன்றன்
… ..கழலடி நிதம்பணிந் தேத்திடுமுன் அடியவர்
.........குறையெல்லாம் தீர்ப்ப துன்றன்
….........கடமையென்(று) உணர்ந்துநீ மீண்டுமென்றன் நெஞ்சுளே
..............கடிதிலே  புகுந்தி டாயோ?

நட்டம் தன்னிலே நாளெல்லாம் கழித்திடலால்
....நான்சொலும் வார்த்தை யில்உன்
…....நாட்டமும் இல்லையோ? நியாயமும்ஈ தாகுமோ?
........நாதன்நீ இலாமல் இங்கே
…........நானினி வாழ்வதில் பயனேதும் உள்ளதோ?
.............நாடியெனுள் வதிந்தி டாயோ?


{21-சீர் ஆசிரிய விருத்தம். வாய்பாடு:
தேமா விளம் காய் காய் விளம் மா தேமா
.. விளம் விளம் காய் விளம் காய் மா தேமா
... விளம் விளம் காய் விளம் காய் மா தேமா}


அனந்த்
5-2-2016

Thursday, January 21, 2016

வேடதாரி

திருச்சிற்றம்பலம்
                        



                     <> வேடதாரி <>

ஆண்டியாய் நிற்கும் நீயே அகிலமும் ஆள்வோன் ஆவாய்
.. அசலமாய் நிற்கும் நீயே அம்பலத் தாடி நிற்பாய்

பூண்டிடும் துறவிக் கோலம் புறக்கணித்(து) இரண்டு மாதர்
.. புடையமர் குடும்பி ஆகிப் புத்திர ரோடு காண்பாய்

மாண்டவர் எரியும் மண்ணில் மத்தனாய்த் தோன்றும் நீயே
.. வணங்குவோர்க் கருளும் ஈசன் வடிவிலே மாறி நிற்பாய்

வேண்டுவோர்க் கேற்ற வாறு வேடம்நீ பூணும் வித்தை
.. விளங்கிட வைத்தென் நெஞ்சில் விலகிடா வண்ணம் நில்லே. 

(நில்லே = நிற்பாயே)
(12-சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: கூவிளம், மா, மா, விளம், மா, தேமா)

.. அனந்த்
21-1-2016

Monday, January 11, 2016

காரணம் அறிந்தேன்


                                               திருச்சிற்றம்பலம் 
                                                         ​

                                   <> காரணம் அறிந்தேன் <>
            

தாதை எனநீ ஆடுவதில் தம்மை மறந்துன் அடியார்கள்

…..தரையில் விழுந்து, மனம்நெகிழ்ந்து, சம்போ! எனவாய் அரற்றிநிற்பார்

……..ஏதோ இதற்குக் காரணம்என்(று) எண்ணிப் பார்த்தேன்; பலகாலம்

….……ஏங்கி நின்றும் தவம்கிடந்தும் எங்கெல் லாமோ தேடியதம்


தாதை தம்கண் முன்னேஓர் தங்கம் வேய்ந்த கூரையின்கீழ்,

…. சல்சல் என்று சதங்கையொலி தாளம் கூட்ட, அருகினிலே

…….கோதை உமைகை தட்டஉன்றன் கூத்தின் அழகைப் பார்த்தாங்குக்

………..கூடி இருக்கும் இருடிகள்கை கூப்பித் தொழும்அக் காட்சியில்தம்


வாதை  யாவும் நிரந்தரமாய் மடியக் கண்டுஇங்(கு) இனிப்பிறவி

….வாரா தென்னும் வகையினில்நீ வலக்க ரத்தை மேல்தூக்கி

……வரமும் அளிக்கும் மகிழ்ச்சியிலே வந்த உணர்வின் விளைவேஇம்

……….மாந்தர் செயல்கள் எனஅறிந்தே மகிழ்ந்தேன் அதனைத் தொடர்ந்திந்தப்


பேதை யேன்ஓர் அறிவில்லாப் பிச்சன் உன்றன் பேர்சொல்லிப்

….பிறரை நானுன் அடியனெனும் பிரமை கொள்ள வைப்பவனின்

……பிழைகள் யாவும் பொறுத்துஎன்மேல் பிரியம் காட்டி எனக்குமுன்றன்

…….பேரெ ழில்சேர் நாட்டியத்தின் பெருமை விளக்கி அருளாயோ?  


(வாதை = துன்பம்; பிச்சன் = மருண்டவன்)

... அனந்த் 7-1-2016

Tuesday, December 22, 2015

பற்றினேன்


திருச்சிற்றம்பலம்




<> பற்றினேன் <>

உருவமொன் றிலாமலோர் அருவமாய் நின்றநீ
..உலகுளோர் காண வேண்டி
உளங்கவர் வடிவமொன் றேற்றதன் மாண்பினில்
….உவகைநான் கொண்டு நிற்க

ஒருபுறம் உனைமணம் புரிந்தவள் தனதென
..உரிமையோ டெடுத்த பின்னர்
உன்சிரம் தன்னைஓர் மங்கையும் கொண்டிட
….உடலையும் பாம்பு மூட

இருபதம் தம்மையுன் அடியவர் துணையென
..இறுக்கமாய்ப் பற்ற, இன்னும்
இருப்பதுன் உருவினில் ஏதென இங்குயான்
….எண்ணியே திகைத்த காலை

ஒருவரும் அறிந்திடா வண்ணமாய் ஐய!நீ
..ஒளிந்தென தருகில் வந்தென்
...உள்ளமாம் வெளியினில் உன்உரு அனைத்தையும்
….ஒருங்கயான் பற்ற வைத்தாய்!

(ஒருங்க = ஒன்றாகச் சேர்த்து)

..அனந்த்
23-12-2015

Thursday, December 10, 2015

ஞானவெளி

திருச்சிற்றம்பலம்

             <> ஞானவெளி <>

ஊன்கொண்டு நுகருணர்வும் உடலமதில் உறையுயிரும்

.. உயிர்சார்ந்த வினையு மழிய



நானென்ற போதமது தானுமழி யத்தனியே

.. ஞானமெனும் வெளியில் நித்ய



மோனநிலை யதனிலுறை யோகமெனும் ஒருபேற்றை

.. மூடனிவன் பெறுவ தற்(கு)உன்



ஆனந்த நடனமதை அனவரதம் என்நெஞ்சில்

.. ஐய!நீ நாட்டி டாயோ?



... அனந்த் 8-12-2015

Sunday, November 22, 2015

அலகிலாக் கூத்தன்

திருச்சிற்றம்பலம் 
(14-சீர் விருத்தம்; அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா



                                                                        <> அலகிலாக் கூத்தன்  <>

மாமியார் தொல்லையில் லாததோர் மனையென மனமகிழ்ந் திரண்டு மாதர்
மணம்புரிந் தொருத்திஉம் உடலிலே பாதிமற் றொருத்திஉம் தலையி லேற 

ஆமிது தாங்கவொண் ணாதென ஐய!நீர் ஆங்கொரு ஓட்டை யேந்தி 
ஆனின்மீ தேறியே ஊரெலாம் அனுதினம் ஊணிரந் துண்டு வாழும்

சாமியா ராயினீர் என்றுமைச் சகத்தினர் பரிகசம்  செய்வ தைநீர்
சட்டைசெய் யாமலே திரிவதன் காரணம் அவரெலாம் அறிய மாட்டார்

யாமெம தென்னுமோர் மாயையில் யாண்டுமே சிக்கிடா ப் பரம மாம்உம்
.. அலகிலாக் கூத்தினை ஆன்றமெஞ் ஞானியர் மட்டுமே அறிகு வாரே!

..அனந்த்
23-11-2015

Monday, November 9, 2015

எனது உறவு

திருச்சிற்றம்பலம் 


​​ 
<> எனது உறவு <>

கரக்கவொரு பெண்ணிடத் திருத்தவொரு பெண்ணுளன் காமனைக் கடிந்த பரமன் 

உரைக்கவொரு சொல்லிலான் மரத்தடியி லேஅமர் உயர்ந்தஅறி வீயும்குரவன்
   
நரைத்தவிடை யேறிஊண் இரக்குமொரு ஏழைபார் புரப்பனெனப் பேர்பெற்றவன்

பரத்தில்வெளி யாகிஎவ் விறைக்குமிறை யாமிவன் எனக்குமுற வானசிவமே!   

(உயர்ந்த அறிவு = மெய்யறிவு, ஆத்ம ஞானம்)


.. அனந்த் 
9-11-2015