Sunday, December 27, 2020

                      திருச்சிற்றம்பலம்

          <> திருக்கோலம் <>


       பிரதோஷ தாண்டவர்.jpg

காலொன் றுயர்த்திமறு காலை இருத்திநடம் காட்டுமுனை

நாலும் பெருவாயன் வேலன் இவர்களுடன் நங்கையொரு

பாலும் அருகிருந்து பார்க்கும் திருக்கோலப் பாங்கினையான்

கோலொன் றெடுத்தெழுத்தில் கூட்டும் திறன்பெறநீ கூட்டுவையோ?  

 

(நாலும் பெருவாயன் தொங்குகின்ற வாயுடைய யானைமுகன்)

 

     <> ஆடும் அரன் <>

 

நீறாடி அன்பர்பொழி நீராடி அஞ்சடைமேல்

ஆறாடி சீறும்  அரவாடி மங்கையொரு

கூராடி கூத்தாடி கூர்வேற் படையாடி

சீர்பாடி உய்வோம் தெளிந்து.

 

(முதல் மூன்றடிகளில் ஆடி என்பது பெயர்ச்சொல்லாகவும் ஈற்றில் வினையெச்சமாகவும் பயிலும். ஈற்றடியில்பின்னிரு சொற்களை இடம்மாற்றிப் (கொண்டுகூட்டிப்) பொருள் கொள்ளவும்.)

... அனந்த் 27-12-2020, பிரதோஷ நன்னாள்.

 

Friday, December 11, 2020

அடம்பிடித்தல் ஆமோ?


               <> அடம்பிடித்தல் ஆமோ? <>


                     

சுற்றித் திரியும் தொழில்கொண்ட மனத்தினையும்
.. சுகத்திற்(கு) அலையும் புலன்களையும் மிகமுயன்றோர் 

ஒற்றைக் கண(ம்)நான் ஒடுங்கவைத்த பினர்ஐயா 
 .. உனைஎன் நெஞ்சில் ஊன்றிவைக்க நினைக்கையிலே 

 எற்றுக் காக அடம்பிடித்து நீஅப்போ(து) 
 .. எங்கோ சென்று ஒளிந்துகொள்வாய் எனவறியேன் 

 பற்றிப் பிடித்த பக்தர்பலர் உனைஉள்ளில் 
.. பூட்டி வைத்த(து) எங்ஙனெனப் புகலாயோ? 

 .. அனந்த் 12-12-2020. (சனிப் பிரதோஷம்)

Thursday, November 26, 2020

 இன்று பிரதோஷ நன்னாள்.


              திருச்சிற்றம்பலம்


               <> ஒருகால் ..<>


 




சிரித்தெனை மயக்கும் ஒருகால்

திருப்பதம்* தன்னைக் காட்டி

வரித்தெனை ஈர்க்கும் ஒருகால்

மாவினைப் பயனை எல்லாம்

உரித்தெனைக் காக்கும் ஒருகால்*

உறுபிறப் பிறப்பை வாரா

தெரித்தெனைச் சேர்க்கும் தன்பால்

தில்லைவாழ் தெய்வ மாமே.


(அறுசீர் விருத்தம்; *ஒரு காலத்தில்; திருப்பதம் = சிவபதம்; சிவசாயுச்சியம்.)


            *********

ஒருகா லிருத்தி ஒருகால் உயர்த்தும் உனநடத்தை

ஒருகா லிருத்தி* உடலினை ஓம்புமென் உள்ளினில்நீ

ஒருகா லிருத்தின் எனதுயிர் உய்யும்முன் ஓர்சமயம்

ஒருகா லிருத்தியொர் **கண்ணிடந் தோற்கருள் உத்தமனே

 

(கட்டளைக் கலித்துறை. உனநடத்தை = உன் நடனத்தை; *கால் = காற்று, இங்கு, மூச்சுக்காற்று;  **இடந்து = தோண்டி - கண்ணப்பன் பற்றிய குறிப்பு.)

 

              *********  

ஒருகால் உருகுமென் னுள்ளம் உன்னிடம் ஒன்றி,எனில்

ஒருகால் உனைமறந் தெத்தையோ உன்னும் உனையடைய

ஒருகால் இழுத்தொரு கால்விட் டுயர்தவம்* ஆற்றிலனுன்

இருகால் அடிக்கீழ் இருத்திடின் உய்வேன் எனதிறையே.

(கட்டளைக் கலித்துறைபூரகம், ரேசகம் என்னும் இருவகை மூச்சு)

 அனந்த் 27-11-2020

Wednesday, November 11, 2020

கூத்தின் இரகசியம்

                             

                            <>  கூத்தின் இரகசியம் <> 


                  

பித்தனென் பேரெனப் பெருமையாய்ப் பேசிமுன் பேதைசுந் தரனின் முன்னம்
..
பிடிவாதம் செய்(து)அவன் அடிமையாம் உனக்கெனப் பிறரைநீ நம்ப வைத்தாய்

அத்தனை பிட்டையும் அளியெனக் கென்றொரு கிழவிபால் பேரம் பேசி
.. அவளிட்ட வேலையைச் செய்திடா(து) உலகுளோர் அடிபடு மாறு செய்தாய்  

கத்துகான் நரிகளைப் பரிகளாய்க் காட்டிஅப் பாண்டிய மன்னன் தந்த
.. கணக்கில்லாப் பரிசெலாம் பெற்றபின் மீண்டுமப் பரிநரி ஆகச் செய்தாய்

இத்தனை கூத்தையும் இங்குளோர் அறிந்திலார் என்றுநீ எண்ணி யன்றோ
… இவண்வந்து பொதுவிலே ஈச!நீ தவழ்சிரிப் புடன்நட மாடி நிற்பாய்? 

அனந்த் 12-11-2020


Tuesday, October 27, 2020

வாய்ப்பருள்வாய்

 

                   திருச்சிற்றம்பலம்

                                <> வாய்ப்பருள்வாய் <>

           


கள்ளம் சிறிதுமிலாக் கணக்கற்ற அடியார்கள்

.. கனகசபை நாதனுன்றன் களிநடனம் தனைப்பருகி

உள்ளம் நெகிழ்ந்தவர் உகுக்கும்நீர் உள்தெரியும்
.. உன்னுருவின் பிம்பத்தை யேனும்கண் டுருகியின்ப

வெள்ளத்துள் ஆழ்ந்திடநல் வினையேதும் செய்யாஇவ்
.. வீணனுக்கும் ஒருவாய்ப்பை வழங்கிடநீ கருதாயோ?  
  

துள்ளும் நடம்காட்டித் துரியநிலை ஈதென்று  
.. சொல்லாமற் சொல்லிநிற்கும் தூயபர தத்துவமே. 

அனந்த் 28-10-2020 

      

Wednesday, October 14, 2020

இரங்குவாயே

                                                திருச்சிற்றம்பலம்




                                                             <>  இரங்குவாயே <>


உலகசுக மொன்றையே உண்மையாய் நம்பிமெய் ஓம்பியே நாளும் ஓயும்

.. ஒருகலை யன்றிவே றொன்றுமே அறிந்திடா உலுத்தனா யிருந்த போதும்

 

நிலவுலவு சடையினோய் நின்திருப் பெயர்களில் ஒன்றையே செப்பி னாரேல்

.. நின்னருட் பார்வையை அன்னவர் பக்கமாய் நிறுத்திநீ யருள்வை என்பார்

 

பலவகையி லுன்புகழ் பாடியுன் தாளினை விலகிடா திரவு பகலாய்ப்

..பரவிடும் அடியனைப் பார்க்கவோர் வேளையை இதுவரை கண்டி லாய்போல்!

 

சிலையெனநீ நின்றிடின் மேலு(ம்)நான் செய்வதற்(கு) யாதுள தறிந்தி லேன்காண்

.. திருவுளம் இரங்குவாய் சிதையில்நான் புகுமுனம் தில்லைவாழ் நடன வேந்தே.

 

(14-சீர் ஆசிரிய விருத்தம்: கருவிளங்காய் விளம் விளம் விளம் விளம் மா தேமா; விளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
 

அனந்த் 14-10-2020

Monday, September 28, 2020

காத்திட விரைவாய்

திருச்சிற்றம்பலம்


      (ஸ்ரீ மாறுகால் நடராஜர், மதுரை)

 <> காத்திட விரைவாய் <>

 

இறந்துநான் சென்ற பினரிகத் துள்ளோர்
.. ”
இவன்சிவன் திருவடி நம்பி


மறந்தனன் மற்ற பணியெலாம் இன்று
.. 
மரித்தனன் பயனெதும் இலனாய்;


சிறந்த(து)என் உளதோ சிவனடி பேணித்
.. 
திரிந்தவர்க்(கு)?” என்றுபின் உரைக்கின்


பறந்தலோ போகும் பரமநின் பெருமை
.. 
பரிந்தெனைக் காத்திட விரையே.

 

(எழுசீர் விருத்தம்கருவிளம் மா கருவிளம் மா கருவிளம் விளம் தேமா)

அனந்த் 29-9-2020  

Monday, September 14, 2020

குருபரன்

                       திருச்சிற்றம்பலம் 





                         <>  குருபரன் <>

 

சந்தக் குழிப்பு: தனதன தாத்தன தனதன தாத்தன
              
தனதன தாத்தன தந்ததான

{திருப்புகழ்: விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்..  http://kaumaram.com/thiru/nnt0986_u.html) 

                                   **

  

ஒருபத மேற்றியு மொருபத நாட்டியு 


… மொருகர மாக்கியு மென்றுமேலு 


.. மொருகர நீக்கியு மொருதனி நேர்த்தியொ 


…..  டொருதிரு நாட்டிய மன்றிலாடும்  


  


 குருபர பார்ப்பதி கணவச டாட்சர 


.. குகனொடு மூத்தவ னும்பராவு  


…. குடியுறை பார்த்திப வெனவுனி லாட்படு 


…  குணமுடை யோர்க்கரு ளுங்குணாளா! 


  


வருவினை போக்கிமு னுளவினை மாய்த்திடு 


… …. வரதப ராத்பர வென்றுபாடி 


…. வருமடி யேற்குன மலரடி காட்டியென் 


…… மனமுன தாக்கிய அன்புபேணி 


  


அருணையி லேற்றிய சுடரென வீற்றுநின்   


.. னருளொளி யார்க்குமெ நன்றுகாண 


…. குருவடி வாய்த்தெரி ரமணநின் மேட்டிமை 


…. . குறைவற நாச்சொலி உய்ந்திடேனோ.  


 


(பார்ப்பதி = பார்வதி; பார்த்திப = அரசனே; பராவு(ம்) = வணங்குகின்ற, புகழ்கின்ற; உன மலரடி = உனது மலர் அடி; யார்க்குமெ= யார்க்குமே; மேட்டிமை = மேன்மை, தலைமை)

... அனந்த் 14-9-2020/ திருத்திய வடிவம்20-9-2020.

Saturday, August 29, 2020

நாட்டம் கொள்ளாயோ?

                           திருச்சிற்றம்பலம்



Natarajan sep 25 2019.jpg


       <> நாட்டம்  கொள்ளாயோ? <>

 

என்னுள் உறையும் உனையறியா(து)

.. உலகே உண்மை எனஇங்கே

அன்னை இழந்த குழவியைப்போல்

.. அழுமிவ் வேழை நிலையறிந்தும்

இன்னும் எனக்குன் அருளீயா

.. திருப்ப துனக்கோர் விளையாட்டோ?

பொன்னம் பலத்தில் புன்முறுவல்

.. புரிந்து நிற்கும் பொருளிதுவோ?

                  ************

உருகும் ஒருகால் உன்னருளின்

.. உயர்வை நினைத்து மறுகணமே

இறுகும் இரும்பாய் எதையெதையோ

.. எண்ணி என்நெஞ்(சு) அதன்பின்னர்

மறுகும் என்றன் மடைமைகண்டு 

.. வருந்தி இந்த வகையாக

உருளும் என்னை உய்விக்க 

.. உன்றன் உள்ளம் உருகாதா? 

                 ************

 சொல்லில் அடங்கா உன்சீரைத் 

... துதிக்க எண்ணி அமர்ந்தபினர்

பொல்லேன் எனது புன்மையினைப் 

... புகலத் தொடங்கிப் பயனேதும்

இல்லா(து) இனிய பொழுதினைநான் 

... இழப்பேன் இந்த நிலைமாற

நல்லோ னாக எனைமாற்ற 

... நாதா! நாட்டம்  கொள்ளாயோ?  

அனந்த் 30-8-2020

Saturday, August 15, 2020

சத்சித் சுகம்

பிரதோஷப் பாடல்.

                                 திருச்சிற்றம்பலம்

  

                 


                                <> சத்சித் சுகம் <>

 

சிக்கென் றெனைப்பிடித்த சீவபோ தம்நீக்கும்

வக்கறியாப் பேதையை வள்ளலுன்பக்கம்

வரவழைத்து வெட்டவெளி தன்னில்நட மாடும்

பரம்காண வைத்தாய் பரிந்து.      

 

உண்டுறங்கும் ஊனுடலை உண்மையெனப் பேணியுனைக்

கண்டறிய வொட்டாத காரிருளாய்மண்டியஎன்

மாயா மலம்நீங்கச் சிற்சபையையில் கூட்டிவைத்த

நேயாஎன் நெஞ்சுள் நிலை...

 

பேச்சில்லா மௌனியாய்ப் பேருண்மை விண்டுரைக்கும்

ஆச்சரியம் தன்னையிங்(கு) ஆரறிவார்கூச்சல்மிகு

என்னுள்ளந் தன்னில் எழுந்தருளி என்றனையும்

உன்னுருவாய் உன்னவருள் தா..

 

எண்ணங்கள் தம்மை தீயிலிட்டு இறக்கவைத்துச்

சுண்ணவெண் ணீறாக்கித் தூய்மையுடன் – வண்ணமாய்

என்னுள் இலங்கிடும் உன்னுருவின் மேல்சாத்தித்

துன்னுவேன் சத்சித் சுகம்

(துன்னல் = மேவுதல்)

 

வாவென் றுனைநான் அழைத்திட வேண்டிஎன் வாய்திறக்கின்

தேவென் றெனுள்நீ திகழ்ந்திடல் கண்டு திகைத்துநிற்பேன்

பாவொன் றெழுதியிப் பாரோர்க் குனசீர் பகரஎண்ணின்

ஓவென் றழவைத் தொருசொலும் வாரா தொடுங்குமன்றே.

 

அனந்த் 15-8-2020

Wednesday, August 5, 2020

சிவனே என்றிரு




                                                 
                           எல்கேஎம் பப்ளிகேஷன், தி.நகர், சென்னை (2014); (2003 முதல் 2014 வரை இட்ட பாடல்கள்)

Friday, July 31, 2020

தகுதியில்லோன்

               திருச்சிற்றம்பலம் 
   


 

          
             <> தகுதியில்லோன் <>

வானந்த வரைதாண்டி மெஞ்ஞான வெளியினிலே
 மானாபி மானமின்றித் தானாகி நிற்பவனைத்

தானந்த மில்லாத தத்துவனை மெய்யறிவைத்
.. தந்தோம்காண் எனநடத்தில் சமிஞ்ஞைவழி தெரிவிக்கும்

ஆனந்தத் தாண்டவனை அணிதில்லைப் பதியனைத்தம்
… அகமுருகிக் கண்பனிக்கும் அடியார்முன் அறிவில்லா

நானெந்த வகைகொண்டு நாடியென்றன் மனத்துறைய
…. நாதா நீ வருகவென அஞ்சாமல் அழைத்திடுமே?

(எண்சீர் ஆசிரிய விருத்தம்அரையடிதேமாங்காய்  காய் காய் காய்.), 

.. அனந்த் 31-7-2020

Friday, July 17, 2020


திருச்சிற்றம்பலம் 



வெண்பா:

போது சடையணி பொன்னம் பலத்தரசே
ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்
காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்
நாலுபேர் முன்னால் நடிப்பு? 

கட்டளைக் கலித்துறை:

கட்டத்தைக் கூறிட நான்வருங் காலையுன் காலுயர்த்தி
நட்டத்தை ஆடி ’நடப்பதெ லாமென்றன் நாடகத்தின்
திட்டத்தின் கீழிதைச் சிந்தையில் வை’யெனச் சைகைமூலம்
சுட்டத்தான் என்றறிந் தேனினி ஏதுமில் செப்புதற்கே.

அறுசீர் விருத்தம்:

மனையவள் பாலே மாளா
 மயக்கமுள் ளோர்கள் கண்டோம்
அனைவரும் பலவாய்ப் பண்டம்
 அளித்தவர் மனையை ஈர்ப்பார்
தனதுடல் தன்னில் பாதி
 சதிக்களித் திடுவோர் தம்மை
நினைத்ததும் கண்டும் இல்லேன்
 நிருத்தமொன் றாடும் தேவே.!

அனந்த் 18-7-2020 (பிரதோஷம்)
படம்: சென்னை கபாலீச்வரர் ஆலயத்தில் நடராஜர்-சிவகாமி திருக்கோலம்; From temple calendar.