Tuesday, October 21, 2014

பிணிக்கு மருந்து

இன்று பிரதோஷ நன்னாள். 
 
திருச்சிற்றம்பலம் 




<> பிணிக்கு மருந்து <>

(பதினான்கு சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: புளிமாங்காய், மா, காய், மா, காய், மா, புளிமா)

நிலையாத இந்த நெடுமேனி தன்னை நிலையாக்க எண்ணி மனிதர்
.. நிரையாக நித்தம்  அலைபோலத் தம்முள்  வருநோயை நீக்கு விதமாய்க்

கலையாவும் பேணிக் கணந்தோறும் நூறு வகையான பேர்கொள் மருந்தைக் 
.. கடிதாகக் கொண்டு வருவார்உ டம்பு குணமான பின்னும் மனத்தின் 

அலைபாயும் தன்மை  தொலையாமல் தொல்லை உறு(ம்)வேளை எந்த வகையில்
.. அதைநீக்கு வோமென்(று) அறியாமல் வாடி அழியாதி ருக்கக் கயிலை

மலைமீது ஞான மருந்தாய்இ லங்கும் மாதேவன் தாளை நினைக்கில்
.. மறுசன்ம மென்னும் பிணிநீங்கி  என்றும் மறையாத இன்பம் றுமே.

... அனந்த்
21-10-2014

Monday, October 6, 2014

மேலும் ஒரு பணி

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
 

<> மேலும் ஒரு பணி <>


முத்தொழி லோடு மேலிரு செயல்புரி

... முக்கணா! இனிஇவ் விடத்தில்


சொத்தையாம் உடலில் தொற்றிய நோயொடு

... சொல்லவும் கூசும் படியாய்


அத்தனைக் கொடிய நினைவுகள் மலிந்துள

... அகத்தொடும் திரியும் எனையுன்


பத்தனாய் மாற்றும் பணியையும் கருதிஉம்

... பட்டியல் தனில்சேர்த் திடுமே.

(மேலிரு தொழில்கள் – படைத்தல், காத்தல், அழைத்தல் என்னும் மூன்று தொழில்களோடு, மறைத்தல், அருளல் என்பனவும் சேர்ந்த பஞ்சகிருத்தியங்களைச் சிவபெருமான் செய்வதைக் குறிப்பது.  சொத்தை= சீர்கேடு, ஊனம். எழுசீர் விருத்தம்: கூவிளம், மா, விளம், விளம், விளம், மா, புளிமா)

.அனந்த்  
6-10-2014

Sunday, September 21, 2014

நீயும் நானும்


இன்று பிரதோஷ நன்னாள்


திருச்சிற்றம்பலம்


<> நீயும் நானும் <>


நரையுடை யேன்நான் நீயோ

... நரைவெண் விடையுடையாய் 



திரையுடை யேன்நான் நீயோ

...திரைபாய்   புனலுடையாய்



வரையுடை யேன்நான் நீயோ

...வரையில் உறைவுடையாய்



நிரைநிரை யாய்நான் நின்றன்

...நேரென் றுரைத்திடுமே!



(திரை = தோல் சுருக்கம், அலை; வரை= அளவு, மலை; ; நிரை=வரிசை)    



அனந்த் 21-9-2014

---------------------------

கீழே காணும் பாடல்கள் நான் அண்மையில் இதய சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்தபோது மனத்தில் எழுந்தவை:

                     <> விந்தை புரிந்தாய்! <>

           தில்லைத் தலத்தினைக் கண்டவ னைஇன்று 
           தில்லியம்* தன்னையும் காணவைத்தாய் - உன்றன்
           எல்லைஇல் லாத கருணையி னாலங்(கு) 
           இருந்திட்ட காலம்கு றைத்துவைத்தாய்!

           கல்லைக் கனியாக்கும் விந்தையி னைஇந்தப்
           புல்லியன் கண்முன்நி கழ்த்திவைத்தாய் – யாரும்
           ஒல்ல இயலாதவோர் காரியத் தைநீயோ
           ஒல்லை புரிந்தென்னைக் காத்துவிட்டாய்!

           தொல்லை இனியெனக் கேதுமில் லைஆயின்
           தொல்லை உனக்குண்(டு)அ(து) என்னவென்றால் - நான்
           அல்லும் பகலும்என் நெஞ்சத்தி லேஉன்னை
           அடைத்துவைத் தேயங்கே ஆடவைப்பேன்!
    
(*தில்லியம் = ட்ரில்லியம் (Trillium) என்ற பெயர்கொண்ட டொராண்டோ மருத்துவ மனை; ஒல்லுதல் = ஆற்றுதல், இயலுதல்; ஒல்லை = விரைவு, காலந்தாழ்த்தாமை).
                   -------------------------------------------------

                  <> இதயநலம் காப்பாய் <>


        பதுமத்தில் அமர்ந்திருந்து படைத்திடுவான் வாணிபதி

        மெதுஅரவின் மேலுறங்கிக் காத்திடுவான் பூமகளோன்

        இதுமாந்தர் கண்(டு)இயங்கா(து) இராவண்ணம் களிநடனம்

        பொதுநடுவில் ஆடிஎன்றும் புரப்பைஎம(து) இதயநலம்!

        (புரப்பை  = புரப்பாய், காத்திடுவாய்; இதயநலம் = cardiac health) 
           

Saturday, September 6, 2014

இதயத்துள் இருப்போன்

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


​ 
<> இதயத்துள் இருப்போன் <>


இதயத் துள்ளே இருந்ததனை
.. இயக்கும் கூத்தா! உன்மகிமைக்  

கதையை அன்றி வேறெதுவும்
.. கருதா வண்ணம் அதனைக்காத்(து) 

உதயத் தெழுமோர் கதிரவனாய்
.. உன்றன் ஒளியால் விளக்கிஅதை   

எதையும் தாங்கும் திறம்படைத்தே  
.. இருக்கத் துணைசெய் தருளுவையே!

அனந்த் 
6-9-2014

Friday, August 22, 2014

என் மகிழ்ச்சி


திருச்சிற்றம்பலம்





<> என் மகிழ்ச்சி <>

மலையு முண்டு பனியு முண்டு மங்கை உடலில் பாதி உண்டு
... மகிமை வாய்ந்த மைந்தர் உண்டொர்   அணியாகக்

கலைகு றைந்த மதியு முண்டு கங்கை தலையில் அலைவ துண்டு  
.. கணங்கள் உண்டு படையு முண்டிங்(கு)  இவையோடு      

தலைகள் ஐந்து தாமு முண்டு தாவி ஏற விடையு முண்டு
.. சததம் ஆடச்  சதிரு முண்(டு)இவ்    விதமான

நிலையில் இந்த நீசன் பாலும் நேச முண்டி வர்க்(கு)என் றெண்ணி   
.. நிதமும் அந்த நினைவில் நீந்தி         மகிழ்வேனே.

(சததம்= எப்பொழுதும்; சதிர் = நாட்டிய சபை; பதின்மூன்று சீர் ஆசிரிய விருத்தம், வாய்பாடு: 1, 9 சீர்கள் புளிமா, மற்றவை மாச்சீர், இறுதிச்சீர் புளிமாங்காய்; )

அனந்த் 22-8-2014

Friday, August 8, 2014

நாடி வந்தேன்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 





                          <> நாடி வந்தேன் <>

ஆசையொடு கோபமும் அகந்தையும் மோகமும் ஆனதோர் அசுரர் கூட்டம்
.. அறிவெனும் தீயிடை அழிவெனும் சிதையிலே எரிந்துவெண் சாம்ப ராகி

நாசமுறு வண்ணமாய் நாத!நின் நாமமென் நாவிலே நிலைக்க அருள்வாய்
.. நாதமாய் விந்துவாய் நாடுபல் உருவமாய் நானிலம் விண்ணு மாகி

ஈசனென இலங்குமுன் ஏற்றமிவ் வேழையேன் அறிகிலேன் ஆயி னும்நீ
.. எளியனாய் நின்னடி ஏத்துவோர்க்(கு) இரங்கிடும் இயல்பினன் என்று போற்றும்

நேசர்பலர் சொல்லைநான் நிசமென நம்பிநின் நீள்கழல் நாடி வந்தேன்
.. நிலவொடு தண்புனல் நிலவிடும் சடைய!பொன் அம்பலத் தாடு வோனே.  
    
..அனந்த்  8-8-2014
(பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
வாய்பாடு: கூவிளங்காய் விளம் விளம் விளம் விளம் மா மா
விளம் விளம் விளம் விளம் விளம் மா மா)

Wednesday, July 23, 2014

உன் விளையாடல்


இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்



<> உன் விளையாடல் <>

என்னுள்ளே குடிபுகுந்து நீஎன்னை இயக்கிவைப்பாய்
... இதனைநான் உணராமல் இருந்திடவும் செய்திடுவாய்

முன்னைநாள் நல்வினைகள் முந்திவரும் அத்தருணம்
... முகம்காட்டி, உடன்மறைவாய்; முயன்றுன்னைத் தேடுகையில்

நன்னெறிக்கு வழிகாட்ட நல்லோரின் துணையளித்து
... நடமொன்றென் நெஞ்சகத்தில் நடப்பதைநான் காணவைப்பாய்

பின்னரொரு திரையின்பின் ஒளிந்தென்னை அழவைப்பாய்
... பெரும்பற்றப் புலியூரா! போதும்விளை யாடல்ஐயே!

... அனந்த்
23-7-2014

Thursday, July 10, 2014

வழி காட்டுவயோ?


இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம் 


<> வழி காட்டுவயோ? <> 

தடவித் தடவி வழிதேடிச்
.. சளைத்த குருடன் போலுன்னை

அடையும் வழியைத் தேடுகிறேன்
.. அதனைக் கண்டும் மூன்றுவிழி

உடையோய்! வாளா திருப்பாயோ?
.. உனக்கோர் பார்வைக் குறையுண்டோ?

நடனம் புரிவோய்! நான்மாயும்
.. நாளும் வருமுன் அருளாயோ? 

அனந்த்
10-7-2014

Tuesday, June 24, 2014

காலில்லாத் தெய்வம்


திருச்சிற்றம்பலம்


<> காலில்லாத் தெய்வம்  <> 

காலில்லாத் தெய்வம் களிநடனம் ஆடுவதும்
தோலில்லா மங்கைஅவன் தொங்குசடை நாடுவதும்
பாலில்லா அப்பெம்மான் பால்பத்தர் கூடுவதும் 
ஏலும்பார் இங்கே இனிது.

24.6.2014

விளக்கம்-
காலில்லாத் தெய்வம்நகைச்சுவைக் கோணத்தில்தெய்வம் என்னும் சொல்நெடில்எழுத்திலுள்ள ”கால்” குறி இல்லாதிருக்கும்
உட்பொருள்கால் என்பது காலம்இடம்அளவுமூலம் ஆகியவற்றைக் குறிக்கும்இவையாவும் இல்லாப் பரம்பொருளன்றோ நடராசப் பெருமான்?
தோலில்லா மங்கைஇது கங்கையைக் குறிக்கும்மேலெழுந்தவாரியாக இது நதியானஅவளுக்குப் புறத்தோல்/உடல் இல்லை என்பதைச் சுட்டும்உட்பொருள்தோல் என்பதுதோல்வியைக் குறிக்கும்சிவபெருமானால் அவரது தலைமுடியில் ‘அடக்கப்பட்டவள்என்பதனால் கங்கை தோல்வியடைந்தவள் என்று கருத வேண்டாம்அடிமுடியில்லாஇறைவனின் தலையில் இடம் பெறும் பேறு பெற்றது பெறற்கரிய வெற்றிப்பேறல்லவோ?மேலும்உமையவளைத் தன் மேனியில் இடப்பாகத்தில் வைத்த பரமன்கங்கையாளைத்தலைமேல் வைத்துக் கூத்தாடுகின்றான் அல்லவா?    
பாலில்லாப் பெம்மான்இதுஆண்-பெண்உயர்ந்தது-தாழ்ந்ததுஅடி-நடு-முடி,இங்கு-அங்கு என்ற பாகுபாடு இல்லாத இறைவனைக் குறிக்கும்.  ஏலும்இயலும்.

Tuesday, June 10, 2014

வாழ்ந்து போவாய்


திருச்சிற்றம்பலம் 


<> வாழ்ந்து போவாய் <>


ஊனாரும் உடலமே நான்எனும் உணர்வுடன்
... உலகினில் வளைய வந்திங்(கு)
.....உறுதுன்பம் தாளாமல் உனதடி யார்சொலும்
....... உரைகளைச் செவிம டுத்து

நானாரென்(று) அறிந்திடத் தனிஇடம் ஒன்றைநான்
... நாடியே அமருங் காலை
.....நானாவி தங்களில் நாயினேன் நெஞ்சினில்
..... நடமிடும் நினைவின் ஊடே

ஏனோஉன் பாலொரு கணப்பொழு தாகிலும்
.... என்மனம் ஏகி டாமல்
......இங்கேநான் படும்துயர் ஈச!நீ அறிந்திடா(து)
........இருப்பது நியாய மாமோ?

தானாகச் சென்றுவல் விடத்தினை உண்ணுவாய்
..... தடியடி ஏற்று நிற்பாய்
....... தமியேன்என் மனத்தினில் ஓர்முறை தோன்றிடத்
..........தயங்குவாய் வாழ்ந்து போவாய்!

10-6-2014

Monday, May 26, 2014

களிப்பின் காரணம்

    திருச்சிற்றம்பலம்

Inline image 1
     
               <> களிப்பின் காரணம் <>

கையிலோர் ஓட்டை ஏந்திக் காளைமேல் ஊரைச் சுற்றும்
கைலைவாழ் ஈசா! உன்னைக் கண்டபேர் ஆண்டி என்றே

ஏசினும் மதியா(து) என்றும் இளநகை முகத்தோ(டு) உள்ளீர்
காசினி தன்னில் காணாக் களிப்பிதன் கார ணம்என்?

ஆசையாய் மணம்பு ரிந்த அன்னைபால் பெற்ற அன்ன
வாசமுன் மனத்தில் என்றும் வலம்வரும் இன்பத் தாலோ?*

கேசவன் பிரமனுக்குக் கிட்டிலாப் பேறாய் உன்னை
நேசமாய் இருமைந் தர்கள் நித்தியம் அணைப்ப தாலோ?

சிரத்திலே தாங்கும் கங்கை சிந்திடும் புனலின் தண்மைக்
கரத்தினால் தழுவும் இன்பம் கண்டதால் வந்ததோ? மால்

சோதரி யாளின் கையைச் சொக்கனாய் வந்து பற்றிப்
பூதலம் ஆள வாய்த்த பொற்பினை நினைப்ப தாலோ?

ஈதெலாம் கார ணந்தான் இருப்பினும் இறையே! கான்வாழ்
மாதவர் தம்மில் மேலாய், மாசிலா நால்வர் உன்மேல்

காதல்மீக் கூர்ந்து நெஞ்சம் கசிந்துகண் ணீரும்மல்கிப்
போதொடு நீர்சு மந்து புகுந்துனைப் பித்தா என்று

வாதினில் அழைத்துப் பின்னர் மற்றொரு பற்றில் லேனென்(று)
ஓதிநீ எங்கும் யாண்டும் ஏகிட ஒட்டா துன்றன்

பாதஞ்சிக் கெனப்பி டித்த** பக்தியால் விளைந்த தென்பேன்
நாத!நின் திருமுகத்தில் நடமிடும் நகைய தாமே!


{*பிக்ஷாண்டிக் கோலம் ஏற்ற சிவபெருமான் காசியில் அன்னபூரணியிடம் முதல் பிச்சை பெற்றதைக் குறிப்பது.
** திருஞான சம்பந்தர் – காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி (3.49.1)
அப்பர்- . மாதர்ப் பிறைக்கண்ணியானை.....போதொடு நீர்சுமந்தேத்தி (4.3.1)
சுந்தரர் – மற்றுப் பற்றெனக்கின்றி (7.48.1)
மாணிக்கவாசகர்- உம்பர்கட் கரசே.. சிக்கெனப் பிடித்தேன் (8.37.1) }

.. அனந்த் 26-5-2014

Monday, May 12, 2014

கால் மாற்றிய காரணம்


 <> கால் மாற்றிய காரணம் <>

   
                         திருச்சிற்றம்பலம்
 
அல்லொடு பகலென ஐய!நீ தில்லையில் அம்பலம் தன்னில் உன்றன்
... ஆடுகால் இடதுபால் ஆகவே கொண்டதை அன்றொரு புலவ னார்தம்

சொல்லிலே அங்கதம் தோய்த்தும(து) இடதுகால் முடமென ஆன தென்று
... தூற்றிய பின்னர்உம் தூக்கிய தாளினை வலமென மாற்றி னீரோ?*
இல்லையேல் ஆலவாய் ஈசனாய் நீபுரி எழில்நடம் கண்ட மன்னன்
.. 'இடதுகால் வலித்திடா திருந்திட வலதுதாள் ஏற்றுவீர்!' என்ற தாலோ?**

கல்லிலோர் லிங்கமாய்க் காட்சிநீர் தந்ததன் களைப்பெலாம் தீர மன்றில்
... காலிரு பாலுமாய்க் களிநடம் புரிவதே காரணம் அறிவன் யானே!
  
...அனந்த் 11/12-5-2014

* இது பாவவிநாச முதலியார் என்னும் புலவர் இயற்றியுள்ள ஒரு அழகான பாடலைக் குறிப்பது: http://inisai.wordpress.com/2010/06/12/kaalvannam/ ** இது இராசசேகரன் என்னும் பாண்டிய மன்னனின் வேண்டுகோளைக் குறிப்பது. இதைப்பற்றி டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தந்துள்ள அருமையான தகவலை (பரஞ்சோதி முனிவரின் அற்புதப் பாடல்கள் உட்பட) இங்குக் காணலாம்: http://www.treasurehouseofagathiyar.net/00800/870.htm

Saturday, April 26, 2014

<> விந்தை நடனம் <>


                      திருச்சிற்றம்பலம்

                 

                     <> விந்தை நடனம் <>

(சந்த வண்ண விருத்த வேந்தரான குரு அருணகிரிநாதரின் ’பூதவேதாள வகுப்பு’ அடிக்கு 160 சீர்களும், 10 சந்தக் குழிப்புகளும் கொண்ட வியக்கத்தக்க படைப்பு. அதன் முதல் இரண்டு சந்தக்குழிப்புகள் கீழ்வரும் இருசந்த வண்ண விருத்தப் பாடலில் கையாளப்பட்டுள்ளன.)

சந்தக் குழிப்பு: 
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன  தனதான

சடையில் உலவிடு புனலி னொருதுளி

.... தவறி அருகினில் துயிலு(ம்) முருகனின்
...தலையி லேவிழு மென்றுக ரங்கொடு
..... தனயன் மேனிக ரந்தென(து) இன்றைய    விரிவான

நடன முறையினில் புதிய தொருவகை
.... நளின கரணமி தெனவொர் நகையொடு
...நவிலு நாயக! நின்செயல் கண்டுமை
.... நலமி தேயென நம்பிட, மன்றினை        விரைவாக

அடையு முனதடி யவரு மமரரும்
... அரியு மயனுமிவ் வரிய நிகழ்வுகண்(டு)
...அடட! ஈதொரு விந்தையெ னும்படி
... அழகு மேவுந டந்தனை உன்னிடும்        படியாகக்

கடைய னெனையுமொர் கணமுன் கரம்வழி
... கருணை மழையினில் நனைய அருளுவை
...கயிலை யேயிஃ(து) என்றெவ ரும்புகல்
... கனக மாசபை தன்னில்வி ளங்கிடும்       பெருமானே!

பாடலின் பின்னணியும் பொருளும்: கயிலாயத்தில், சிவபெருமான் நடம்புரிகையில் தமது சடையிலுள்ள கங்கையிலிருந்து நீர்த் திவலைகள் கீழே சிந்துவதைக் கண்டவுடன்,  அவை அருகில் ஆழ்ந்து உறங்கும் குழந்தை முருகன் மீது விழாதிருக்கத் தமது கையால் குமரனின் உடம்பை மறைத்தவாறு நாட்டியம் ஆடுகிறார். அவரது நடனத்தைப் பார்த்தவாறு பக்கத்திலே அமர்ந்திருக்கும் உமை அன்னையிடம், ஆடலரசர் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு, தாம் மேற்கொண்ட இந்தக் கை அசைவு ஒரு புதிய வகையைச் சேர்ந்த அழகான பரத நாட்டியக் கரணமாகும் எனக் கூறுகிறார். அதைக் கேட்ட மலைமகளும், இது நல்லதொரு கரணமே என நம்புகிறாள். இந்த அரிய காட்சியைக் காண விரைந்து வந்த சிவனடியர்களும், தேவர், பிரமன், திருமால் ஆகியோரும், ஆஹா, இது விந்தையே! என அரனைப் புகழ்கிறார்கள்.
கயிலையை நிகர்த்த தில்லை மாநகரில் பொன்னம்பலத்தில் திகழும் நடராசப் பெருமானே! அறிவிலும் ஒழுக்கத்திலும் கீழோனான நான் மேலே சித்தரித்த காட்சியை என் உள்ளத்தில் நினைத்து நற்கதி பெற, நடனம் புரிகின்ற உன் கரம் வழியாக ஒழுகும் கருணை மழையில் நான் நனையும் பேற்றை அருள்வாயாக.

.... அனந்த் 26-4-2014