Sunday, March 17, 2019

புகல் அவனே

                                 திருச்சிற்றம்பலம்



                                 <> புகல் அவனே <>


                 


உடனுமை அமருவ(துஇடத்தினிலே உலவுவ தடியர்தம் மிடத்தினிலே
அடல்வெளிப் படுமொரு போர்நடுவே* அருள்வெளிப் படுந்துதிப் போர்நடுவே
மிடறினில் விரிகடல் உறைவிடமே விழைவது பனிமலி உறைவிடமே 
உடையென அணிவதவ் வம்பரமே உருவரு வடிவுசி தம்பரமே.
(*திரிபுரமெரித்தது)

காமனை எரிப்பது மவன்கண்ணே கருணை உறைவது மவன்கண்ணே
நாமமோர் ஆயிரம் உடையவனே நாடுவன் புலியதள் உடையவனே
மாமது ரைக்கதி பதியவனே மறைநிதம் புகழ்பசு பதியவனே
சேம மளிப்ப(து) அவன்பதமே சீரடி யார்க்குறும் சிவபதமே.
(பதம் = பாதம், பதவி)  

அருமறை புகன்றிடும் பரனவனே யாவிலும் நிறைதிகம் பரனவனே
இருவர்முன் அறியவொ ணாதவனே இருத்திடு மொருகண்ணி லாதவனே
அருளொளி திகழ்தின கரனவனே அடியவர் புகழுசங் கரனவனே
குருவடி வுடனறம் புகலரனே கும்பிடு பவர்க்கொரு புகலரனே.

..அனந்த் 18-3-2019 சோ(மவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்)


Saturday, March 2, 2019

திருக்கோலத்துள் ஒடுக்கம்


                                         திருச்சிற்றம்பலம் 

                               

                    <> திருக்கோலத்துள் ஒடுக்கம் <>

கயிலைமலை மீதமர்ந்(து)இவ் அகிலமெல்லாம் ஆளும்நீல 
.. கண்டனின்  பெருமை சொல்லப் போமோ? – அன்பர்
துயரமெலாம் தீயிலிட்ட தூசியென ஆக்குமந்தத்
... தூயனுக்கு யாரும் இணை ஆமோ?

வெண்பனிமேல் செம்பவள மேனியதன் பாதியினில்
மின்னொளிர் மரகதப்பெண் ணோடு - வீற்றுத்
தண்மதி குளிர்புனலும் செஞ்சடையில் தாங்குகின்ற
சங்கரனைப் பல்வகைப்பண் ணோடு

அழகுதவழ் பாடலிலே அடியவர்கள் ஆயிரமாய்
.. அனுதினமும்  சீருரைத்தல் காதால் கேட்டால் 
பழவினைகள் யாவும்கதிர் பட்டபனி போலழிந்து
.. பக்திவெள்ளம் நெஞ்சில்பெரு காதா? 

தேவர்முனி மாலயன்முன் சேவடியைத் தூக்கியவன்
தில்லையிலே ஆடும்வகை பார்த்தால்அண்டம்
யாவையும் அவன்வசமாய் ஆட்டுவிக்கும் மாயம்தன்னை
அறிவதற்கு ஆசைவரும் யார்க்கும்

உருவுடன் அருவுருவின் உண்மையைப் பரவெளியில்
உலகினர்க்(கு) உணர்த்தி நிற்கும் கோலம்தன்னில்
உருகிநிற்கும் வேளையிலே ஊர்மறையும் பேர்மறையும்
உணருவோம் அவன்புரியும் ஜாலம்!

(காவடிச்சிந்து மெட்டில் அமைந்தது; ஒலிப்பதிவைக் கேட்க:  https://drive.google.com/file/d/1LI9jCitmbrZTs8jBz0zSACNa-nrFaYj5/view?usp=sharing
)

அனந்த் 3-3-2019 பிரதோஷ நன்னாள்




Sunday, February 17, 2019

என் பரிபவம்

                                        திருச்சிற்றம்பலம்


              


                                       <> என் பரிபவம் <>


நாட்டார் வியந்திட நாற்கவி புனையலாம் நானிலம் பவனிவரலாம்
நற்றுணை சேர்க்கலாம் நவநவ சித்திகள் ன்குகை வரல்நிகழலாம்

சேட்டை புரிந்திடும் சிந்தையைத் தேக்கியுன் திருவடி யிணைநிலைத்திடச்
.. செய்வதின் மேலொரு திறனெதும் இல்லையே தில்லையில் கனகசபையில்

ஆட்டை நிறுத்திடா வண்ணமாய் ஐந்தொழில் அழகுறப் புரியுமையனே
அன்னையும் நீயுமாய் அடங்கிடா தலையுமென் மனத்தினால் அடியனேன்படும்

பாட்டைக் கண்டிவன் நமதுசேய் எனும்அருட் பார்வையைப் பதித்திடுவையேல்
பட்டென அந்தவோர் கணத்திலென் பரிபவம் யாவுமே பறந்தொழியுமே.

(ஆட்டை = ஆட்டத்தை; பரிபவம் = இழிவு; கவலை, அவமானம்;
பன்னிருசீர் ஆசிரிய விருத்தம். தே/புளிமா விளம் விளம் விளம் விளம் கருவிளங்கனி)

அனந்த் 17-2-2019 (பிரதோஷம்)

Friday, February 1, 2019

என்னை மயக்கியோன்

திருச்சிற்றம்பலம்




















<>  என்னை மயக்கியோன்  <>   
   
படியா திருந்தேன் பரமநின்றன்
.. பாங்கைப் பலவாய்ப் பரிந்துரைத்த
அடியார் சொலையும் அலட்சியஞ்செய்(து)
.. அடியேன் இருந்த அவ்வேளை
துடியார் கரமும் அழற்கரமும்
… தூக்கிய பதமும் காணவைத்துன்
வடிவார் நடத்தில் மயக்கிஎனை
.. வரித்த கருணைக் கிலையிணையே.


புரிதற் கரிய பூரணமே
… புன்மை யேனுன் புகழுரைக்க
உரிய நலங்கள் ஒன்றேனும்
… உடையேன் அல்லன் எனவறிந்தும்
பரிவோ டுன்றன் பதமலரைப்
… பார்க்கும் வாய்ப்பை நல்கினைநீ
நரியைப் பரியாய் மாற்றியபின்
.. நடந்த கதைபோல் இதுவாமோ*?  

(*மாணிக்க வாசகருக்காக இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலில்குதிரைகளாக மாற்றப்பட்ட நரிகள் மீண்டும் தம் சுயஉருவைக் கொண்டதைச் சுட்டியது.)

இனிநமைப் பிரியா னெனஎண்ணி
.. இறுமாப் பில்நான் திளைக்குங்கால்
தனிமையில் என்னைத் தவிக்கவிட்டுச்
.. சாலத் தொலைவில் மறைந்திடுவாய்
எனைநீ இதுபோல் அலைக்கழித்தல்
.. னோ எனநான் அழுகையிலே
பனிமலை உறைவோய்! மனமிளகிப் 
.. பரிந்தென் னுள்ளே புகுவாயே.

என்னுள் நீநின் றாயேல்நான்
.. உன்னுள் உளனாய் ஆவேனென்(று)
உன்னும் போதில் உவகையெனும்
.. ஓதத் தில்நான் மிதந்திடுவேன்
என்கண் மணியே! என்னுயிரே!
.. எல்லை யில்லாப் பெருவெளியாம்
பொன்னம் பலத்துப் பொன்னே!என்
.. பொல்லா இறையே! பூரணமே!.

அனந்த் 2-2-2019 (சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.)

Friday, January 18, 2019

நன்றாமோ?


                                         திருச்சிற்றம்பலம்


                                 <> நன்றாமோ? <>



தீவிடம் ஐயன்உன்னைத் தீண்டாமல் காத்தவள்முன்
நீவிடமம் செய்தல் நியாயமோ ஆவியலை
காட்டிலவள் அச்சமுறக் ழுதுகள்முன் ஆடலுமோர்
வீட்டில் விருந்தாகப் பாலகனை வேட்டுவதும்
ஓட்டாண்டி வேடத்தில் ஊரெல்லாம் சுற்றுவதும்
*சேட்டைசெய்து மங்கையர்தம் செயல்மறக்கச் செய்வதுவும்
சேட்டமுள செய்கைகளோ செப்பு

(தீவிடம் = தீய விஷம்; ஆவி = சிதையிலிருந்து எழும் புகைகழுதுகள் = பேய்கள்; சேட்டம் = மேன்மை, பெருமை, திறம், தலைமை- வடமொழி: ச்ரேஷ்டம்)

*முனிவர் மனைவியரைப் பிக்ஷாண்டியாகத் தாருகவனத்திலும், வளையல் வியாபாரியாக மதுரையிலும் மயக்கிய திருவிளையாடல்களைக் குறிப்பது.)
                 
அனந்த் 18-1-2019 பிரதோஷம்