Saturday, June 11, 2022

சித்பரம்

 திருச்சிற்றம்பலம்

                   <>  சித்பரம் <>



4a8c3d3b-878b-4ca0-b3f1-67312863b166.jpg

 


கணமெனக் காட்டிவாழ் காலம் அறுத்திடும் கத்தியெனக்

..கருத்தினில் உறைத்திடாக் கடையன் என்னுளே காலமெல்லாம்

 

உணர்வென என்றும்நீ உறையும் உண்மையை ஓர்ந்திலனாய்

.. உலகினில் உலவிடும் வேளை உன்னடி யார்துணையால்

 

தணனிகர்ச் சடையினுள் தண்ணீர் தாங்கிடும் சங்கர!நின்

.. தாளிணை சேர்ந்திடுந் தகைமை தந்தனை தாண்டவம்செய்

 

வணமதில் மயங்கிடு வோர்தம் மனத்துளே மாற்றமின்றி

.. வாழ்ந்திடு சித்பர வடிவே தில்லைவாழ் மாமணியே.

 

(வட அமெரிக்காவில், இன்று, 11-6-2022, பிரதோஷ நாள்.; தணனிகர் = தணல் நிகர், நெருப்பையொத்த.)

 

… அனந்த் 11-6-2022

Thursday, May 26, 2022

 

  திருச்சிற்றம்பலம்


                                     <> நிசமறிதல் <>      

             


பாரிலே பார்த்திடும் பற்பல காட்சியுள் மனத்தினைப் பதித்த லாலே

.. பட்டிடும் துன்பொடு பலசுகம் யாவையும் மெய்யென நினைக்கும் மாந்தர்

 

ஓர்கணப் போதுதாம் உற்றிடும் உணர்வுகள் உதித்திடும் இடமே தென்றே

.. ஓர்ந்திடில் காண்பர்தம் உள்ளுறை இருப்பெனும் திரையிலே காட்சி யாக

 

நேர்வன யாவுமே நினைவுகள் சேர்க்கையே அன்றிமெய் அல்ல வென்னும்

.. நிசத்தினை அறிந்துதம் நினைவுகள் நானெனும் அகந்தையின் ஆட்ட மென்று

 

தேர்ந்துநின் அருள்நிறை திருவடி சேர்ந்தவர் உன்நினை வன்றி வேறு 
சிந்தனை துறந்துதம் செயல்களை ஆற்றிடின் சிவபதம் அடைகு வாரே.

... அனந்த் 27-5-2022

Thursday, May 12, 2022

 திருச்சிற்றம்பலம்

 

                                 <> குறையேது? <>       

 

                  

                               

           

என்றுமெம் நெஞ்சினுள் இருப்பென இலங்கிடும் ஈசனே உன்னை எம்மால்

.. எளிதினில் அறிவதற் கியன்றிடா வண்ணமாய் எம்மையிவ் ­உலக வாழ்வே

 

நன்றென எண்ணிட நாதநீ வைத்தொரு நகையுடன் தில்லை மன்றில்

நாட்டியம் ஆடிடும் நயத்தினில் எம்மையாம் மறந்தெம துள்ள கந்தை

 

சென்றுன காலடி தன்னிலே சிதைந்தழிந் துன்னுடன் சேரக் கண்டோம்

 தில்லையே சிவபத எல்லையென் றிவ்வணம் மெய்ப்பொருள் தெரித்து நிற்போய்!

 

என்றுமுன் னடிமையான் என்னுமோர் மதர்ப்பிலே ஏழைநான் மிதந்து நிற்பேன்

.. இச்சக வாழ்வினில் எக்குறை வரினுமென்? நீஉளில் இருக்கு மட்டே.

 

(சென்றுன = சென்று உனது; தெரித்து = தெரிவித்து.)

 

அனந்த் 13-5-2022

Wednesday, April 27, 2022

<> மெய்ப்பொருள் <>

திருச்சிற்றம்பலம்



நிலமொடோ ரைந்தாய்  நேரினில் காணும்

நிகழ்வெலாம் மாயைகொண் டியக்கி

.. நீங்கிடா தவற்றுள் நிலைத்திடும் இருப்பாய்

……. நினைவினைத் தாண்டிய நிலையில் 

 

அலகிலா வெளியில் அகன்றிடா அறிவாய்

அனைத்துளும் உறைந்திடும் மகிழ்வாய்

.. ஐயநீ திகழும் அதிசயம் தன்னை

…….. அகிலம்வாழ் அனைவரும் அறிய 

 

நிலவுலாச் சடையுள் நீரினை  நிறுத்தி

….நிருத்தமொன் றாடியோர் கரத்தால் 

.. நின்னடிச் சாரும் நெறியினைக் காட்டும்

…….நேர்த்தியை நுவன்றிடப் போமோ 

 

பலவுமாய் ஒன்றாய்ப் பரந்திடும் பரமே

பார்த்திடத் திகட்டிடா அழகே

.. பணிந்துன புகழைப் பரவியான் இந்தப்

……. பாரினில் வாழ்ந்திட அருளே.  

 

(உன புகழ் = உனது புகழ்.)

விளக்கம்: ஐயனே! உன்னுள் சக்தி வடிவில் உறையும் மாயையால், விண், காற்று, தீ, நிலம், நீர் ஆகிய ஐம்பூதங்களையும் அவற்றின் சேர்க்கையால் இவ்வுலகத்தையும் உருவாக்கி அவற்றை இயக்கிடும் நீ, அவை யாவுள்ளும் ’இருப்பு’ (‘சத்’, உள்ளது) என்னும் தத்துவமாகவும், மனத்திற்கெட்டாத நிலையான எல்லையில்லாப் பரவெளியில் அறிவு (’சித்’) என்னும் தத்துவமாகவும், எல்லா உயிர்களுக்குள்ளும் மகிழ்வு (ஆனந்தம்) என்னும் தத்துவமாகவும் (-சச்சிதானந்த வத்துவாய்த்-) திகழ்கின்ற அதிசயத்தை உலகினர் யாவரும் அறியும் வண்ணம், சந்திரன் உலவும் உன் சடையினுள் கங்கை நீரை அடக்கியவாறு, தில்லைத் திருத்தலத்தில் நீ நாட்டியம் ஒன்றை ஆடி, உன் வலது கரத்தினால் உனது திருவடியைச் சார்தலே முத்தியடையும் வழியாகும் எனக் காட்டி நிற்கும் சிறப்பைச் சொல்லால் உரைக்க இயலுமோ? ஒன்றெனவும், பலவெனவும் பரந்து நிற்கும் காணத் திகட்டாத அழகுருவானவனே! உன்னைப் பணிந்து போற்றி நான் இப்புவியில் வாழுமாறு அருள்வாயாக.    

 

... அனந்த் 27-4-2022

Wednesday, April 13, 2022

 திருச்சிற்றம்பலம்

        <> நாமே சிவம் <>

                                             

Arunachaleshwarar + aNNaamalai Dheepam.jpg

                                                                                                                              

பாசம் பசுபதியைச் சார்ந்தபின் பண்டைவினை

மாசு மறைந்தழியும் மண்ணிதனில் - கூசிடுதுர்

வாசம் மலிகழிநீர் வாரிதியைச் சேரினுண்டோ

நீசநீர் என்னும் நிலை?  

(வாரிதி = கடல்; நீச = இழிந்தஈனமானதாழ்ந்த)  

 

நிலையான நின்மலனாய் நிற்போனைப் பற்றின்

தொலையாதோ தொல்லைதரு பாசம் – மலையொன்றில்

உண்ணா முலையாளோ டுள்ளான் உருவருவாம்

அண்ணா மலையாய் அவன்.  2

 

அவனியில் தேடி அலையாதீர் நும்தம்

பவநோய் பசுபதியைப் பாடத் – துவண்டழிந்து                                                        

சச்சிதா னந்தப் பரசிவத்தி லொன்றியபின்

நிச்சலமே நிற்கும் தனித்து.  3.  3

 

தனித்தொளிரும் சச்சித் சுகமதனை நாடாமல்

அனித்தச் சுகத்திற் கலைந்து – சனித்த

பயன்பெறாப் பேதையராய் ஆகா தரன்அம்

புயத்தாளைக் கொள்வாய் புகல்  4

(சத் = இருப்பு, உண்மை; சித் = அறிவு.)  


கல்லாலின் கீழே பவப்பிணி தீர்வழியைச்

சொல்லா சொல்லால் நவின்றஅந் – நல்லோன்

தனதடியார் நோய்தீர்க்கத் தந்த மருந்தைக்

கனகசபை உள்ளேசென்(று) உண்.  5

 

உண்ணீர் இருக்க உவர்ப்புநீர் தேடிநிதம்

கண்ணீர் வடிக்கும் கதைவிடுத்துத் – தண்ணீர்

தலைதாங்கும் சங்கரன்தாள் சார்ந்தென்று முள்ள

நிலையான இன்பத்துள் நில்.  6

 

நில்லாத நீரோட்டம் அன்ன நினைவுகள்

எல்லாம் எழுமிடம் ஏதென்று - சொல்லேதும்

இல்லாமல் உண்ணோக்கிச் சும்மா இருத்ற்குக்

கல்லாமல் கற்றிடப் பார்.  7

 

பாரொடு விண்ணும் பரந்த பரசிவத்தின்

சீரையுட் சிந்தித்(து) உணரலன்றி – யார்க்கும்

எடுத்துரைக்க ஏலா தெனவே குருவை

அடுத்தறிதல் ஆமே வழி.  8

 

வழிபடும் தேவனே மாறா இருப்பாய்

வழிகாட்டி உள்ளீர்த்து மாயை – அழித்தவனைச்

சேர்ந்திடச் செய்தபின் நானொழிந்து தானாதல்

நேர்ந்திடும்பின் நாமே சிவம். 9


சிவனேயாய்த் தோன்றுமெல்லாச் சீவனும் மெய்யில்

அவன்நிகழ்த்தும் ஆட்டமெனக் காணும் -– உவகைஉள்

ஊறும் உருவருவின் உண்மை தெளிவாகும்

பாறும்நம் பந்தபா சம்.  10


[மண்டலித்து வந்த அந்தாதிப் பதிகம்.]


 ...  அனந்த் 14-4-2022 பிரதோஷம். 

Monday, March 28, 2022

 <> ஊமையாக்கினாய் <>



a0b9a967-216a-442a-9167-c37f2556bc7d.jpg



தண்ணார்ந்த பொழில்வயல்சூழ் தில்லைவாழ் ஐயனுனைச்

.. சார்ந்தபல அடியவர்தம் சாற்றியசொல் கேட்டென்றன்

 

கண்ணாலுன் எழில்காணும் கருத்தொன்று கொண்டுனது

.. கனசபை சந்நிதியில் கைகூப்பி நின்றேனை

 

எண்ணாத வகையிலுன்றன் நேரெதிரில் நிற்கவைத்தென்

… எண்ணமெலாம் உன்னழகின் ஏற்றத்தில் கரைந்தழிய

 

உண்ணாடிச் சென்றுன்றன் உருவமெனை அழித்தவிதம்

… உலகோருக் குரைக்கவந்தேன் ஊமையென ஆக்கினையே.

 

.. அனந்த் 29-3-2022


Tuesday, March 15, 2022

சிந்தை கொள்வாய்

 



சிந்தை கொள்வாய்




அருகதையோர் துளிஉடையன் அல்லேன் ஆயின்

.. அரனுனது பெயர்கேட்ட அன்று தொட்டே

 

உருகியொரு முறையேனும் உளத்தால் நாயேன்

                     .. உரைத்திருக்க வாய்ப்புண்டென்(று) ஊகித் துன்றன்

 

திருவருளைப் பொழிந்திடநீ சிந்தை கொண்டால்

.. திருந்திஇனி உளநாளில் தினமும் உன்றன்

 

     திருவடிக்கீழ்க் கிடந்துருண்(டு) என்னைத் தேய்ப்பேன்

.. தீவினைகள் தீரும்வரை தில்லைத் தேவே.

 

                            ... அனந்த் 15-3-2022