Tuesday, July 24, 2018

தகாத செயல்


திருச்சிற்றம்பலம்

             <> தகாத செயல் <>


உகந்த தாகா(து) எனக்கருதும்
.. ஒருநஞ் சைநீ உண்டதொரு

தகுந்த செயலே அதுஉன்றன்
.. தயையைக் காட்டும்; மாறாக

அகந்தை என்னும் மதிமயக்கும்
.. அரும்நஞ் சொன்றை என்மனத்துள்

சகந்த னில்நான் பெறச்செய்தாய்
.. சம்போ! னோ இம்முரணே.


தொல்லை தருமென் மனத்துயரைத்
.. தொலைக்க வழியைக் கண்டுகொண்டேன்

எல்லை இல்லாப் பெருவெளியில்
.. எங்கும் யாண்டும் நிலைத்தாடும்

தில்லைப் பெரும! என்மனத்தைத்
.. திரும்பக் கொடுத்தேன் இனிஉன்னை

அல்லா லெங்கும் அந்தமனம்
.. அலையா வண்ணம் காப்பதற்கே.


காணும் எல்லாப் பொருள்களிலும்
.. கனக சபையின் நாயக!நீ

பூணும் சடையார் புனல்மதியும்
பொலியும் நுதலும் புன்சிரிப்பும்

தூணை நிகர்நின் தோள்களிலே
.. தொங்கும் அரவும் புலியதளைப்

பேணும் இடையும்  திருப்பதமும்
.. பிரியா வண்ணம் தோன்றவையே.


அனந்த் 24/25-7-2018.

Tuesday, July 10, 2018

பாடும் பேறருள்வாய்


   <>  பாடும் பேறருள்வாய் <>

        திருச்சிற்றம்பலம் 


நான்என் செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகியங்(கு) உள்ளிருக்கும்
தானும் உருகித் தனிமையே மிஞ்சிமெய்த் தத்துவமாம்
கோனில் கலந்தவன் கூத்தினில் சேர்ந்து குதிக்கையிலே.*  1.

கையில் துடியும் கனலும் அருள்பெறக் காலடியே         
உய்யும் வழியென் றுணர்த்தும் சமிஞ்ஞையும் உள்ளுருகச்
செய்யும் சிதம்பரச் செல்வனின் சீரடி சிந்தைவைத்தார்
வையம் வழங்கும் சுகத்தைப் பதரென வீசுவரே.   2

வீசிடுந் தென்றலும் வீணையின் நாதமும் விண்மதியின்       
தேசுடை வேனிலும் சேருதல் போன்றது செம்மலராம்             
ஈசனின் சேவடி நீழலென்(றுஅப்பர் இயம்பியதைப்       
பேசி உருகிடும் பேறதன் மிக்கதோர் பேறுளதோ?    3

உள்ளதாய் எல்லா உணர்வுளும் நிற்கும் ஒருபொருளை
உள்ளுளே காண உதவும் வகையினில் ஓருருவாய்த்
தெள்ளெனக் கண்முன் தெரிய நடமிடும் சிதம்பரத்தான்
உள்ளபோ திங்கே உரைப்பதற் கில்லை ஒருகுறையே.    4

ஒருங்கே இணைந்த உமையுடன் எல்லா உலகினையும்
தருங்கோன் புரந்தும் துடைத்தும் கரந்தும் தனதடியை
நெருங்கு பவர்கருள் நின்மலன் நெஞ்சில் நிலைத்துவிடில்
வருங்கொல் பவமெனும் மாய வலைவிழும் வாதனையே?    5

தனையே நினைந்து தலந்தொறுஞ் சென்றுநற் றண்டமிழ்ப்பாப்
புனைவார் உளத்தினிற் பூவாய் மலர்ந்திடும் புண்ணியன்நம்
வினையாம் விலங்கைத் தகர்ப்பான் எனவே விரைந்துலகீர்
முனைவீர் அருளாம் முகில்பொழி மாரியில் மூழ்கிடவே     6

மூவகை மாசினை முற்றும் அகற்றும் முழுமுதலாம்  
தேவனின் சீரில் திளைத்து மகிழ்ந்தவர் செந்தமிழின்
பாவகை யாவிலும் பற்பல வாகமுன் பாடியவை
நாவினில் நிற்கில் நமக்கிலை என்றும் நமன்பயமே.               7

பயன்களுள் மேலாம் பயனெது கேட்பின் பரமனவன்
நயங்களை உன்னி நயனம் நனைய நவநவமாய்
வியந்தவை நம்முள் விளைக்குமின் பத்தில் மிதந்தவன்றன்
வயமென நம்மை வரித்திடும் பேற்றை வழங்குவதே.      8.

தேனிகர் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்ததைச் செய்யுளிலே
நானிலத் துள்ளோர் நயக்க நிரப்பி நமையுமந்தக்
கோனவன் மேன்மையைக் கூறிட வைத்த குரவர்புகழ்
நானிவண் செப்பிட நாவொரு கோடியை நாடுவனே.      9

நாட்டார் அறிய நடம்புரி நாயக நானுமுன்சீர்
ஏட்டில் எழுதிட இச்சை கொளவகை ஈந்துனது
வீட்டை அடைந்திட வையென வேண்டுவன் வேதனும்மால்
தேட்டம் முடிவினில் தோன்றிய செம்மலைத் தெய்வதமே.  10

(செம்மலை = அருணாசலம், திருவண்ணாமலை).    
   
(*இங்குநான் என்பது காலத்திற்கும்  இடத்திற்கும் அப்பாலான நமது உண்மைச் சொருபத்தை அறியாமல்ஊனால் ஆன உடலையும் எண்ணக் கோவைகளால் ஆன மனத்தையும் நாமாகக் கருதும் நிலையைக் குறித்தது.)

அனந்த் 10-7-2018 பிரதோஷ நன்னாள்

Monday, June 25, 2018

எனக்கும் அருளினன்

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எனக்கும் அருளினன் <>

அடிமுடி யில்லா ஆதிப் பரமே
…. அடியேன் உன்றன் மலர்நிகர்த்த
அடிமுடி மேல்வைத் ததனால் உன்மெய்
… அடியார் கூட்டில் இசைந்துன்றன்
அடியிணை பரவும் வாய்ப்பைத் தந்தாய்  
…. அதனின் மேலுண் டோஉலகில்
அடிபல பெறினும் அஞ்சேன் யான்,உன்
.. அருளே எனக்குத் துணையாமே.

படியா மூடன் பயனொன் றில்லாப்
.. பதடி எனயா வரும்கூறும்
படியான் வாழ்ந்தென் நாளெல் லாம்யான்
.. பாழ்செய் தேன்கோ யில்வாயிற்
படியும் மிதியாப் பாவி யேனைப்
… பரம! ஏற்ற வகையாலிப்
படியும் விந்தை புரிவா யென்றிப்
பாரோர் வியக்கச் செய்தனையே. 

அப்பணி ஈசா அம்பிகை நேசா
.. அனுதினம் உன்னைத் தொழலென்னும்
அப்பணி யன்றி அடியேன் வேறொன்(று)
… அறியேன் பெரியோர் துதிகள்கேட்(டு)
அப்படி நானும் பாடித் துதிக்க
.. ஆவ லுடன்நீ ஆடரங்கின்
அப்படி முன்நின்(றுஅழுதென் உயிருன்
.. அடியில் சேர அருள்வாயே.
(அப்பணி – நீரை அணிந்தஅந்தத் தொண்டுஅப்படி முன் = அந்தத் திருக்களிற்றுப் படியின் முன்)

அனந்த் 25-6-2018   

Sunday, June 10, 2018

அறியாமையும் அருளே

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                                   திருச்சிற்றம்பலம்


          <> அறியாமையும் அருளே <>

பொறிவாய் புகுந்தவொர் புள்ளிமான் ஒத்துப் புலன்களிட்ட
நெறிவாய் நடந்துன் நினைவிலா நெஞ்சுடன் நித்தமும்பொய்
தெறிவாய் படைத்திட்ட தீயரைப் பற்றிய செய்திகளை
அறியா மையுமுன் அருளென் றடியேன் அறிகுவனே

அறிவம் அனைத்துமென் றார்சொலி னும்மஃ தகந்தையினோர்
குறியென் றறிந்தவர் கூட்டினில் சேராக் குணத்துடன்நன்
நெறியில் செலுமொர் நிலையெனக் கீவாய் நெளிசடையில்
தெறிநீர் நதியணி தேவசரணுன சேவடியே.   

அடியே கதியென் றனுதினம் உன்பால் அணுகிநிற்கும்
அடியார் துணையை அருளியிவ் வற்பன் அனுபவிக்கும்
செடியார் வினைப்பயன் தீரும் படியருள் செய்திடுவாய்
துடியார் கரத்தோய்தொழுவார்க் கிரங்கும் தூயவனே!

(உன = உனது; செடி ஆர்= துன்பம் நிறைந்த)
.. அனந்த் 11-6-2018
(படம்: திருமயிலைக் கபாலீச்வரர் ஆலயத்தில் சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜ மூர்த்தி)

Sunday, May 27, 2018

உபதேசம்

திருச்சிற்றம்பலம்
                  <> உபதேசம் <>


   ​                         ​
தருவடியில் குருவடிவில் சனகமுனி வருக்குனது
...தத்துவமு ணர்த்திடுசற் குருபர!நீ மண்ணுலகில்

அருணையிலே, ஆனந்த நடனமிடும் அம்பலத்தே,
...அசபைநடம் ஆடுதிரு வாரூரில் உன்வடிவின்

பொருளுணர்த்திச் சிவஞான போதம்பெறு வழியதனைப்
...புகட்டிநிற்கும் சூக்குமத்தைப் புரிந்தவர்வே றெதுவிழைவார்?

உருஅருஇல் லாவெளியேஉலப்பில்லா வெறுந்தனியே!
...உள்ளத்தின் உள்வதியும் உனையெனக்கும் உணர்த்துவையே

  
(அசபை = ஸோஹம் என்னும் இதயத்துள் இயங்கும் மந்திரம்உலப்பில்லா = அளவும் முடிவும்   இல்லாத

..அனந்த் 27-5-2018 பிரதோஷம்

Saturday, May 12, 2018

அணைத்திட வாராயோ?

திருச்சிற்றம்பலம்



  <> அணைத்திட வாராயோ?* <> 

பன்னெடுங் காலமாய்ப்  பணிந்துநான் வணங்கிய பாதமென் பாவங்கள்
..பாறிடு மாறுநீ செய்திடு நாளினைப் பார்த்திட லாகாதே
….பாவியென் ஆருயிர் ஏகிடின் பாருனைப் பழித்திட லாகாதோ?
…….பண்டுநின் னடியவர் கூறிய யாவையும் பயனில வாகாவோ?

என்னவன் என்னுயிர் என்றுனை நான்நிதம் எண்ணுவ தறியாயோ?
..ஏழையன் செய்பணி ஏற்றிடல் உன்நிலைக்(கு) இழிவெனக் கொண்டாயோ?
…..எவ்வகை யேனுமுன் இணையடி நீழலை எட்டுவ னெனுமாசை
……..என்னுளெ ழுந்துவ ளர்ந்தது மென்தவ(று என்றினிப் போகாதோ

உன்னிடில் யாவுளும் உள்ளதொர் உண்மையென் றுறைபவன் நீயலையோ?
உன்னிலும் அன்னியன் என்றுயான் எண்ணுவ(து) உன்செய லேயன்றோ?
….உன்னரு ளாலல தெவ்வகை யாலினி உய்வனென் றோராயோ?
……உள்ளெழுந் தூறிடு மன்பினில் ஊறெதும் உண்டெனக் கண்டாயோ?

அன்னையோர் மேனியில் பாதியை ஆள்வதுன் அடியிணை நாடிவரும்
அன்பர்தம் அழுகையுன் செவியினில் வீழ்ந்திடற் காகவென் றறியாயோ?
…..அன்றொரு மாணியின் அணைப்பினில் உளம்நெகிழ்ந் தருளிய பரமேசா
……..அற்பனேன் உன்மக வாமெனக் கொண்டெனை அணைத்திட வாராயோ?

(மாணி = பிரம்மச்சாரி, இங்கு மார்க்கண்டேயனைக் குறிக்கும்.)
(பன்னிரு சீர் ஆசிரிய விருத்தம்;
*அரையடி வாய்பாடுகூவிளம் விளம் விளம் விளம் விளம் கூவிளங்காய்)

12-5-2018 சனிப் பிரதோஷம்