<> உன் பாடு <>
திருச்சிற்றம்பலம்
ஓதம் தனில்கல் உடன்கட்டி ஆழ்த்தியுயிர்ச்
சேதம் விளைக்கத் துணிந்தோரை – வாதிட்டுப்
போதம் புகட்டிய புண்ணியர் போற்றியஉன்
பாதம்விழு வேன்பின்னுன் பாடு!
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
என்பாரென் பாரென எல்லாமும் தம்சொந்தம்
என்பார்க் கிலாதததோர் இன்பத்தை - என்பார்
அலங்க லணிந்திடு காடுறையும் ஐயன்
நலமறிவோர் காண்பார் நயந்து.
(என்பார் - என்று கூறுவார், என்பு ஆர் - எலும்பை அணிந்த; என் பார் - என்னுடைய நிலம்; அலங்கல் - மாலை; அணிந்திடு - அணிகின்ற, அணிந்து இடு.)
. .... அனந்த் 22-7-2025
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> மறவீரே <>
அம்மையுடன் அவனாடும் அழகினைநாம் தரிசிக்க
… அம்பலத்தை நாடுகையில் அவனோநம் அகத்துள்ளே
நம்மகத்தில் தான்நிதமும் நடிப்பதனைக் காட்டிநம்மை
… நாணமுறச் செய்திடுவான் நமைமறந்து துதிக்கையிலே
இம்மையொடு மறுமையுமே இல்லாத பெருவெளியில்
… இருத்திடுவான் இத்தகைய பெரும்பேற்றை அடைவதற்கு
வம்மின்இவ் வுலகீரே வழிபடுமின் அவன்தாளை
….வாழ்வெடுத்த பயனிதுவே மறவீர்நீர் மறவீரே
.... அனந்த் 23-6-2025
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
பொய்யுலகைத் தோற்றுவிக்கும் பொல்லாத மாயையினால்
வையமிதில் பிறந்திருந்து வாழுமிந்தப் புன்மையனைத்
தையலிடம் வைத்தபிரான் தன்னடியார் தமைக்காட்டி
உய்யும்வகை உணர்த்தியதை உரைத்திடவோர் மொழியின்றே.*
(*அன்பொடுஉன் நாமம்கேள் அன்பர்தம் அன்பருக்(கு) அன்பனாயிட அருள் அருணாசலா-ஸ்ரீரமண மஹர்ஷி)
. .... அனந்த் 23/24-5-2025
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> எந்நாளோ? <>
செழுங்கதிரொன்(று)
எழுந்ததெனத் திகழுமுன் திருமுகம்என்
.. சிந்தையுளே உறுதி யாக
அழுந்திடவைத்(து)
அதன்விளைவாய் ஐய!நீ அம்பலத்தே
.. ஆடுகின்ற ஆதிக் கூத்தின்
ஒழுங்கினிலே உறையுமந்த உண்மையைநான்… உணரு(ம்)வணம் .. செய்தெனக்குப் பரிந்து தாய்போல்
அழுங்குழவி
எனஇருக்கும் அடியவனுக்(கு) ஆனந்த
.. அமுதமளித் திடுநாள்
என்றோ?
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உம் பொறுப்பு <>
ஒருகணம் உமக்குநான் ஓய்வுத ராவண்ணம்
… உம்மிடம் நாள்தொறும் உறுதுயர் எல்லாமும்
திரும்பவும் திரும்பவும் செப்புதல் கண்டென்னைத்
… திட்டிநீர் ஒறுத்திடின் தேவரீர் உம்செய்கை
பொருத்தமே என்னலாம் ஆயிடின் புவியெல்லாம்
…. புரந்திடும் பொறுப்புமக் குள்ளதென் றுமதுதிருக்
கருத்தினில் கொண்டிடின் கருணைமே லிட்டென்னைக்
.. காத்திடத் துணிந்திடர் களையமுன் வாரீரோ?
. ..... அனந்த் 9-4-2025
திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> சீரை நிலைநாட்டுவாய் <>
போகத்தை நுகர்தல்யான் ஒழிக்க வொட்டேன்
.. புன்மையாம் செயல்களைப் புரிவேன் நித்தம்
ஆகத்தைப் பேணுவேன் அறிவைத் தேடேன்
.. ஆயினும் உன்புகழ் கேட்ட பின்னர்
போகத்தான் யான்விடேன் உன்றன் தாளை;
.. புல்லரைக் காத்தருள் புரிவோய்! பெண்ணைப்
பாகத்தில் வைத்துள பரமா! என்னைப்
.. பாலித்துன் சீர்நிலை நாட்டு வாயே.
அனந்த் 26/27-3-2025
இன்று மகாசிவராத்திரி சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> என் செய்வேன்? <>
ஆற்றா தரற்றும் அடியேனின் முறையீட்டை
ஏற்றாய்நீ ஏலா திருப்பதுமேன் - போற்றியுனை
விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்
கண்ணோக்க நேரமின்மை காரணமோ – தண்சடையில்
மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்
தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே – பாவியெனைப்
பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்
சற்றும் கிடைத்திலையோ சங்கரா – பற்றுதலை
ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த
வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்
ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்
ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் – பாட்டமுதை
அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்
கள்ளம் நிறைமனத்தைக் கண்டோ ஒதுக்கினைநீ
இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல் யார்க்குரைப்பேன்
என்செய்வேன் ஈசா இனி.
(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனே; வெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.)
(நேரிசைக் கலிவெண்பா. ஏற்றாய் = மாட்டை வாகனமாகக் கொண்டவனே; வெண்டிரையாள் = வெண்மையான அலையுள்ள கங்கையாறு.)
… அனந்த் 25-2-2025
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> மனைமாட்சி <>
நட்ட மானதொர் நயனம் கிட்டிட
… நாடி வேடனின் காலுதையைப்
பட்ட பின்னொரு பாட்டி முன்கரம்
.. நீட்டி ஆங்கவள் ஆக்கிவைத்த
பிட்டை உண்டிடப் பித்துக் கொண்டொரு
… பிரம்பத னால்அடி உண்டபல
கட்ட மாமிவை கண்டி ராயுனைக்
… காக்கும் மனைதுணை
வந்திடிலே.
..... அனந்த் 10-2-2025
திருச்சிற்றம்பலம்
<> தாளேனே <>
ஆற்றா தரற்றும் அடியேனின்
தொல்லையறத்
தோற்றா திருக்கத் துணிந்தனையோ
– போற்றியுனை
விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க
ஏழையென்னைக்
கண்ணோக்க நேரமின்மை காரணமோ
– தண்சடையில்
மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா
ளோடுன்னைத்
தாவி அணைக்கும் தளிருடலாள்
கூட்டினிலே – பாவியெனைப்
பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்
சற்றும் கிடைத்திலையோ சங்கரா
– பற்றியகை
ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம்
சுற்றிவந்த
வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்
ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன்
எனும்நினைப்பும்
ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர்
– பாட்டமுதை
அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்
கள்ளம் நிறைமனத்தைக் கண்டென்னை ஒதுக்கினையோ
இன்னுமுன் நெஞ்சம் இளகிலையேல்
என்செய்வேன் யார்க்குரைப்பேன் ஈசஇனித்
தாளேனே.
…
அனந்த் 10-2-2025