Tuesday, July 23, 2013

அருணையில் அற்புதம்

திருச்சிற்றம்பலம் 


<> அருணையில் அற்புதம் <>

சந்தக் குழிப்பு:
தத்தன தனதன தானா தனதன
..
தத்தன தனதன தானா தனதன
..
தத்தன தனதன தானா தனதன தனதானா

அற்பனில் கடையனென் றூரார் உரைசெய
..
அச்சம துடலினில் பாயா துணர்வெதும்
..
அற்றதொர் நிலையினில் ஆன்றோர் அவையினின்    நடுவேயான்

கற்றதில் கடுகினின் கூறா யினுமொரு
..
கற்பனை யதும்நிலை யாதே மறையவொர்
..
கற்சிலை எனஎனைக் காண்போர் நகைசெய               விடலாமோ?

அற்புதம் பலநிகழ் ஊராம் அருணையில்
..
அச்சுதன் அயனொடு காணா அடிமுடி
..
அத்த!நின் அருகினில் சார்ந்தோர் இடரது                    களைவோனே!

முற்றுமென் உடலுயிர் நீயாய் உணருமெய்
..
முற்றிய அறிவினை யானே பெறஎழில்
..
முத்தென ஒளிர்நகை மாதாதுணைவ!நீ                     அருளாயோ?

பொருள் விளக்கம்:  நூலறிவு இல்லாத கடையனாக இருப்பினும் திருவண்ணாமலையில் ஆதிப் பரம்பொருளாய் விளங்குபவனின் திறத்தை நினைத்து, அவனைச் சார்ந்தால் இந்த உலகத் தொடர்பான சிற்றறிவின் தேவையேதும் இன்றி அவனைத் தன்னுள் உணர்ந்துகொள்ளும் பேரறிவு கைகூடும் என்றவாறு.
 
யாப்பு: 13-சீர் வண்ண விருத்தம்; பாடலின் ஒலிவடிவை .mp3 file இணைப்பில் காணலாம். படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து..

 
.. அனந்த் 20-7-2013

Thursday, July 11, 2013

திருத்தாள்

திருச்சிற்றம்பலம்
 Inline image 1
<> திருத்தாள் <>



ஒருகா லேனும் உன்னைஎன்றன் 
.. உள்ளத் திருத்த உதவு(ம்)வணம்

ஒருகால் பதித்து மற்றொருகால்

.. உயர்த்திக் காட்டி உணரவைத்தாய்

வருகா லமெலாம் உன்னிருதாள்

.. மனத்துள் வைப்பேன், வருமெமனை

ஒருகா லாலே உதைத்தவ!நின்

.. ஒப்பில் கருணை அளப்பரிதே!



இருமா துகந்தோய்! அடியர்உளத்(து)

..இருத்த இருதாள் இசைந்தளிப்பாய்

இருமா வுரிபோர்த்(து) இடர்விளைக்கும்

.. இருவி னைகள் பாறவைப்பாய்

இருமா முனிவர் உனதருகே

.. இருந்துன் நடனம் காணவைப்பாய்

ஒருகால் இருகால் பலகால்நான்

.. ஓல மிடுங்கால் ஓடுவதேன்? 



முக்கால் உணர்ந்த முனிவோர்கால் 
..முடங்கா துயர்த்தித் தவம்செய்தும்
முக்கண் ணாஉன் திறமெல்லாம்/ திருஉருவை
.. முழுதும் உணரா திருக்கையிலே
புற்கண் படைத்த பேதையுன்சீர்
.. புரியும் வகையாய்ப் புலியூரில்
கற்கண் டாய்நின் வடிவழகைக்
.. காணச் செய்த கருணைஎன்னே!

(பாற= நீங்க, ஓட; கால் முடங்காது = மூச்சுக் காற்றைச் சுழுமுனை வழியே நேராகச் செல்லுமாறு)
5-7-2013
 
 

(யாப்பு: அறுசீர் ஆசிரிய விருத்தம்;  பாறவைப்பாய் = ஓட/நீங்க வைப்பாய்; கால் முடங்காது = மூச்சுக் காற்றைச் சுழுமுனை வழியே நேராகச் செல்லுமாறு; இருமா முனிவர்= பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இரு முனிவர்கள்;  முனிவரர்= முனிவர்களில் சிறந்தோர்; மூன்றாம் பாடலில் இனஎதுகை பயிலும்).

பாதையின் முடிவு

திருச்சிற்றம்பலம்

Inline image 1


<> பாதையின் முடிவு <>


எண்ணச் சுமையை என்றன் இதயம் ஏந்திச் செல்லும் பாதைஇஃது
... எங்கே சென்று முடியும் என்றென் உள்ளே கலக்கம் எழுகிறது
 
கண்ணின் இமைகள் கனத்தைத் தாங்கிக் களைத்துப் போய்க் கண் எரிகிறது
... கரையே இல்லாக் கடலைப் போலக் கடக்கும் வழிஏன் படர்கிறது?
உண்ணும் உணவாய்த்  துயரே ஆகி உள்ளம் கருகிச் சாய்கிறது
... உலகில் வீடும் பொருளும் உதவா உண்மை நெஞ்சில் உறைக்கிறது

மண்ணின் உறவை விடுத்து மடியும் அந்நாள் வருமுன் ஐயா!உன்
... மன்றில் ஆடும் பதமே என்றன் வழியின் முடிவாய் விதியாயோ?  

(யாப்பு: பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: தேமா மா மா மா மா மா மா)

.. அனந்த் 21-6-2013