Saturday, April 26, 2014

<> விந்தை நடனம் <>


                      திருச்சிற்றம்பலம்

                 

                     <> விந்தை நடனம் <>

(சந்த வண்ண விருத்த வேந்தரான குரு அருணகிரிநாதரின் ’பூதவேதாள வகுப்பு’ அடிக்கு 160 சீர்களும், 10 சந்தக் குழிப்புகளும் கொண்ட வியக்கத்தக்க படைப்பு. அதன் முதல் இரண்டு சந்தக்குழிப்புகள் கீழ்வரும் இருசந்த வண்ண விருத்தப் பாடலில் கையாளப்பட்டுள்ளன.)

சந்தக் குழிப்பு: 
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன  தனதான

சடையில் உலவிடு புனலி னொருதுளி

.... தவறி அருகினில் துயிலு(ம்) முருகனின்
...தலையி லேவிழு மென்றுக ரங்கொடு
..... தனயன் மேனிக ரந்தென(து) இன்றைய    விரிவான

நடன முறையினில் புதிய தொருவகை
.... நளின கரணமி தெனவொர் நகையொடு
...நவிலு நாயக! நின்செயல் கண்டுமை
.... நலமி தேயென நம்பிட, மன்றினை        விரைவாக

அடையு முனதடி யவரு மமரரும்
... அரியு மயனுமிவ் வரிய நிகழ்வுகண்(டு)
...அடட! ஈதொரு விந்தையெ னும்படி
... அழகு மேவுந டந்தனை உன்னிடும்        படியாகக்

கடைய னெனையுமொர் கணமுன் கரம்வழி
... கருணை மழையினில் நனைய அருளுவை
...கயிலை யேயிஃ(து) என்றெவ ரும்புகல்
... கனக மாசபை தன்னில்வி ளங்கிடும்       பெருமானே!

பாடலின் பின்னணியும் பொருளும்: கயிலாயத்தில், சிவபெருமான் நடம்புரிகையில் தமது சடையிலுள்ள கங்கையிலிருந்து நீர்த் திவலைகள் கீழே சிந்துவதைக் கண்டவுடன்,  அவை அருகில் ஆழ்ந்து உறங்கும் குழந்தை முருகன் மீது விழாதிருக்கத் தமது கையால் குமரனின் உடம்பை மறைத்தவாறு நாட்டியம் ஆடுகிறார். அவரது நடனத்தைப் பார்த்தவாறு பக்கத்திலே அமர்ந்திருக்கும் உமை அன்னையிடம், ஆடலரசர் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு, தாம் மேற்கொண்ட இந்தக் கை அசைவு ஒரு புதிய வகையைச் சேர்ந்த அழகான பரத நாட்டியக் கரணமாகும் எனக் கூறுகிறார். அதைக் கேட்ட மலைமகளும், இது நல்லதொரு கரணமே என நம்புகிறாள். இந்த அரிய காட்சியைக் காண விரைந்து வந்த சிவனடியர்களும், தேவர், பிரமன், திருமால் ஆகியோரும், ஆஹா, இது விந்தையே! என அரனைப் புகழ்கிறார்கள்.
கயிலையை நிகர்த்த தில்லை மாநகரில் பொன்னம்பலத்தில் திகழும் நடராசப் பெருமானே! அறிவிலும் ஒழுக்கத்திலும் கீழோனான நான் மேலே சித்தரித்த காட்சியை என் உள்ளத்தில் நினைத்து நற்கதி பெற, நடனம் புரிகின்ற உன் கரம் வழியாக ஒழுகும் கருணை மழையில் நான் நனையும் பேற்றை அருள்வாயாக.

.... அனந்த் 26-4-2014