Thursday, May 30, 2019

அழல்


                
                              திருச்சிற்றம்பலம்  
                

                    <> அழல் <>

கையில் அழலுன்றன் கண்ணில் அழல்முன்னம்
மைவண்ணன் வேத னறியவொண்ணாச் – செய்ய
அழற்பிழம்பாய் நின்றோய்அவதியுறும் என்றன்
அழலேற் றருளாத தேன்?

(அழல் = அழுதல்; உள்ளத் தாபம், வெப்பம்)
         
                   <> சிதை <>

தாற்கா லிகமாய்நீ தந்த உடலிதனை
மேற்கொண்டேன் உன்றன் விருப்பம்போல் – நாற்புறமும்
தீச்சூழ ஓர்நாள் சிதையிலது வீழுமுன்என்
நாச்சூழ உன்நாமம் நாட்டு.

(சூழல் சுற்றியிருத்தல்கருதுதல்)

                      <> படை <>

அடைக்கும் கழிவும் அழுக்குடன் கூடி அருநரகாய்க்
கிடக்கும் எனதுளக் கேணியில் மண்டிடும் கேடுகளைத்
துடைத்துப் பளிச்செனத் துப்புர வாக்கியுள்  தூரெடுக்கப்
படைத்தான் எனக்கரன் பஞ்சாக் கரமாம் படையினையே.

(தூர் = கலங்கல் நீர், சேறு, மண்டி, வண்டல்…; படை = கருவி, ஆயுதம்)

 ... அனந்த் 30-5-2019 பிரதோஷ நன்னாள்


Wednesday, May 15, 2019

உன் பாடு


                        திருச்சிற்றம்பலம்



                      <> உன் பாடு <>

நீதி பயிலாத நீசன்என்மேற் கோபமுறல்
நாத! நியாயம் நினக்காமோ? – ஏதம்விளை
யாதுநான் செய்யினும் ஆங்கதனை ஏற்றுன்றன்
பாதம் வழங்கல்உன் பாடு.

ஏதம் புரிவோர் அதன்விளைவை ஏற்றலே
நீதியாம் என்றொருகால் நீவிளம்பின்வாதிற்கு
வாதவூர் ஐயனின் வாக்கை*யான் காட்டியுன்றன்
பாத(ம்)விழு வேன்பின்னுன் பாடு!

(நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே?” திருவாசகம்)

என்ன முயன்றும் எனக்கடங்கா தென்றனுக்(கு)
இன்னல் விளைக்கும் இராக்கதனாம்என்மனத்தை
உன்னிடத்தில் ஒப்புவித்தேன் இன்றே இனிமேலே
உன்பா(டு) அதன்பாடு காண்.

நீர்விலக்கிப்  பாலருந்தும் அன்னம் அனையதொரு
நீர்மையோய் நீயென்றன் நெஞ்சிலுள்ள ஓர்துளி
அன்பெனும் பாலுடன் ஆழிநீ ராய்க்கலந்த
புன்மையெலாம் நீக்கிப் பருகு.

பாடும் அடியார்தம் பாட்டை அறிந்தவர்
நாடும் அனைத்தையும் நல்கிடுவோய்பீடுமிகு
பெம்மான் உனைஎளியேன் பேசத் தகுதியிலேன்
சும்மா ருந்திடச் செய்.

அனந்த் 16-3-2019 பிரதோஷம்
படம்: குற்றாலம் சித்திரசபையின் சுவர்களில் காணும் படங்களில் ஒன்று. 

Wednesday, May 1, 2019

வழி காட்டுவாய்



              திருச்சிற்றம்பலம்
                   
                                  உமா தாண்டவம்.jpg     
                    
                 <> வழி காட்டுவாய் <>
(பதினான்குசீர் ஆசிரிய விருத்தம்தேமாங்காய் காய் காய் விளம் விளம் மா மா)

வானோடு பாதாளம் வளர்ந்தோங்கு சோதியின் வடிவமாய் நின்ற தேவே
.. வாயார உன்றன்புக ழேபாடு மன்பரின் நெஞ்சுளே வளரு மிறையே
தேனோடு தீம்பாலின் சுவையாக அடியவர் தீட்டுநற் சந்த மேவும்
.. செய்யதமிழ்ச் செய்யுளினுள் சுடர்வீசுஞ் செம்பொருள் திணிவெனத் திகழு வோனே
கானோடி இலையுண்டு கடுந்தவசு புரியினும் கருத்தினுள் களங்க முள்ளோர்
… காணாது கரந்துலவு கடவுளுனைக் கடுகள வேனுநற் குணமி லாமல்
ஊனோடும் உடலங்கொண்(டுஉறவாடி வாழுமிவ் வேழையேன் உளத்தி லுன்னை
.. ஒருசிறிய கணமேனு உன்னிடவோர் வழியினைக் காட்டிநீ உதவு வாயே.
                       
chidambaram_natarajar-2 B&W.jpg

எண்ணற்ற பிறவிகளை எடுத்திளைத் தலுத்திட்ட வேழையேன் சேர்த்த வினையுள்
.. எள்ளனைய தானதொரு நல்வினை இருப்பினதன் பயனென இவ்வே ளையில்
உண்ணிற்கு முனையறியு உண்மையினை ஓர்ந்துமெய்ஞ் ஞானமாம் நெறியில் நிற்க
.. உதவுவா யாகிலினி உலகில்யான் அவதியுற் றுழலுமிவ் வீன நிலைமுன்
பண்ணிட்ட பாவத்தின் பயனென்னும் அறிவொடுன் பரிசென அதனை ஏற்றுப்
.. பரம!நின் பாதமலர் பற்றுதல் மறவாமல் பணிசெய லாகும்மூன்று
கண்ணுற்ற கடவுளுனை யன்றிஒரு கதியெனக் கடையனுக்(குஆரு மிலரே
… கதறியழும் எனதுதுயர் கனகசபை அரச!நீ கண்டெனக் கருளு வாயே.

(உண்ணிற்கும் – உள்+நிற்கும்)


... அனந்த்  1-5-2019 (பிரதோஷம்)