Sunday, July 24, 2022

மெய்வெளி

 திருச்சிற்றம்பலம் 


                          <> மெய்வெளி <>

 

         

                            Nataraja in Hridaya kamalam.jpeg


காலத் திகிரி கடிதே சுழன்று கணத்தை விழுங்கிச் செல்கிறது
.. கணத்தை அடுத்த கணத்தில் என்றன் கவனம் தொடர்ந்து கரைகிறது

மேலே செல்லா திடையே காணும் வெளியைக் கண்டாங் குறைகின்ற
.. மெய்யை உணரா வினையேன் தனக்கு விண்ணும் மண்ணும் வாழும்வணம்

ஆலம் அமுதாய் அன்றுண் டோனுன் ஆட்டில் அண்டம் தனைஇயக்கும்
.. அசைவைக் காட்டி அதிலே என்றன் அகத்தைச் செலுத்தும் நிலைதாண்டி

ஓலம் அசைவென் றொன்றும் இல்லா ஒன்றில் ஒன்றப் பணித்தாய்முன்
..  ஆலத் தடியில் அசையா தமர்ந்த அரசே அதற்குன் அருள்தாராய். .

(திகிரி = சக்கரம்; ஆட்டில் = ஆட்டத்தில்.)


                                                    🌺🌹🌺                        


            

                


முன்னணியாய் ஓதத்தே மூண்டவிடம் பூண்டனைநீ 

பின்னணியாய்ப் பேரன்பு பொங்கியெழ வேடுதந்த  

கண்ணணிந்தாய் தொழும்பருளக் காதலுடன் உனக்களித்த  

பண்ணணிந்தாய் இன்றேற்பாய் பரிவுடன்நீ என்பணியே



.. அனந்த் 25-7-2022 

Monday, July 11, 2022

உணர வைப்பாய்

 திருச்சிற்றம்பலம் 


  <>  உணர வைப்பாய் <>


Chidambara Natarajan.jpg


பொன்னம் பலத்துப் பூரண!உன்
.. 
பொற்பில் மயங்கி நிற்கையிலே

என்னை அளித்தேன் உனக்கெனநான்
.. 
என்றன் நாவால் இயம்பிடுவேன்

என்னை என்று சொல்பவன்யார்
.. 
என்ப தறியா ஏழையென்றன்

முன்னம் குருவாய் வந்தெனைநான்
.. 
முற்றும் உணர வகையருளே.


.. அனந்த் 11-7-2022