Tuesday, September 17, 2013

கூளம் மறைந்தது


திருச்சிற்றம்பலம் 
  Inline image 1

<> கூளம் மறைந்தது <>

உடலம் இதனை விடமலங்கள்
.. உறையும் எனது மனத்தினையுன்

இடமாய் உகந்தாய் இறைவாநான்
.. ஏனென் றறியும் முனமதனில்

நடனம் புரியத் தொடங்கிவிட்டாய்
.. நானும் அதுகண் டுகுத்தகண்ணீர்

குடமாய்க் கொட்ட அதிலென்றன்
.. கூளம் கரைந்து மறைந்ததுவே

அனந்த் 17-9-2013

==============
உடலினிலும் மலமலிந்த உளம்தேர்ந்த உமையரசன்
நடமிடும னந்துலக்க நயனத்தில் நீரெடுத்தான்
உடலுறுப்பும் உயிருளமும் உறுமுறவை உணர்த்திவிட்டான்
சடமெனநாம் சபிக்குமுடல் சர்வேசன் தந்ததன்றோ!

நல்வாழ்த்துக்களுடன்
கோபால்.

Monday, September 2, 2013

நிலையான பொருள்


திருச்சிற்றம்பலம்
 
Inline image 1

                    <> நிலையான பொருள் <>

(14-சீர் ஆசிரிய விருத்தம்: அரையடி- கருவிளம் காய் விளம் காய் விளம் மா தேமா) 


முதுபெரும் பொருளாக முற்றிலும் புதிதாக மூலபண் டார மாக
..முதல்நடு முடிவேதும் இலாதஓர் முழுதாக மோனஓங் கார மாக


எதுஎவண் நிகழ்ந்தாலும் எங்ஙனம் நடந்தாலும் இயற்கையாய் அவற்றை எல்லாம்
..இயக்கிடும் விதியாக எதிர்வினைப் பயனாக இலங்கிஓர் வரைய றைக்குள்


அதுவென இதுவாமென் றியம்பிட இயலாமல் அனைத்துமே ஆகி ஆங்கே
..அணுவிலும் அணுவாக அண்டபே ரண்டங்கள் யாவினும் மேல தாகப்


பொதுவினில் நிலையான பொருளிதே எனுமாறு பூம்பதம் தாங்கி ஆடும்
..புகலரும் பரஞான பூரணா! எனையாளும் புண்ணியா! எனது வாழ்வே!




.. அனந்த் 2-9-2013
இணைப்பு: இசை ஒலிப்பதிவு