Sunday, March 20, 2016

காரணம் சொல்வீர்

திருச்சிற்றம்பலம்Inline image 2


<> காரணம் சொல்வீர் <>

தலையிலும் இடப்பா கத்தும்
.. தாங்கிடும் மாதர் தம்மால்
நிலையிலா தங்கு மிங்கும்
.. நித்தமும் ஆடி ஓடி
அலையும்உம் பாடு கண்டோ
.. ஆனையின் முகத்துப் பிள்ளை
உலைவிலா மாணி யாக
.. உறுதிகொண் டனனோ சொல்வீர்!
(உலைவிலா மாணி = அலைச்சல்/வருத்தம் இல்லாத பிரமசாரி)

முன்னம்நீர் விசய னோடு
.. மோதிடற் காக வேடன்
என்னுமோர் வேடம் தாங்கி
.. இருக்கையில் கூட வந்த
அன்னையின் வேட்டு வச்சி
.. அழகுருக் கண்ட தாலோ
சின்னவன் தானும் வேடச்
.. சிறுமியை மணந்தான் சொல்வீர்?

மின்னலாய் மறையும் வாழ்வை
.. விடுத்திட வேட்கை இன்றிப் 
பொன்னொடு மனையும் மாடும்
.. புகழையும் வேண்டி மாந்தர்
உன்னிடம் வருதல் கண்டோ
.. உமையவள் பாக ரே!நீர்
என்னவோர் அணியும் பூணா
.. ஏழையாய்க் காண்பீர் சொல்லும்!

அனந்த் 20-3-2016
--------------

Sunday, March 6, 2016

ஒருதனி, பல உரு


             திருச்சிற்றம்பலம்


     Inline image 1
          <> ஒருதனி, பல உரு <>

கற்றைச் சடையா கழலார் நிறத்தா
...காதார் குழையழகா
......கடிமா மலர்பூண் உமையாள் பாகா

........கணங்கட் கோர்தலைவா

        Inline image 2

ஒற்றைத் தனியாய் உருவில் பலவாய்
.... உலவும் முழுமுதல்வா
.....
..உண்மைப் பொருளை உலகோர்க் குணர்த்த
.....
....ஓரால் அடியமர்ந்து
முற்றிப் பழுத்த முனிவர் முன்னே
.....முதலும் கடையுமிலா
.......மோனம் பயிலும் குருவே மறையின்

.........முடிவே ஒயிலாகச்

        Inline image 3

சிற்றம் பலத்தில் தினமும் அடியார்
... சேவித் துளம்மகிழும்

........தேவா உன்றன் சீரைப் பாடும்
..........திறனைத் தருவாயே.

                  *****

எரிசேர் கரமும் விரிசெஞ் சடையும் குறுமென் னகையும் ஒருசேரப்

பெரிதோர் நடனம் புரிவோய் நீபின் திரிவாய் லிங்க வடிவோடே

அரிதாம் பரம சிவபோ தமதைத் தெரிவார் பரவ உருவில்லா

அருவாய்த் திரையுள் மறைவாய் உன்னை அறிவார் எவர்தாம் உரையாயே!

                திருச்சிற்றம்பலம்

               *******

... அனந்த் 6-3-2016