Friday, December 29, 2017

தொழ அருள்வாய்

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

              திருச்சிற்றம்பலம்

       <>  தொழ அருள்வாய் <>























கரும்பின் தெளிவாய்க் கற்கண் டாய்த்தீங்
.. கனியாய் இனிக்கும் கடலமுதே
…. ககனப் பரப்பே கதிரின் ஒளியே
….. காற்றே நிலனே செவ்விதழில்

அரும்பும் நகையோ(டுஅன்னை காண
.. அழகாய்ப் பொன்னம் பலந்தனில்
…… ஆடி அவளுன் நடத்தைப் புகழ
………..ஆசை கொள்ளும் மணவாளா

விரும்பும் அடியார்க் கெதுவும் தருமோர்
.. வித்தை தெரிந்த விமலாயான்
…… விண்மண் வேண்டேன் விரையார் கழற்கீழ்
……. வீழ்ந்தே கிடக்க வேண்டுவன்இத்

 துரும்பின் சிறியேன் துதியால் உன்னைத்
… தொழவும் விழைவேன் அருளாயோ?
…… துரியா தீதப் பரமே ஞானச்
……… சுடரே தில்லைப் பதிவாழ்வே!

.. அனந்த்  30-12-2017  (நன்றியுடன் படம்: சு.ரவி )

Thursday, December 14, 2017

விடுவேனோ?

                             திருச்சிற்றம்பலம் 

               

                            <> விடுவேனோ? <>

விடுவேனோ உன்னை முதன்முறை கண்ட விநாடியிலே
தொடுவானம் கைகளிற் சிக்கிய தென்னும் சுகங்கொடுத்தாய்
படுபாவி என்னும் பெயரென்னை விட்டுப் பறந்ததினிச்
சுடுகாடும் தாண்டித் தொடர்ந்தென் பிடியினில் சிக்குவையே.

சிக்கி வலையுள் சிறகின் பயனின்றித் தொய்ந்துபயம்
மிக்கப் பெருகி விடுதலை காண விழையுமொரு
பட்சி யெனப்பவப் பந்தத்தில் மாட்டிப் பதறிநின்றேன்
தக்க தருணம் தனில்மீட்(டு) எனதுளில் தக்கினையே.
 (தக்குதல் = வசப்படல், ஆட்சிக்குட்படல்)  

இனைநீ எனவறி யாதென் மனத்தினிற்(கு) இட்டமுள
அனைத்தின் சுகமும் அனுபவிப் பேனெனும் ஆர்த்தியுடன்
முனைந்திவ் வுலகில் முயங்கிச் சலித்தவிம் மூடனுள்நின்
நினைப்பைப் புகட்டி நிறைத்து வழங்கினை நிம்மதியே.
(இனைஇன்ன தமையுடையாய்; ஆர்த்தி=விருப்பம்)

வினையாம் விதையென் மனமாம் நிலத்தில் விளைத்தபயன்
அனைத்தும் அழியும் அகத்துள் அரனுன் அருட்பதத்தை
 நினைத்த நிமிடமென் றுன்னடி யார்சொலை நெஞ்சிருத்தித்
தினத்தைக் கழிப்பேன் தெரிசனம்  என்னுள் தெரிவதற்கே.

தெரியும் எவையுளும் தேவனைக் காணு(ம்)மெய்ச் சீர்படைத்தோர்
அரியர் அவர்தாள் பணிந்துன் அருளை அடைந்திடலே
சரியை கிரியை தவத்திலும் சாலச் சிறந்தெனப்
பெரியர் புகல்வரப் பேறெனக் கெட்டும் படியருளே.


..அனந்த்  15-12-2017 பிரதோஷ நன்னாள்

Thursday, November 30, 2017

எது தவம்?

இன்று பிரதோஷ நன்னாள்.

                                திருச்சிற்றம்பலம்

                               <> எது தவம்? <>



 ​

உம்பர் உலகை அடைவனென
.. உஞற்றும் தவமும் உலகுதரும்

இன்பம் பலவும் பெறுதற்கென்(று)
.. இயற்றும் தவமும் தவமல்ல

துன்பம் மலிந்த பிறப்பிறப்புச்
... சுழலை விடுத்துக் கதியடையச்

செம்பொற் சுடராய்த் திகழ்வோன்தாள்
.. தேடல் ஒன்றே தவமாமே.
  
                    
தவத்தின் உண்மைப் பயனடைந்தோர்
..தம்முள் உறையும் பரமறிவார்

அவத்தை விழிப்பு கனவுள்ளும்
.. ஆழ்ந்த சுழுத்தி அதனுள்ளும்

சிவத்தி னின்று தாமகலாச்
.. சித்தில் நிலைப்பார் சுழன்றுவரும்

பவத்தை வென்றோர் அவர்பெருமை
.. சாற்றல் எவர்க்கே சாத்தியமே.


​                  

கோவணம் தரித்துப் பெருந்துன்பம்
.. கொளினும் உடலைக் குறியாது

யாவரும் வியக்க அருணையிலே
.. அமர்ந்த முனிவர் ஆர்நானென்(று)

ஓவா துள்ளே தேடெனவே
.. உபதே சித்து வானுறையும்

தேவரும் அறியா அறிவொளியில்
... திளைத்தார் அதுமெய்த் தவமாமே.


... அனந்த் 1-12-2017

Tuesday, November 14, 2017

மறக் கருணை


           <> மறக் கருணை <>



(வாய்பாடு: மா மா காய் மா மா காய்)

அழித்தல் உன்றன் தொழிலென்றிங்(கு)
.. அனைவர் சொல்லக் கேட்டுள்ளேன்

விழிப்பில் தொடங்கித் தொலைவிண்ணில்
.. மீன்கள் மறையும் வேளைவரை

பழிக்கும் செயலே புரியுமென்றன்
.. பாவச் சுமையை நீதயைசெய்(து)

அழிக்கின் உலகோர்க் குன்தொழிலுள்
.. அடங்கும் கருணை விளங்கிடுமே.

                       ***********

தோன்றல் நிலைத்தல் அழிதலெனும்
.. சுழலில் சிக்கி மாயையுள்வேர்

ஊன்றி அவருள் உறைமெய்யை
.. உணரா தென்றும் உழல்வதுபோல்

தோன்ற வைக்கும் உன்ஜாலம்
.. தெரிந்தோர்க் குண்டோ பிறப்பிறப்பு?

ஆன்ற அந்த அறிவையெனக்(கு)
.. அருளும் நாளும் எந்நாளோ?

                      ***********

ஒட்டி உன்னோ டுறைமங்கை
.. உன்றன் இடக்கை ஏந்தியதீச்

சட்டி தன்னை விடுத்துச்செந்
.. தாமரை தாங்கி நிற்கையிலுன்

இட்டம் போல அழிக்கும்வினை
.. எவ்வா றாற்று வாய்அறியேன்

நட்டம் பயிலும் நாத!உனை
.. நன்க றிந்தார் எவருளரே!

                      ***********
செய்தற் கான தொழிலொன்றைச்
.. சீராய் இறுதி வரைஆற்றல்

வையத் தோர்க்கு வழங்கும்நல்
.. வார்த்தைஇங்கு நீஎன்னை

உய்விப் பதற்குத் தொடங்கிவைத்த
.. உன்றன் தொழிலை முடித்திலையேல்

ஐயஎனக்குக் கதிதரஇங்(கு)
.. ஆருள் ளார்?யான் என்செய்வேன்?

                      ***********

(வாய்பாடு: காய் மா காய் மா மா காய்)

அளித்தாலும் என்னை அழித்தாலும்
.. அருள்தந் தாலும் தராயெனினும்

களித்தாடும் ஞான நடத்தோய்!உன்
.. கழலின் நிழல்விட் டகலாமல்

விளித்திடுவேன் உன்றன் திருநாமம்
.. வினையேன் பாலுன் திருவிழிகள்

துளியேனும் வீழும் வரைஎன்னைத்
.. துரத்த முயலல் ஆகாதே.

(படம்: “நடராசப் பெருமான்”, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)

.. அனந்த் 15-11-2017 பிரதோஷ நன்னாள்.

Tuesday, October 31, 2017

தொலைவு உளதோ?

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

























<> தொலைவு உளதோ? <>

கடவுளை நீங்கள் அடைவதற்குக்
.. காண்பீர் இதுவோர் வழிஎன்பார்

கடந்து செல்லத் தொலைவின்றிக்
.. கணமும் பிரியா வணமாய்என்

உடனி ருக்கும் நடத்தரசை
.. ஒன்றத் தொலைவென் றேதுளது?

கடல்மீன் தாகத் தால்வாடக்
.. கண்டார் உளரோ சொல்வீரே!**

                    ******

கல்லி னுள்ளே மரத்துள்ளே 
.. கடலுள் ஐந்து பூதத்துள்

எல்லாப் பொருள்கள் தம்முள்ளும்
..  இயல்பாய் நிற்கும் பேருணர்வு,

நல்லோர் உள்ளக் குகையினுள்ளே
.. நாளும் ஒளிரும் விளக்(கு)இங்கே

தில்லைப் பதியின் நாயகனாய்த்
.. திகழும் அழகைக் காண்பீரே.

                    ******

வில்வம் திகழும் அணிசடையில்
.. வீழும் புனலும் நிலவொளியும்

சொல்லற் கரிய எழில்பொதிந்த
..சுடர்செம் பவளத் திருமுகத்தில் 

மெல்ல அரும்பும் புன்னகையும்
.. வேதத் தொலியாய்க் காலெழுப்பும்

சல்சல் ஒலியும் சேரநமைச்
.. சேர்ப்பான் மெய்ம்மைச் சிவத்துள்ளே.

(** இந்தஉவமை பரமஹம்ஸ யோகானந்தா அவர்களின் ஆங்கில உரையொன்றில் கண்டது.)

..அனந்த் 1-11-2017 பிரதோஷ நன்னாள்

Monday, October 16, 2017

உன் திருவடி

இன்று பிரதோஷ நன்னாள்
 திருச்சிற்றம்பலம்

<> உன் திருவடி <>

             
​              
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!

காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும்  சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாரெல்லாம் ஏற்றில்
திரிந்திடுமுன் தாட்டூசி  தா.

(விண்பால் அலைந்தோர் = விண்ணில் மூன்று கோட்டைகளில்  (திரிபுரம்) அலைந்த அசுரர்கள்; பரிந்தளித்தாய்   ண்டித்தருளுவதைக் குறித்தது; தாட்டூசி = தாள்தூசி.)


அனந்த் 17-10-2017 

Monday, October 2, 2017

பூத உடல்

திருச்சிற்றம்பலம்

<> பூத உடல் <>


 
நீரில் மிதந்து கருவாகி
.. நிலத்தில் விழுந்து காற்றிழுத்துப்
பாரில் திரிந்து பல்லோரும்
.. பாவி யென்னும் படியாய்வாழ்ந்(து)
ஊரின் வெளியே தீயில்புகும்
.. உடலம் இதனைக் கொண்டுன்னை
நேரில் காணல் எனும்விந்தை
.. நிகழ வைத்தல் நின்கடனே

எல்லாம் அறிந்த வல்லோன்நீ
.. எனக்கோர் உடலம் தந்தசெயற்
குள்ளே ஒளிந்த காரணத்தை
.. உணரா திருந்திந் நாள்வரையில்
பொல்லா நினைப்போ(டு) உரை,செயலைப்
.. புரிந்து வந்தோன் எனஅறிந்தும்
நல்லோய் எனையும் நின்னடியை
.. நாட வைத்தல் நின்கடனே

குழியில் விழுந்து தவிப்பவனின்
.. கூச்சல் கேட்டுக் கைதரல்போல்
அழிவை நோக்கி விரையுமென்னை
.. அன்பின் வடிவே நீதடுத்துன்
எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்
.. இணையடி தன்னைச் சார்வதற்கு
வழியைக் குறித்துன் அடியவனாய்
.. வாழ வைத்தல் நின்கடனே.

காற்றும் நீரும் நெருப்புமிவன்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(றுஉன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே

நாட்டம் எல்லாம் என்றனுக்கு
.. நலிவைக் கொடுக்கும் நினைவுகளில்
தேட்டம் எல்லாம் என்றனுக்குச்
.. சீரைக் கெடுக்கும் செல்வத்தில்
வாட்ட மடைந்தேன் இவற்றாலே
.. வழியொன் றிதுவென் றுன்னடியார்
கூட்டம் சொல்கேட்(டுஉன்முன்கை
.. கூப்பி நின்றேன் ஏற்பாயே.

(காற்றிழுத்து - காற்றைச் சுவாசித்து)

.. அனந்த்
பிரதோஷ நன்னாள் -   2/3-10-2017