Thursday, March 21, 2024

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

               


 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்


காலை உயர்த்தியருள் காட்டும் கரமுடைய

.. கடவுள் உன்னை அண்டிக்

.. காலை பகலந்தி காலம் தவறாமல்

….. கரங்கள் குவிக்கு மன்பர்


மாலை யறுத்திதயத் தேபுக் காங்கவரை

… வாழ்வித் துயர்த்து முன்சீர்

….. வாய்கொண் டுரைத்திடவு மாமோ அடியனுமுன்

….. வாயில் வந்து நின்றேன்


பாலை அளித்துதமிழ்ப் பாடல் மழைபொழியப்

..பாலர்க் குதவு பரமா

..... பாலை நிகர்மொழியள் பக்கல் துணையிருக்கப்

…...பரதம் புரியு(ம்) ஐயே.


(மாலை = மயக்கத்தை, மாயையை; பாலர் – திருஞானசம்பந்தர்; ஐயே = ஐயனே. )

                                                                                  ... அனந்த் 21-3-2024

 


Thursday, March 7, 2024

பாசமறுப்பாய்

 இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


 



இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


     



உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024