Sunday, January 28, 2018

கருணை மலை

இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                             <> கருணை மலை <>

மெய்ம்மலையாய்க் காணருண மாமலையை விட்டிந்தப்
பொய்ம்மலையாய்  அலையுமென்றன் புலையுடலை நம்பியிந்த
வையகத்து வாழ்க்கையினை வீணடித்தேன் ஐய!உனைக்
கையெடுத்துக் கும்பிட்டேன் கடைத்தேறும் வழியருள்வாய்.


தெள்ளியநீர்ப் படிகமெனத் தினமகத்துள் ஒளிருமந்த
உள்ளபொருள் இதுவென்றிவ் வுலகினர்க்குக் காட்டும்மலை
வெள்ளமிழி சடையோன்உன் வெளியுருவாய் விளங்கும்மலை
கள்ளமெலாம் நீக்கிஎன்னைக் காத்தருளச் செய்குவையே.

கண்ணெதிரே காணு(ம்)மலை கடவுளுனைக் காட்டும்மலை
மண்ணிலெமைக் கடைத்தேற்ற வந்துதித்த இரமணகுரு
பண்ணிசைத்துப் பரவிநின்ற பவித்திரமாம் மலையிதனை
எண்ணிஎனை நானறிய ஈசாநீ அருளுவையே.


..அனந்த் 29-1-2018
(திருவண்ணாமலையிலிருந்து)

Tuesday, January 16, 2018

பரதேசி

இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பரதேசி <>

நானோர் பரதேசி – பல
.. நாடெல்லாம் சுற்றியென் நாட்களைப் போக்கும்  (நானோர்)

ஏனோ கவலையில்லை – என்றன்
.. ஈசனும் என்னைப்போல் ஊர்சுற்றி ஆவான்
தானொரு மாடேறித் – தன்
.. தாரம் மனையைத் துறந்து திரிவான்

ஊனார் தலையோட்டில் – தன்   
.. ஊணைப் பலர்இல் இரந்து புசிப்பான்
கானொரு மேடையென்று – தன்
.. காலொன்றைத் தூக்கி நடனமும் செய்வான்
   
மானோர் கரமேந்தி – அந்த
.. வாகில் அடியாரைத் தன்வசம் ஈர்ப்பான்
வானோர் அதைக்காணத் – தலை
.. வாசலின் முன்வந்து காத்துக் கிடப்பார்

கோனாய்ப் பொதுவெளியில் – ஒரு
.. கூத்தாடி ஏராளம் கூட்டத்தைச் சேர்ப்பான்
மோனம் பயின்றவண்ணம் – தவ
.. முனிவர்க்குச் சாடையில் ஏதோ மொழிவான்

நானுமிங்(கு) ஆங்கவன்போல் – ஒரு
.. நாடக மேடை உலகெனக் கொண்டு
வான்தீ வளிநீரும் - மண்ணும்
.. வார்க்கும் பலவான மாற்றங்கள் ஊடே

நானார் எனஅறியும் – அந்த
.. ஞானத்தை ஈய அவனருள் வேண்டிச்
சோணா சலத்தினிலே  என்றும்
.. சும்மா இருந்தென்றன் காலங் கழிப்பேன் (நானோர்..)


.. அனந்த் 14-1-2018 (பிரதோஷம், திருவண்ணாமலை)