Friday, June 28, 2019

அடிமேல் அடி


திருச்சிற்றம்பலம்

<> அடிமேல் அடி <>























கல்லடியும் வில்லடியும் காலின் செருப்படியும்

சொல்லடியும் கோலடியும் தந்ததுயர் - நல்லடியார்
பாவடிகள் பெற்றுப் பறந்தன்றோ? ஐயா!உன்
சேவடியென் சென்னிபெறச் செய்.   

(வெண்பாவின் முதலிரு அடிகளில் குறிப்பிடப்படுபவர்: சாக்கிய நாயனார், அருச்சுனன், கண்ணப்பன், சுந்தரமூர்த்தி நாயனார், அரிமர்த்தன பாண்டியன்



<> கல் விழைவோன்  <>


கல்லால் அடியினில் கைச்சாடை காட்டும் கடவுளிவர்
கல்லால் அடித்தால் களிகொண்ட துண்டு கருவறையில்
கல்லால் வடித்த கருஞ்சிலை ஆகவும் காண்பதுண்டு
கல்லால் இவருக்குக் கிட்டிய கீர்த்தி கணக்கிலதே.

<> அடிக்கடி ஈவான் <>


மாணிக்கு மாளா வரமீவான் நாலைந்து                        
பாணிக்குக் கூர்வாள் பரிசீவான்- மாணார்                
முடிக்குமேல் தானம் மதிக்கீவான் மன்னர்க்(கு)            
அடிக்கடி ஈவான் அரன்.                                

பொருள் விளக்கம்: மாணி = பிரம்மசாரி; இங்கு, மார்க்கண்டேயன்; நாலைந்து பாணி = இருபது கைகளை உடைய இராவணன்; கூர்வாள் சந்திரஹாஸம் என்னும் பெயர் கொண்ட வாளைக் குறித்தது; மாணார் மாண்ஆர் = மாட்சிமை பொருந்திய; தானம் -ஸ்தானம் = இடம். (ஈவான் ஈந்தான் என்பதன் காலவழுவமைதி.)

(மன்னர்க்கு) அடிக்கடி  = அடிக்கு அடி அல்லது பலமுறை. இது பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலில், சிவபெருமான் தன்னைப் பிரம்பால் அடித்த பாண்டிய மன்னனையும், அவனுக்கே அந்த அடி விழுமாறு அரன் செய்த நிகழ்வையும், மதுரையில் இராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளை ஏற்று, அங்கயற்கண்ணி ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில், தனது நடனத்தில் உயரத் தூக்கியவாறு இருந்த இடது அடியைத் தரையில் ஊன்றி, வலது அடியை மேலே துக்கிய (ஓர் அடிக்குப் பதிலாக மற்றொரு அடியை எடுத்த) நிகழ்ச்சியையும் குறிக்கும்.  முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து தனக்குப் பணிசெய்த கோப்பெருங்கட் சோழனுக்கு அரன் அருளியதையும் அரசர்க்குப்  பலமுறை அருள் தந்த நிகழ்ச்சிகளோடு சேர்க்கலாம்.

அனந்த் 29-6-2019 பிரதோஷ நன்னாள்

அடி பற்றிய தலைப்பில் முன்னம் இட்ட பாடல் ஒன்று:

<> அடியேன் அடியேன் <>

அடியார் எனும்சிலர் ஐயனே! உன்னை
அடிப்பார் செருப்பால்கல் வில்லால் அடியேன்நான்
உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை
என்னுள்ளே வைப்பேன், இரு.  (19-8-2017)




Thursday, June 13, 2019

பேசா ஈசன்


                                                திருச்சிற்றம்பலம்


   


                                <> பேசா ஈசன் <>


அகிலமெலாம் படைத்திடுவாய் ஆனால்ஓர் ஆண்டியெனத்
துகிலின்றி உலவிடுவாய் சோர்வில்லா(து) ஊணிரப்பாய்
புகலொருகா ரணமென்றால் போயாங்கோர் மரத்தின்கீழ்ச்
சுகமாக அமர்ந்தொருசொல் பேசாமல் அமர்ந்திடுவாய்

அமரருனை அன்றொருநாள் அச்சத்தோ(டு) அணுகிநிற்க
அமைதிதிகழ் வதனமொடு அருந்தினையோர் கொடியவிடம்
தமதிடரைத் தீர்த்தஉனைத் தியாகேச னெனத்துதிக்க
உமைபுரிந்த உதவியைநீ உலகறியக் கூறிலையே.

பேசா திருப்பதிலே பெருத்தபயன் உண்டெனவே
ஈசாநீ கண்டபினர் இச்சகத்தார் தம்மிடரை
நாசஞ்செய் திடுவையென நம்பியுன்பால் வருகையிலே
வேசமொன்றைப் பூணுவைநீ வெறுங்கல் சிலையென்றே.

அனந்த் 13/14-6-2019  பிரதோஷம்