Friday, July 31, 2020

தகுதியில்லோன்

               திருச்சிற்றம்பலம் 
   


 

          
             <> தகுதியில்லோன் <>

வானந்த வரைதாண்டி மெஞ்ஞான வெளியினிலே
 மானாபி மானமின்றித் தானாகி நிற்பவனைத்

தானந்த மில்லாத தத்துவனை மெய்யறிவைத்
.. தந்தோம்காண் எனநடத்தில் சமிஞ்ஞைவழி தெரிவிக்கும்

ஆனந்தத் தாண்டவனை அணிதில்லைப் பதியனைத்தம்
… அகமுருகிக் கண்பனிக்கும் அடியார்முன் அறிவில்லா

நானெந்த வகைகொண்டு நாடியென்றன் மனத்துறைய
…. நாதா நீ வருகவென அஞ்சாமல் அழைத்திடுமே?

(எண்சீர் ஆசிரிய விருத்தம்அரையடிதேமாங்காய்  காய் காய் காய்.), 

.. அனந்த் 31-7-2020

Friday, July 17, 2020


திருச்சிற்றம்பலம் 



வெண்பா:

போது சடையணி பொன்னம் பலத்தரசே
ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமோர்
காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்
நாலுபேர் முன்னால் நடிப்பு? 

கட்டளைக் கலித்துறை:

கட்டத்தைக் கூறிட நான்வருங் காலையுன் காலுயர்த்தி
நட்டத்தை ஆடி ’நடப்பதெ லாமென்றன் நாடகத்தின்
திட்டத்தின் கீழிதைச் சிந்தையில் வை’யெனச் சைகைமூலம்
சுட்டத்தான் என்றறிந் தேனினி ஏதுமில் செப்புதற்கே.

அறுசீர் விருத்தம்:

மனையவள் பாலே மாளா
 மயக்கமுள் ளோர்கள் கண்டோம்
அனைவரும் பலவாய்ப் பண்டம்
 அளித்தவர் மனையை ஈர்ப்பார்
தனதுடல் தன்னில் பாதி
 சதிக்களித் திடுவோர் தம்மை
நினைத்ததும் கண்டும் இல்லேன்
 நிருத்தமொன் றாடும் தேவே.!

அனந்த் 18-7-2020 (பிரதோஷம்)
படம்: சென்னை கபாலீச்வரர் ஆலயத்தில் நடராஜர்-சிவகாமி திருக்கோலம்; From temple calendar. 


Wednesday, July 1, 2020


திருச்சிற்றம்பலம்



<> பாராயோ? <>

காப்பாய் என்றோர் கணம்தோன்றும்
.. களிப்பேன், சிரிப்பேன் கூத்திடுவேன்

தீப்போல் உடனே செய்வினைகள்
.. திரும்பி என்றன் நிலைகுலைக்கும்

மீட்பாய் என்று மீண்டுமொரு
.. வேட்கை எழுமிங் ஙனம்நிதமும்

மாய்ப்பும் பிறப்பு மாயலைந்து
.. வாழும் அவலம் தீராயோ?

(மாய்ப்பு = மாய்தல், சிவனை எண்ணாப் போதுகள் இறப்பையும் எண்ணுங் காலம் பிறப்பையும் ஒக்கும் என்றவாறு)

         *<>*<>*

பொல்லேன் யானென் றுனக்கெவரும்
புகலல் வேண்டா என்பிழைகள்

எல்லாம் அறிவாய் என்னிறையே
இனிநீ செய்ய ஒன்றுண்டு

கல்லைக் கனியாய் மாற்றுமுன்றன்
.. கடைக்கண் நுனியை அடியேன்பால்

தில்லைப் பதியோய்! ஒருகணம்நீ
திருப்பின் சிறியேன் திருந்தேனோ?

          *<>*<>*

மணிவா சகரின் வார்த்தையிலே*
 .. மனத்தைக் கொடுத்தேன் அதன்விளைவாய்த்

தணியாத் தாகம் உனையடையத்
.. தகுதி யின்றும் உள்தோன்ற

அணியார் பொன்னம் பலத்தரசே
.. அடியேன் உன்முன் அழுதுநின்றேன்

பணிவோர்க் கருளும் பரம! என்பால்
.. பார்வை செலுத்தின் பழியாமோ?

(* “வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” - திருவாசகம்)

,.. அனந்த்  2-7-2020 பிரதோஷ நன்னாள்