Saturday, January 31, 2015

படைத்ததேன்?

திருச்சிற்றம்பலம்



<> படைத்ததேன்? <>


பூவும் இலையும் உன்முடியில்
... புனிதம் அடையும் புற்றரவம்

தாவி உன்றன் மேனியினைச்
.. சார்ந்து பிறந்த பயனெய்தும்

நாவும் செவியும் பெற்றுமுன்பேர்
.. நவின்றோ கேட்டோ உனையடையாப்

பாவி யாய்நான் வாழ்வதற்கோ
.. படைத்தாய் என்னைப் பரமேசா?

..அனந்த்  31-1-2015

Sunday, January 18, 2015

பேறு வழங்குவாய்


திருச்சிற்றம்பலம்




<> பேறு வழங்குவாய் <>

புலன்தரும் போகம் பொருட்டாய் மதியாத புத்தியையும்
நலம்குறைந்(து) ஆகம் நலியினும் உன்பேர் நவில்திறனும்
புலம்பெயர்ந் தாலுமெப் போதும்உன் சீரைப் புகழ்ந்துதளி
வலம்வரும் பேறும் வழங்கிடு வாய்தில்லை வாழரசே!

(ஆகம் = உடல்; தளி = கோயில்)

அனந்த்  18-1-2015 

Tuesday, January 13, 2015

கண்ணீரில் கரைந்த வினை


திருச்சிற்றம்பலம்

<> கண்ணீரில் கரைந்த வினை <>




அன்னே! நீஎன் அகம்புகுந்துஅங்(கு)
.. அனலைக் கிளப்பி அதன்நடுவில்

முன்னே புரிந்த வினையெல்லாம்
... முற்றும் எரித்தென் முகத்திழியும்

கண்ணீ ரதனில் கரைத்துவிட்டாய்
... காலம் கடந்தேன் கனகசபை

மின்னே! வரையில் பெருவெளியில்
... விளங்கும் பரமே! மெய்யுணர்வே!

(வரையில் = வரை (அளவு) இல்லாத)

அனந்த் 13-1-2015

Friday, January 2, 2015

வேடம் புனைவீர்


திருச்சிற்றம்பலம் 




<> வேடம் புனைவீர் <>

ஓரொருகால் ஊரரெல்லாம் ஓடேந்தி இரந்துண்பீர்
வேறொருகால் கூடலில்நீர் வீறுடனே வேந்தனெனச்
சீரொளிரும் முடியணிவீர்; சிறுபொழுதில், இரந்துண்ணப் 
பாரெல்லாம் திகம்பரனாய்ப் பகற்பொழுதில் சென்(று)இரவில்
யாருமிலாக் காட்டினிலே ஆடிடுவீர், பின்னர்மர
வேரடியில் வாய்மூடி வீற்றிருப்பீர் ஐய!உமை
ஓருருவில் நான்துதிக்க வொட்டீரென்(று) எண்ணுகையில்
யாருமறி யாதென்றன் அகத்துள்நிலை கொண்டிடுவீர்!

அனந்த் 2-1-2015

இணைத்துள்ள ஓவியம், கவிஞர் சு.ரவி வரைந்தது.