Tuesday, May 30, 2023

    இன்று பிரதோஷ நன்னாள்

            திருச்சிற்றம்பலம்



           <> நாணாது ஏற்பாய் <>


         



தேமா மா மா மா மா புளிமாங்காய்



ஓயா துலகில் பிறந்தும் இறந்தும்

.. உழலும் நிலையகலத்



தூயோர் வகுத்த தொழுகை முறையோர்

... துளியும் அறிந்திலன்யான் 



பேயாய் உருக்கொள் பிராட்டி தனக்குப்

… பிறவா வரமளித்தோய்!


நாயேன் எனக்குன் அருளை நல்க 

.. நாணா தேற்பாயே!


                                       **********


         <> காரணம் அறிவேன் <>

 

                            

செம்பொன் திருமேனித் தேவ!நீ தில்லையிலே


அம்புநிறை செஞ்சடையோ டாடிடல் - அம்பிகையின்


பாராட்டுக் கிட்டப் படும்பா டெனவறிந்து


சீராட்டு வேனுன் செயல்! 


                            ...அனந்த் 31-5-2023


https://vsa-pradoshappaadalgal.blogspot.com/

Tuesday, May 16, 2023

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 

             <> அசையா ஆட்டம் <>




குன்றின்மேல் சோதிக் குடியிருப்பு கூத்தாடும்
மன்றினிலோர் கால்காட்டல் மாந்தர்காள் – சென்றுநீர்
இன்னவகைக் கோலந்தான் ஏனெனக்கே ளாதடியார்      
சொன்னபடி செய்தல் சுகம்.

                                  🌸🌺🌸

பாகத்தில் பாரியாள் பார்த்திருக்க மன்றினிலே     
நாகம்பூண்(டு) ஆடும் நடராசன் - நாகமென                       
ஆடா திருந்தே அடியார் அகம்புகுந்து       
ஓடா தமர்வான் உவந்து.                                                                                                        

(நாகம் = பாம்பு, மலை)

                                  🌸🌺🌸

அனந்த் 16-5-2023

Tuesday, May 2, 2023

குறையும் நிறையும்

 

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்


 <> குறையும் <>

புலன்வழி ஈட்டும் பொருளறி(வு) ஒன்றால்
பொருந்திடும் வினையி ரண்டால்

மலமொரு மூன்றின் வசத்தினில் சிக்கி
வாடுமென் நிலைய றிந்தும்

சலமொடு மதியைச் சடையணி ஈசா
சற்றுமோர் தயவி லாமல்

பலர்முனம் ஆடும் பரிசினில் ஆழ்ந்தால்
..
பாவியெற் கேது நாதி?

(பரிசு = பெருமை, தன்மை, கொடை)

                                                         🌸🌻🌺

                                                    <> நிறையும் <>

பெருமா னுன்றன் பெருமையெலாம்

.. பேசக் கேட்டும் உனைநெஞ்சுள்


ஒருபோ தேனும் நினையாமல்

.. உறங்கிக் கிடந்த ஒதியனுன்றன்


திருமுன் வருமா றருளியவுன்

.. செயலை எவ்வா றியம்புவனே


ஒருமா தருகில் பார்த்திருக்க

.. ஒருகால் உயர்த்தும் நடத்தரசே

                                                       🌸🌻🌺