Tuesday, October 27, 2020

வாய்ப்பருள்வாய்

 

                   திருச்சிற்றம்பலம்

                                <> வாய்ப்பருள்வாய் <>

           


கள்ளம் சிறிதுமிலாக் கணக்கற்ற அடியார்கள்

.. கனகசபை நாதனுன்றன் களிநடனம் தனைப்பருகி

உள்ளம் நெகிழ்ந்தவர் உகுக்கும்நீர் உள்தெரியும்
.. உன்னுருவின் பிம்பத்தை யேனும்கண் டுருகியின்ப

வெள்ளத்துள் ஆழ்ந்திடநல் வினையேதும் செய்யாஇவ்
.. வீணனுக்கும் ஒருவாய்ப்பை வழங்கிடநீ கருதாயோ?  
  

துள்ளும் நடம்காட்டித் துரியநிலை ஈதென்று  
.. சொல்லாமற் சொல்லிநிற்கும் தூயபர தத்துவமே. 

அனந்த் 28-10-2020 

      

Wednesday, October 14, 2020

இரங்குவாயே

                                                திருச்சிற்றம்பலம்




                                                             <>  இரங்குவாயே <>


உலகசுக மொன்றையே உண்மையாய் நம்பிமெய் ஓம்பியே நாளும் ஓயும்

.. ஒருகலை யன்றிவே றொன்றுமே அறிந்திடா உலுத்தனா யிருந்த போதும்

 

நிலவுலவு சடையினோய் நின்திருப் பெயர்களில் ஒன்றையே செப்பி னாரேல்

.. நின்னருட் பார்வையை அன்னவர் பக்கமாய் நிறுத்திநீ யருள்வை என்பார்

 

பலவகையி லுன்புகழ் பாடியுன் தாளினை விலகிடா திரவு பகலாய்ப்

..பரவிடும் அடியனைப் பார்க்கவோர் வேளையை இதுவரை கண்டி லாய்போல்!

 

சிலையெனநீ நின்றிடின் மேலு(ம்)நான் செய்வதற்(கு) யாதுள தறிந்தி லேன்காண்

.. திருவுளம் இரங்குவாய் சிதையில்நான் புகுமுனம் தில்லைவாழ் நடன வேந்தே.

 

(14-சீர் ஆசிரிய விருத்தம்: கருவிளங்காய் விளம் விளம் விளம் விளம் மா தேமா; விளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா)
 

அனந்த் 14-10-2020