Thursday, February 27, 2014

<> ஒட்டிய உறவு <>

திருச்சிற்றம்பலம் 

Inline image 1

<> ஒட்டிய உறவு <>


பூணுவான் சாம்பல் புசிப்பான் இரந்துணவு 

பேணுவான் பெண்ணிருவர் பின்னுமவன் - நாணாய்

 
அணிவான் அரவம்;நடம் ஆடுவான் காட்டில்

 
பணிவேன்இப் பித்தன் பதம்.


திண்டிரள் தோள்உடையோன் திண்டிக்காய் ஓடெடுத்துத் 

திண்டாடி யுண்டிடுவான் சிண்டொடுடை -  கண்டவரோ

பித்தனென் பார்இரவில் பேயுடனும் ஆடிநிற்பான்

இத்தனைச்சீ  ரோன்எம்  இறை



இடமொட்டும் ஓர்பெண் இழிந்தொரு வெள்ளம்

சடையொட்டும் கையொட்டும் ஓடு - மிடற்றில்

விடமொட்டும் காலில் முடக்கொட்டும் இன்னோன்

இடமொட்டு மாம்என் உளம்.



(முடக்கு = வளைவு; நடனமாடத் தூக்கிய காலில் காண்பது; காலடியில் முடங்கிக் கிடக்கும் முயலகனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்)  



... அனந்த்

27-2-2014(மஹா சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த சிறப்பு நன்னாள்)

Wednesday, February 12, 2014

<> கனலை எரிக்கும் புனல் <>


திருச்சிற்றம்பலம்



<> கனலை எரிக்கும் புனல் <>



உணர்வினில் ஊறி உள்ளமெலாம்

...உன்நினை வொன்றே நிலைத்திருக்கும்

....உத்தமர் உறவில் மகிழ்ந்திருக்கும்

......உமையவள் பாகா! உன்விழிகள்



கணந்தொறும் தோன்றும் எண்ணங்கள்

..கனலெனக் கொடியேன் நெஞ்சகத்தைக்

...கருகிட வைக்கும் காட்சியினைக்

....கண்டிடா திருத்தல் முறை,எனினும்



அணங்கினைச் சடையில் அணிந்திடுவோய்!

..அலைபுரள் புனலின் ஓர்துளியால்

...அடியனின் துயரை எரித்தழித்தல்

....அரிதென ஆமோ? அரிஅயன்முன்



தணலொளிப் பிழம்பாய் நீண்டவனே

..சழக்கனென்(று) உதறா தருள்செய்தல்

...சாத்திய மாகா ஒருசெயலோ?

........சரணடைந் தோரைப் புரப்பவனே!
 


... அனந்த் 12-2-2014