Monday, May 26, 2014

களிப்பின் காரணம்

    திருச்சிற்றம்பலம்

Inline image 1
     
               <> களிப்பின் காரணம் <>

கையிலோர் ஓட்டை ஏந்திக் காளைமேல் ஊரைச் சுற்றும்
கைலைவாழ் ஈசா! உன்னைக் கண்டபேர் ஆண்டி என்றே

ஏசினும் மதியா(து) என்றும் இளநகை முகத்தோ(டு) உள்ளீர்
காசினி தன்னில் காணாக் களிப்பிதன் கார ணம்என்?

ஆசையாய் மணம்பு ரிந்த அன்னைபால் பெற்ற அன்ன
வாசமுன் மனத்தில் என்றும் வலம்வரும் இன்பத் தாலோ?*

கேசவன் பிரமனுக்குக் கிட்டிலாப் பேறாய் உன்னை
நேசமாய் இருமைந் தர்கள் நித்தியம் அணைப்ப தாலோ?

சிரத்திலே தாங்கும் கங்கை சிந்திடும் புனலின் தண்மைக்
கரத்தினால் தழுவும் இன்பம் கண்டதால் வந்ததோ? மால்

சோதரி யாளின் கையைச் சொக்கனாய் வந்து பற்றிப்
பூதலம் ஆள வாய்த்த பொற்பினை நினைப்ப தாலோ?

ஈதெலாம் கார ணந்தான் இருப்பினும் இறையே! கான்வாழ்
மாதவர் தம்மில் மேலாய், மாசிலா நால்வர் உன்மேல்

காதல்மீக் கூர்ந்து நெஞ்சம் கசிந்துகண் ணீரும்மல்கிப்
போதொடு நீர்சு மந்து புகுந்துனைப் பித்தா என்று

வாதினில் அழைத்துப் பின்னர் மற்றொரு பற்றில் லேனென்(று)
ஓதிநீ எங்கும் யாண்டும் ஏகிட ஒட்டா துன்றன்

பாதஞ்சிக் கெனப்பி டித்த** பக்தியால் விளைந்த தென்பேன்
நாத!நின் திருமுகத்தில் நடமிடும் நகைய தாமே!


{*பிக்ஷாண்டிக் கோலம் ஏற்ற சிவபெருமான் காசியில் அன்னபூரணியிடம் முதல் பிச்சை பெற்றதைக் குறிப்பது.
** திருஞான சம்பந்தர் – காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி (3.49.1)
அப்பர்- . மாதர்ப் பிறைக்கண்ணியானை.....போதொடு நீர்சுமந்தேத்தி (4.3.1)
சுந்தரர் – மற்றுப் பற்றெனக்கின்றி (7.48.1)
மாணிக்கவாசகர்- உம்பர்கட் கரசே.. சிக்கெனப் பிடித்தேன் (8.37.1) }

.. அனந்த் 26-5-2014

Monday, May 12, 2014

கால் மாற்றிய காரணம்


 <> கால் மாற்றிய காரணம் <>

   
                         திருச்சிற்றம்பலம்
 
அல்லொடு பகலென ஐய!நீ தில்லையில் அம்பலம் தன்னில் உன்றன்
... ஆடுகால் இடதுபால் ஆகவே கொண்டதை அன்றொரு புலவ னார்தம்

சொல்லிலே அங்கதம் தோய்த்தும(து) இடதுகால் முடமென ஆன தென்று
... தூற்றிய பின்னர்உம் தூக்கிய தாளினை வலமென மாற்றி னீரோ?*
இல்லையேல் ஆலவாய் ஈசனாய் நீபுரி எழில்நடம் கண்ட மன்னன்
.. 'இடதுகால் வலித்திடா திருந்திட வலதுதாள் ஏற்றுவீர்!' என்ற தாலோ?**

கல்லிலோர் லிங்கமாய்க் காட்சிநீர் தந்ததன் களைப்பெலாம் தீர மன்றில்
... காலிரு பாலுமாய்க் களிநடம் புரிவதே காரணம் அறிவன் யானே!
  
...அனந்த் 11/12-5-2014

* இது பாவவிநாச முதலியார் என்னும் புலவர் இயற்றியுள்ள ஒரு அழகான பாடலைக் குறிப்பது: http://inisai.wordpress.com/2010/06/12/kaalvannam/ ** இது இராசசேகரன் என்னும் பாண்டிய மன்னனின் வேண்டுகோளைக் குறிப்பது. இதைப்பற்றி டாக்டர் ஜெயபாரதி அவர்கள் தந்துள்ள அருமையான தகவலை (பரஞ்சோதி முனிவரின் அற்புதப் பாடல்கள் உட்பட) இங்குக் காணலாம்: http://www.treasurehouseofagathiyar.net/00800/870.htm