Thursday, November 26, 2020

 இன்று பிரதோஷ நன்னாள்.


              திருச்சிற்றம்பலம்


               <> ஒருகால் ..<>


 




சிரித்தெனை மயக்கும் ஒருகால்

திருப்பதம்* தன்னைக் காட்டி

வரித்தெனை ஈர்க்கும் ஒருகால்

மாவினைப் பயனை எல்லாம்

உரித்தெனைக் காக்கும் ஒருகால்*

உறுபிறப் பிறப்பை வாரா

தெரித்தெனைச் சேர்க்கும் தன்பால்

தில்லைவாழ் தெய்வ மாமே.


(அறுசீர் விருத்தம்; *ஒரு காலத்தில்; திருப்பதம் = சிவபதம்; சிவசாயுச்சியம்.)


            *********

ஒருகா லிருத்தி ஒருகால் உயர்த்தும் உனநடத்தை

ஒருகா லிருத்தி* உடலினை ஓம்புமென் உள்ளினில்நீ

ஒருகா லிருத்தின் எனதுயிர் உய்யும்முன் ஓர்சமயம்

ஒருகா லிருத்தியொர் **கண்ணிடந் தோற்கருள் உத்தமனே

 

(கட்டளைக் கலித்துறை. உனநடத்தை = உன் நடனத்தை; *கால் = காற்று, இங்கு, மூச்சுக்காற்று;  **இடந்து = தோண்டி - கண்ணப்பன் பற்றிய குறிப்பு.)

 

              *********  

ஒருகால் உருகுமென் னுள்ளம் உன்னிடம் ஒன்றி,எனில்

ஒருகால் உனைமறந் தெத்தையோ உன்னும் உனையடைய

ஒருகால் இழுத்தொரு கால்விட் டுயர்தவம்* ஆற்றிலனுன்

இருகால் அடிக்கீழ் இருத்திடின் உய்வேன் எனதிறையே.

(கட்டளைக் கலித்துறைபூரகம், ரேசகம் என்னும் இருவகை மூச்சு)

 அனந்த் 27-11-2020

Wednesday, November 11, 2020

கூத்தின் இரகசியம்

                             

                            <>  கூத்தின் இரகசியம் <> 


                  

பித்தனென் பேரெனப் பெருமையாய்ப் பேசிமுன் பேதைசுந் தரனின் முன்னம்
..
பிடிவாதம் செய்(து)அவன் அடிமையாம் உனக்கெனப் பிறரைநீ நம்ப வைத்தாய்

அத்தனை பிட்டையும் அளியெனக் கென்றொரு கிழவிபால் பேரம் பேசி
.. அவளிட்ட வேலையைச் செய்திடா(து) உலகுளோர் அடிபடு மாறு செய்தாய்  

கத்துகான் நரிகளைப் பரிகளாய்க் காட்டிஅப் பாண்டிய மன்னன் தந்த
.. கணக்கில்லாப் பரிசெலாம் பெற்றபின் மீண்டுமப் பரிநரி ஆகச் செய்தாய்

இத்தனை கூத்தையும் இங்குளோர் அறிந்திலார் என்றுநீ எண்ணி யன்றோ
… இவண்வந்து பொதுவிலே ஈச!நீ தவழ்சிரிப் புடன்நட மாடி நிற்பாய்? 

அனந்த் 12-11-2020