Tuesday, July 24, 2018

தகாத செயல்


திருச்சிற்றம்பலம்

             <> தகாத செயல் <>


உகந்த தாகா(து) எனக்கருதும்
.. ஒருநஞ் சைநீ உண்டதொரு

தகுந்த செயலே அதுஉன்றன்
.. தயையைக் காட்டும்; மாறாக

அகந்தை என்னும் மதிமயக்கும்
.. அரும்நஞ் சொன்றை என்மனத்துள்

சகந்த னில்நான் பெறச்செய்தாய்
.. சம்போ! னோ இம்முரணே.


தொல்லை தருமென் மனத்துயரைத்
.. தொலைக்க வழியைக் கண்டுகொண்டேன்

எல்லை இல்லாப் பெருவெளியில்
.. எங்கும் யாண்டும் நிலைத்தாடும்

தில்லைப் பெரும! என்மனத்தைத்
.. திரும்பக் கொடுத்தேன் இனிஉன்னை

அல்லா லெங்கும் அந்தமனம்
.. அலையா வண்ணம் காப்பதற்கே.


காணும் எல்லாப் பொருள்களிலும்
.. கனக சபையின் நாயக!நீ

பூணும் சடையார் புனல்மதியும்
பொலியும் நுதலும் புன்சிரிப்பும்

தூணை நிகர்நின் தோள்களிலே
.. தொங்கும் அரவும் புலியதளைப்

பேணும் இடையும்  திருப்பதமும்
.. பிரியா வண்ணம் தோன்றவையே.


அனந்த் 24/25-7-2018.

Tuesday, July 10, 2018

பாடும் பேறருள்வாய்


   <>  பாடும் பேறருள்வாய் <>

        திருச்சிற்றம்பலம் 


நான்என் செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகியங்(கு) உள்ளிருக்கும்
தானும் உருகித் தனிமையே மிஞ்சிமெய்த் தத்துவமாம்
கோனில் கலந்தவன் கூத்தினில் சேர்ந்து குதிக்கையிலே.*  1.

கையில் துடியும் கனலும் அருள்பெறக் காலடியே         
உய்யும் வழியென் றுணர்த்தும் சமிஞ்ஞையும் உள்ளுருகச்
செய்யும் சிதம்பரச் செல்வனின் சீரடி சிந்தைவைத்தார்
வையம் வழங்கும் சுகத்தைப் பதரென வீசுவரே.   2

வீசிடுந் தென்றலும் வீணையின் நாதமும் விண்மதியின்       
தேசுடை வேனிலும் சேருதல் போன்றது செம்மலராம்             
ஈசனின் சேவடி நீழலென்(றுஅப்பர் இயம்பியதைப்       
பேசி உருகிடும் பேறதன் மிக்கதோர் பேறுளதோ?    3

உள்ளதாய் எல்லா உணர்வுளும் நிற்கும் ஒருபொருளை
உள்ளுளே காண உதவும் வகையினில் ஓருருவாய்த்
தெள்ளெனக் கண்முன் தெரிய நடமிடும் சிதம்பரத்தான்
உள்ளபோ திங்கே உரைப்பதற் கில்லை ஒருகுறையே.    4

ஒருங்கே இணைந்த உமையுடன் எல்லா உலகினையும்
தருங்கோன் புரந்தும் துடைத்தும் கரந்தும் தனதடியை
நெருங்கு பவர்கருள் நின்மலன் நெஞ்சில் நிலைத்துவிடில்
வருங்கொல் பவமெனும் மாய வலைவிழும் வாதனையே?    5

தனையே நினைந்து தலந்தொறுஞ் சென்றுநற் றண்டமிழ்ப்பாப்
புனைவார் உளத்தினிற் பூவாய் மலர்ந்திடும் புண்ணியன்நம்
வினையாம் விலங்கைத் தகர்ப்பான் எனவே விரைந்துலகீர்
முனைவீர் அருளாம் முகில்பொழி மாரியில் மூழ்கிடவே     6

மூவகை மாசினை முற்றும் அகற்றும் முழுமுதலாம்  
தேவனின் சீரில் திளைத்து மகிழ்ந்தவர் செந்தமிழின்
பாவகை யாவிலும் பற்பல வாகமுன் பாடியவை
நாவினில் நிற்கில் நமக்கிலை என்றும் நமன்பயமே.               7

பயன்களுள் மேலாம் பயனெது கேட்பின் பரமனவன்
நயங்களை உன்னி நயனம் நனைய நவநவமாய்
வியந்தவை நம்முள் விளைக்குமின் பத்தில் மிதந்தவன்றன்
வயமென நம்மை வரித்திடும் பேற்றை வழங்குவதே.      8.

தேனிகர் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்ததைச் செய்யுளிலே
நானிலத் துள்ளோர் நயக்க நிரப்பி நமையுமந்தக்
கோனவன் மேன்மையைக் கூறிட வைத்த குரவர்புகழ்
நானிவண் செப்பிட நாவொரு கோடியை நாடுவனே.      9

நாட்டார் அறிய நடம்புரி நாயக நானுமுன்சீர்
ஏட்டில் எழுதிட இச்சை கொளவகை ஈந்துனது
வீட்டை அடைந்திட வையென வேண்டுவன் வேதனும்மால்
தேட்டம் முடிவினில் தோன்றிய செம்மலைத் தெய்வதமே.  10

(செம்மலை = அருணாசலம், திருவண்ணாமலை).    
   
(*இங்குநான் என்பது காலத்திற்கும்  இடத்திற்கும் அப்பாலான நமது உண்மைச் சொருபத்தை அறியாமல்ஊனால் ஆன உடலையும் எண்ணக் கோவைகளால் ஆன மனத்தையும் நாமாகக் கருதும் நிலையைக் குறித்தது.)

அனந்த் 10-7-2018 பிரதோஷ நன்னாள்