Tuesday, October 31, 2017

தொலைவு உளதோ?

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

























<> தொலைவு உளதோ? <>

கடவுளை நீங்கள் அடைவதற்குக்
.. காண்பீர் இதுவோர் வழிஎன்பார்

கடந்து செல்லத் தொலைவின்றிக்
.. கணமும் பிரியா வணமாய்என்

உடனி ருக்கும் நடத்தரசை
.. ஒன்றத் தொலைவென் றேதுளது?

கடல்மீன் தாகத் தால்வாடக்
.. கண்டார் உளரோ சொல்வீரே!**

                    ******

கல்லி னுள்ளே மரத்துள்ளே 
.. கடலுள் ஐந்து பூதத்துள்

எல்லாப் பொருள்கள் தம்முள்ளும்
..  இயல்பாய் நிற்கும் பேருணர்வு,

நல்லோர் உள்ளக் குகையினுள்ளே
.. நாளும் ஒளிரும் விளக்(கு)இங்கே

தில்லைப் பதியின் நாயகனாய்த்
.. திகழும் அழகைக் காண்பீரே.

                    ******

வில்வம் திகழும் அணிசடையில்
.. வீழும் புனலும் நிலவொளியும்

சொல்லற் கரிய எழில்பொதிந்த
..சுடர்செம் பவளத் திருமுகத்தில் 

மெல்ல அரும்பும் புன்னகையும்
.. வேதத் தொலியாய்க் காலெழுப்பும்

சல்சல் ஒலியும் சேரநமைச்
.. சேர்ப்பான் மெய்ம்மைச் சிவத்துள்ளே.

(** இந்தஉவமை பரமஹம்ஸ யோகானந்தா அவர்களின் ஆங்கில உரையொன்றில் கண்டது.)

..அனந்த் 1-11-2017 பிரதோஷ நன்னாள்

Monday, October 16, 2017

உன் திருவடி

இன்று பிரதோஷ நன்னாள்
 திருச்சிற்றம்பலம்

<> உன் திருவடி <>

             
​              
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டன் மன்னவ! நீசெயும் மாயமென்னே.

மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!

காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும்  சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாரெல்லாம் ஏற்றில்
திரிந்திடுமுன் தாட்டூசி  தா.

(விண்பால் அலைந்தோர் = விண்ணில் மூன்று கோட்டைகளில்  (திரிபுரம்) அலைந்த அசுரர்கள்; பரிந்தளித்தாய்   ண்டித்தருளுவதைக் குறித்தது; தாட்டூசி = தாள்தூசி.)


அனந்த் 17-10-2017 

Monday, October 2, 2017

பூத உடல்

திருச்சிற்றம்பலம்

<> பூத உடல் <>


 
நீரில் மிதந்து கருவாகி
.. நிலத்தில் விழுந்து காற்றிழுத்துப்
பாரில் திரிந்து பல்லோரும்
.. பாவி யென்னும் படியாய்வாழ்ந்(து)
ஊரின் வெளியே தீயில்புகும்
.. உடலம் இதனைக் கொண்டுன்னை
நேரில் காணல் எனும்விந்தை
.. நிகழ வைத்தல் நின்கடனே

எல்லாம் அறிந்த வல்லோன்நீ
.. எனக்கோர் உடலம் தந்தசெயற்
குள்ளே ஒளிந்த காரணத்தை
.. உணரா திருந்திந் நாள்வரையில்
பொல்லா நினைப்போ(டு) உரை,செயலைப்
.. புரிந்து வந்தோன் எனஅறிந்தும்
நல்லோய் எனையும் நின்னடியை
.. நாட வைத்தல் நின்கடனே

குழியில் விழுந்து தவிப்பவனின்
.. கூச்சல் கேட்டுக் கைதரல்போல்
அழிவை நோக்கி விரையுமென்னை
.. அன்பின் வடிவே நீதடுத்துன்
எழிலைக் காட்டி ஈர்த்துன்றன்
.. இணையடி தன்னைச் சார்வதற்கு
வழியைக் குறித்துன் அடியவனாய்
.. வாழ வைத்தல் நின்கடனே.

காற்றும் நீரும் நெருப்புமிவன்
.. கயவன் நல்லோன் எனப்பாரா(து)
ஊற்றம் தருமாப் போலாகும்
.. உன்றன் கருணை எனப்பெரியோர்
சாற்றல் கேட்(டு)இன்(றுஉன்கமலச்
.. சரணம் நாடி வந்தேனைத்
தூற்றா தென்றன் மனமாசைத்
.. தொலைத்துக் காட்டல் நின்கடனே

நாட்டம் எல்லாம் என்றனுக்கு
.. நலிவைக் கொடுக்கும் நினைவுகளில்
தேட்டம் எல்லாம் என்றனுக்குச்
.. சீரைக் கெடுக்கும் செல்வத்தில்
வாட்ட மடைந்தேன் இவற்றாலே
.. வழியொன் றிதுவென் றுன்னடியார்
கூட்டம் சொல்கேட்(டுஉன்முன்கை
.. கூப்பி நின்றேன் ஏற்பாயே.

(காற்றிழுத்து - காற்றைச் சுவாசித்து)

.. அனந்த்
பிரதோஷ நன்னாள் -   2/3-10-2017