Sunday, July 31, 2016

எப்படிச் செய்வேன்

                                       திருச்சிற்றம்பலம்

              Inline image 2                           

 
                       
                            <> எப்படிச் செய்வேன்? <>


அருகிருக்கும் அன்னைமுகம் அரைவிழியால் நோக்கியவா(று)
.. ஐயனவன் தில்லைச்சிற் றம்பலத்தில் ஆடுமந்த

பெருமெழிலைப் பருகிவந்(து)உன் றனுக்களிக்க வைத்தனன்நான்
.. பின்னர் இருசெவிகளையும் பிறையணியும் பெம்மானின்

திருவைவிரித்(து) அடியர்சொலும் துதிகளெல்லாம் கேட்கவைத்தேன்
.. தேனாகத் தித்திக்கும் தேவனின்பேர் ஆயிரத்தின்

உருசியெலாம் உனக்குரைக்க நாவினுக்கோர் ஆணையிட்டேன்
… உனக்கெனநான் செய்தபல உதவிகளை ஒருசிறிதும்

மதியாமல் உதறியுன்றன் மதம்பிடித்த போக்கினைநீ
.. மாற்றாமல் உன்னிழிய வழியினிலே சென்றெனக்கோர்

எதிரியென என்றுமெனை வாட்டுகின்ற என்மனமே!
.. எவ்வகையில், எதைக்கொண்(டு)இவ் ஏழைநான் உன்னுணர்வைச்

சதிர்பயிலும் ஐயனின்பால் சாரவைத்துப் பிறப்பிறப்புச்
.. சகதியிலே சந்ததமும் சலியாமல் அளைந்திடும்உன்

கதியிதனை மாற்றியந்தக் கைலைமலை இறைவனையோர்
… கணமேனும் உள்வாங்கிக் கசிந்துருகச் செய்வேனோ?

அனந்த் 31-7-2016

Friday, July 15, 2016

விந்தை செய்வாய்

திருச்சிற்றம்பலம்

Inline image 1

<> விந்தை செய்வாய் <>

வண்ணப் பாடல். சந்தக் குழிப்பு: தனதனன தனதனன தானத் தானத் தனதான
(தாளம்: தகதகிட  தகதகிட  தகிட  தகிட  தகதிமிதக)
திருப்புகழ்: ஒருபொழுது மிருசரண.....

அனவரத முலகசுக நாடித் தேடித் திரிவேனே 
... அரனுனது கமலமெனுந் தாளைச் சேவித் தறியேனே

கனகசபை மிசைநடன மாடிப் பாலித் தருள்வோனே
… கருணைமிகு மிறைவனெனும் பேரைக் காக்கக் கடிதேகி

இனமுமிவ னிழிநிலையில் வாழத் தேவைப் படலாமோ
.. எனவுனது மனமிளகி நேயத் தோடிக் கணம்வாராய்

அனையவளு மரியுமய னாரிப் பேதைக் கிதுபோல
.. வருளுவதொ ரதிசயமென் றோதச் சீரைத் தருவாயே

பதம் பிரித்து:

அனவரதம் உலகசுகம் நாடித் தேடித் திரிவேனே 
... அரன்உனது கமலம்எனும் தாளைச் சேவித்து அறியேனே

கனகசபை மிசைநடனம் ஆடிப் பாலித்து அருள்வோனே!
… கருணைமிகும் இறைவன்எனும் பேரைக் காக்கக் கடிதுஏகி

இனமும்இவன் இழிநிலையில் வாழத் தேவைப் படலாமோ
.. எனஉனது மனம்இளகி நேயத் தோடுஇக் கணம்வாராய்

அனைஅவளும் அரியும்அய னார்இப் பேதைக்கு இதுபோல
.. அருளுவதுஒர் அதிசயம்என்று ஓதச் சீரைத் தருவாயே



அனவரதம் = எப்போதும்; பாலித்து = காத்து; இனமும் = இன்னமும்; அனை= அன்னை என்பதன் சுருக்கம்.)

. அனந்த் 16-7-2016

Saturday, July 2, 2016

கொடை வள்ளல்

திருச்சிற்றம்பலம்

               
     


<> கொடை வள்ளல் <>

கண்கொடுத்தாற்(கு) அடிகொடுத்தான் கான்மாக்குக் கைகொடுத்தான்
பெண்கொடுத்த மாமனுக்குத் தலைகொடுத்தான் பேய்க்(கு)அன்று
விண்கொடுத்தான்; கிழவிக்கு மண்,மன்னற்(கு) அடிகொடுத்தான்;
பண்கொடுத்தான் பத்தர்க்குப் பாடுமெனக்(கு) என்கொடுப்பான்?

பொருள் விளக்கம்:  தனது கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பனுக்குச் சிவபெருமான் தன் பாதத்தைத் (சிவபதத்தைத்) தந்தருளினான்; காட்டில் வதியும் மானுக்கு கையில் ஏந்தி இடங்கொடுத்தான்; மாமனாராகிய தக்ஷனின் தலையை வீரபத்திரர் கொய்தபின் மாற்றாக அவருக்கு ஆட்டின் தலையைத் தந்தான்; பேயுருத் தாங்கிய காரைக்காலம்மைக்குக் கயிலாயப் பதவி தந்தான்; வந்திக் கிழவிக்கு மண்ணை (வைகையாற்றில் கொட்டிக்) கொடுத்தான்; தன்னைப் பிரம்பால் அடிக்க வந்த பாண்டியனுக்கு அந்த அடியைத் திருப்பி அவனுக்கே கொடுத்தான்; சேக்கிழார், சுந்தரர், முத்துத்தாண்டவர், போன்றோர்க்குப் பாடலின் முதற்சொல்லை எடுத்துக்கொடுத்தான்;  அன்னாருடைய திருப்பாடல்களைப்) பாடிப் பணியும் எனக்கு என்ன தருவானோ? 

{அடி = பாதம், அடித் தண்டனை;  கைகொடுத்தான் என்பதற்கு, கைகொடுத்து உதவினான் என்றும், தலைகொடுத்தான் என்பதற்குத்   தலைமை (பதவி) தந்தான் என்றும் சிலேடையாகப் பொருளும் கொள்ளலாம்.}


..அனந்த்   2-7-2016