Thursday, February 23, 2017

தில்லை நடராசன் வழிபாடு

இன்று மஹாசிவராத்திரியை ஒட்டிய பிரதோஷச் சிறப்புத் திருநாள். 

திருச்சிற்றம்பலம்
<> தில்லை நடராசன் வழிபாடு <>

விநாயகர் துதி:

வினைதொடங்கும் முன்னம் விநாயக! நின்னை
நினைந்துநான் வேண்டிடுவேன் நெஞ்சுள் – கனகசபை
நாதன்நின் தாதைக்கு நான்செய்யும் பூசைஓர்
ஏதம் இலாதமையச் செய். 

தியானம்:


நித்தியமாய் நிறைந்திருக்கும் சத்தியத்தின் திருவுருவை
முத்தியெனும் பெரும்பதத்தின் தத்துவத்தைத் தாண்டவத்தில்
பத்தருக்குப் புலப்படுத்தும் சித்தனை முதல்வனைஎன்
அத்தனைநான் அகக்குகையில் வைத்தவனைப் போற்றுவனே
.. இத்தருணம் வந்தருளச் சித்தம்கொள வேண்டுவனே.        

மண்ணிலுயர் தில்லையில்பொன் மன்றாடும் என்னரசே!
உண்ணெகிழ்ந்து யானிங்கே உன்னுருவைத் தியானித்துக்
கண்பனிப்பத் திருமேனி கைதொட்டுக் காதலுடன்
அண்ணலுனக்(கு) ஆரா தனைபுரிய அனுமதியே
…. பண்ணொடுநான் பாடியுனைப் பூசிக்க அனுமதியே

இருக்கை அளித்தல்:

மங்காமல் ஒளிர்ஞான வடிவாக மண்ணொடுவிண்
எங்குமுள பரம்பொருளாம் ஈசன்நீ என்னுள்ளே
தங்கி அமர்வதற்குத் தந்திடுவேன் மணியிழைத்த
தங்கப் பலகையதில் சம்மணமிட்(டு) இருந்திடுவாய்
… அங்கமெலாம் ஓய்வெடுக்க ஆசனத்தில் அமருவையே!

தைலம் சாத்தல்:

அயிலேந்தி மாற்றாரின் ஆணவத்தை அழித்திடுவோய்
கயிலாயத் துறையும்முக் கண்ணாஎன் கண்மணியே!
மயிலேறும் மைந்தனுடன் மூடிகவா கனன்காணத்
தயிலமுடல் சாத்திடுவேன் தயையுடன்நீ ஏற்பாயே
… ஒயிலாக நின்றுனது உருவழகைக் காட்டுவையே!

நீராட்டு:

கங்கையொடு யமுனைநீர் சரசுவதி காவிரிநீர்
பொங்கிவரும் வைகையொடு பொருநைநதி நீர்மொண்டு
மங்கைசிவ காமியவள் மனமகிழ்ந்து பார்த்திருக்கச் 
சங்கர!உன் சடைமுடிமேல் சலசலெனப் பொழிந்திடுவேன்
… சாருமடி யார்க்கருள்வோய் தண்புனல்நீர் ஆடுதியே!.

அலங்காரம்:

காண்போர் அதிசயிக்கக் கங்கா தரனே!நீ
பூணுதற்கு முப்புரிநூல் புத்தாடை போர்த்தியுன்றன்
மாண்பினிற்குத் தக்கமணி மாலை,அக்கு வடங்களுடன்
சேணுயர்சிம் மாதனத்தைத் தேர்ந்துன்னை அமர்த்திவைப்பேன்
… பேணு(ம்)சிவ கணம்வியந்து பேசு(ம்)வணம் ஏற்பாயே.      

வானெட்டும் மணங்கமழும் மஞ்சள்வண்ணச் சந்தனமும்
மானிட்ட கத்தூரி மார்பிலிட்டு மேனியெல்லாம்
கானிட்ட திருநீற்றைக் காதலுடன் சாத்திடுவேன்
தானிட்டம் போல்நடிக்கும் தத்துவனே ஏற்பாயே
.. யானிட்ட அலங்காரம் ஆசையுடன் ஏற்பாயே

மணங்கமழும் மல்லிகையும் மரிக்கொழுந்து முல்லையொடு
குணத்திலுயர் கொன்றையுடன்  கூவிளமும் தும்பைகொண்டு
அணங்கவளோ(டு) இணைந்தஉன தழகுதிரு மேனியைநான்
வணங்கிஅலங் கரித்திடுவேன் மகிழ்வுடன்நீ ஏற்பாயே!
.. இணங்கியிந்த எளியேனின் இப்பணியை ஏற்பாயே.

துதி:

 

அனைத்துமாய் நிற்கும் ஐயனே போற்றி
ஆதியே ஆதிரைக் கூத்தனே போற்றி
இன்னல்கள் நீக்கும் இறையே போற்றி
ஈதெனக் காட்டொணா இயல்போய் போற்றி
உணர்வென என்னுள் உறைவோய் போற்றி
ஊனாய் உயிராய் உள்ளோய் போற்றி
எமக்கெனத் தில்லையில் இலங்குவோய் போற்றி
ஏமாப்பு அடியார்க் கீவோய் போற்றி
ஐவர் பகையை அறுப்போய் போற்றி
ஒன்றெனத் திகழும் உணர்வே போற்றி
ஓமெனும் சொல்லில் உறைவோய் போற்றி
ஔடதம் பவநோய்க் காவாய் போற்றி
போற்றி போற்றி பூரணா போற்றி
போற்றிபொன் னம்பலப் புனிதா போற்றி!

தூபம்:

காற்றில் கலந்த மணம் போல 
.. கடலில் கலந்த நதிபோல
மாற்றம் மறைந்தென் சிந்தையொரு
.. வரையில் லாத உணர்வாகத்
தோற்றம் பெருக்கம் முடிவில்லாச்
.. சோதிப் பிழம்பின் வடிவாகத்
தோற்றும் அருணைப் பொருளையென்னுள்
.. துய்க்கும் நிலையைத் தருவாயே!

தீபம்:

மண்ணிதன் இதயமாய்த் திகழ்ந்திடும் தில்லையில்
... வந்தவர்க் கருளை ஈயும்

..வள்ளலே! வள்ளலார் துதிக்கு(ம்)நற் சோதியே!
... வடிவிலா வடிவ மே!என்
கண்முனே தெரிதரும் கடவுளே! காண்பவர்
... கருத்துளே ஒளிரும் மெய்யே!
 ..கனகமா சபையிலே களிநடம் புரிந்திடும்
... காட்சியைக் காணு வோர்க்கு
விண்ணவர்க் கெட்டிடா மேனிலை அளித்திடும் ... வேதனே! வேதாந் தனே>
.. வினையெனும் இருளினை விரட்டுமோர் விளக்கே!
... விஞ்ஞான மெஞ்ஞா னனே!
எண்ணிலா உருவமாய் இலங்கிடும் ஒன்றென
... ஏத்தியுன் அடிப ணிந்தே
.. இன்றுநான் ஏற்றுமிவ் வெளியதோர் ஒளியினை
... ஏற்றெமக் கருளு வாயே !

நைவேத்தியம்:

உருக்கியவெண் நெய்சேர்ந்த ஒள்ளடிசில் பருப்பொடுநற்
சருக்கரையும் தேனுஞ்சேர் தீஞ்சுவைப் பாயசமும்
தாமாகத் தருக்களிலே கனிந்துசுவை ஒழுகிநிற்கும் 
தேமாவும் தீம்பலவும் செங்கதலி மாதுளையும்
அதிரசமும் இலட்டுவொடு  அப்பவகை பத்தும்முப்
பதின்சுற்று முறுக்குமெனப் பணியாரக் குவியலொடு     
வாதுமையும் முந்திரியும் வாகுடன்சேர் வடதேசக்
கோதுமையைக் கொண்டபணி யாரவகைக் கூட்டும்நான்
பணிவுடனே படைக்கின்றேன் பார்த்துண்பாய் தாகத்தைத்
தணிக்குமிள நீரோடு பன்னீர்த்தாம் பூலமும்நீ
ஏற்றிடுவாய் ஏறேறும் என்னரசே! இளைப்பாறக்
காற்றையள்ளும் விசிறியைஎன் கரம்கொண்டு வீசிநிற்பேன்
நாற்றிசையுன் சடைபறத்தல் நானிலத்தார் காணவைப்பேன்
சாற்றவொணாச் சீர்த்தில்லைச் செல்வ!பரிந் தேற்பாயே. 

கற்பூர ஆரத்தி:

பாரொருகால் ஊன்றிமறு பாதத்தை விண்ணுயர்த்தும்
பேருருவத் துள்ளேமெய்ப் பொருளுணர்த்தும் வித்தகனே!
காருருவ மாலவனும் கஞ்சமலர் நான்முகனும்
சீருணர வொண்ணாத் திருவுருவை நித்தமுமுன்
பேருரைப்போர் சிந்தைப் பெருவெளியில் காட்டிடுவாய்
ஆருரைப்பார் இவ்வருளின் அற்புதத்தைச் சொல்லவொணாப்
ஏருருவப் பேரழகோ(டு) எம்மன்னை கூடவரத்
தேருலவும் தில்லைவாழ் செல்வா! சிவபரனே!
ஆருயிரே! ஆரழலே! யானளிக்கும் சிற்றொளியைச்
சேர்த்திடுவாய் நின்னுருவில் தேர்ந்து.

மானஸ மாலை* :

இறைவடி வெனவொளிர் தமிழ்எழுத் தெனும்மலர்
… இருதய மெனுங்குட லையில்நிறைத் தெனதுளம்
நிறைபரி வெனுமொரு  கயிறது தனிலவை
… நெடுகிலும் நிரவிடு வணமமை அலங்கலில்
உறைமணம் எனஉன தருளது மருவஉன்
.. உயர்புய வரையினில்  உவகையொ(டு) இடுவனே
மறையவர் குரலொலி மலிசிதம் பரமதில்
.. வளர்சிவ மணியிதை மனமுவந்  தணிவையே.
(*மாத்ருகாபுஷ்ப மாலை; என =எனது)

சுற்று வலம்:

கரங்கள்முதல் பொறியைந்தால் கரணமொரு நான்கவற்றால்
… காலையில் இரவு பகலில்
உறங்கையிலும் விழித்திருக்கும் நிலையினிலும் எளியேன்யான்
.. உணர்வொடும் உணர்வி லாதும்
தரங்குறைந்த செயலேனும் தகைமையுள செயலேனும்
.. .. சருவமும் அடியர் காண
அரங்கினிலே நடமாடும் அரசே!உன் வழிபாடென்(று)
.. அகங்கொள்ள வேண்டு வேனே.

…அனந்த் 24-2-2017

(பெரியோர் வகுத்த இறைவழிபாட்டு முறையின்வழி சிறியேன் இயற்றிய இத்துதியில் காணும் குறைகளை அவ்விறைவனும் இதைப் படிப்போரும் பொறுத்தருள வேண்டுகிறேன்.)    

Wednesday, February 8, 2017

    திருச்சிற்றம்பலம் 


<> நடக்கட்டும் <>

புறப்பட்டு நீஎங்கும் போனாலும் என்னுள்ளே
அகப்பட்டுக் கொள்ளாமல் ஆகுமோ ஐயா!உன்

வயப்பட்ட தாலினிமேல் வையத்தில் ஐவர்க்குப்             
பயப்பட்டு வாடேன் பரமேசா! உன்கோயில்

படிக்கட்டில் நின்றுள்ளே பரவசம் மேலிட்டுப்
படிக்கட்டும் என்நா பக்தர்தம் பதிகங்கள்

கிடக்கட்டும் என்வினைகள் கேடுற்(று)என் வாழ்வென்றும்
நடக்கட்டும் நீகாட்டும் நன்னெறியில் பீடுடனே!


அனந்த் 8-2-2017