Thursday, April 16, 2015

எப்போதும் உன்னை..


 திருச்சிற்றம்பலம் 

 

<> எப்போதும் உன்னை.. <>

புலன்வழி துய்க்கும் போகத்தின் ஊடு(ம்)உன்
.. பொன்னம் பலம்எண்ணவும்

நலம்குறைந் தரற்றும் நாளிலுமுன் நாமமென்
.. நாவில் நடஞ்செய்யவும்

பலன்தராச் செயல்நான் புரிகின்ற வேளைஉன்
.. பத்தர் துணைகிட்டவும்

சலம்தலை தாங்கும் சங்கர!என் தலையுன  
.. தாளில் கிடக்கட்டுமே.

...அனந்த் 16-4-2015

Thursday, April 2, 2015

வாய்ப்புக் கிட்டும்!


 

               திருச்சிற்றம்பலம்
           


                <> வாய்ப்புக் கிட்டும்! <>


குவிக்குமென் கரமிரண்டின் ஊடே சென்று
.. கூத்தனே! என்நெஞ்சத் தமர்ந்தாங்(கு) என்னைத்

தவிக்கவைத் திடும்வினைகள் கூட்டத் தைநீ
.. தகர்த்தழித் திட்டுன்றன் நினைப்பை நட்டால்

புவிக்குளே மாந்தர்நின் செயலைக் கண்டு
.. புகழ்ந்திடும் சொல்உன்னில் பாதி கொண்டாள்

செவிக்குளே செல்லும்போ(து) அவள்ம கிழ்ந்து
.. சிரிப்பதை நீகாணக் கிட்டும் வாய்ப்பே!

.. அனந்த் 1-4-2015