Wednesday, October 26, 2016

கருணை இமயம்

                  திருச்சிற்றம்பலம்
         

                <> கருணை இமயம் <>

கள்ளக் குரம்பையொன்றைக் காட்டியெனை அதில்புகுத்தித்
தள்ளிவிட்டாய் என்றுபழி சாற்றியஎன் கண்முன்னே
வெள்ளச் சடையோய்!உன் விந்தைஉருக் காட்டிஇன்ப
வெள்ளத்தில் ஆழ்த்தியபின் வேறுநினைப்(பு) அகற்றிஎன்றன்
உள்ளத்தின் அடித்தளத்தில் உன்னிருப்பை உணரவைத்தாய்
பள்ளத்தில் இருந்தேனைப் பனிவரையில் உறைவோய்!நீ
மெள்ள எடுத்துன்றன் மேன்மை தெரியவைத்தாய்
வள்ளலுன்றன் கருணைசொல வார்த்தையிலா(து) ஆகினனே!
(குரம்பை = உடல்)

...அனந்த் 27-10-2016

Wednesday, October 12, 2016

தில்லை இறை

               திருச்சிற்றம்பலம்

          <> தில்லை இறை <>



















தில்லையிலே ஆடிடுவான் தேடுபவர் மனவெளியின்
எல்லையிலே ஆடிடுவான் எழுந்தருள வேண்டினொரு
கல்லினிலே ஆடிடுவான் கசிந்துருகி நாவுரைக்கும்
சொல்லினிலே ஆடிடுவான் தோற்றமிலாப் பரம்பொருளே  (1)

பரமென்றும் இகமென்றும் பாரென்றும் விண்ணென்றும்
நிரந்தரமாய் நின்றிவற்றின் நீங்கியுள்ள வாலிறைவன்
உரமிகுந்த அகந்தையைஉட் புறமெரிப்பான் தனைஅறிய
வரந்தருவான் மலமகல வேண்டிடும்தன் அடியவர்க்கே.       (2)

அடியென்றும் முடியென்றும் யாதுமிலாத் தீப்பிழம்பாய்
நெடியபர தத்துவத்தின் நீர்மைஅரி அயனறியும்
படிநின்ற பரமன்தன் பத்தரது மனக்குகையில்
குடிகொண்டு மெய்யுணர்வின் கோலத்தைக் காட்டிடுமே.    (3)

காட்டினிலே ஆடுகின்ற காட்சியிலே மாந்தர்உடற்
கூட்டினது நிலையாமை குறித்தவர்கள் கரையேறி
வீட்டின்பம் பெறு(ம்)வழியை விளக்கிடுவான் தாயைநிகர்
பாட்டியவள்* பாட்டில்உறை பொருளாகத் திகழ்பரமே.       (4)

(*பாட்டி – பேயுருக் கொண்டு, சுடுகாட்டில் பரமனின் ஆட்டத்தைக் கண்டு பாடும்  - சிவபெருமானால் ’தாயே!’ என்றழைக்கப்பட்ட பெருமை கொண்ட - காரைக்கால் அம்மையாரைக்  குறிப்பது.)

திகட்டாத தெள்ளமுதாய்ச் சிந்தையிலே ஊறிஇந்த
சகத்திலுள்ள சங்கமத்துள் தாவரத்துள் சீவர்கள்தம்
அகத்தினுளும் மெய்யுணர்வாய் அனவரதம் விளங்கிடுவான்
முகத்தினில்மென் முறுவலுடன் மன்றாடும் தில்லையனே      (5)

(அந்தாதிப் பஞ்சகம்; படம்: “நடராசப் பெருமான்” திருவாவடுதுறை ஆதீன வெளியீடு, 2001)    

.. அனந்த் 13-10-2016