Thursday, November 23, 2023

திருச்சிற்றம்பலம்

இன்று பிரதோஷ நன்னாள்.


                       <> அண்டி வந்தேன் <>


                     


ஆசை மிகுந்துன் அருட்பதம் பற்றிட அண்டிவந்தேன்

ஈச! அருள்தர ஏன்நீ தயங்குவை என்றறியேன்

நீச னெனத்தாய் மகவினை யாங்ஙணும் நீக்குவளோ

தேசுடன் தில்லைத் தலத்தில் நடமிடு தெள்ளமுதே.


                                  🌺🌺🌺


                   <> உவகை ஒளி <>


   

   காலம் இல்லா முழுப்பொருளைக்

   ... கண்டஞ் செய்து பற்பலவாய்க்

   கோலங் கொடுத்துக் குவலயத்தில்

   ... கூட்டி வைக்கும் மாயையதன்

   சாலம் உணர்ந்த ஞானியவன்

   ... சலியா தகத்தில் பன்மையெழும்

 மூலம் நாடி மெய்யுணர்வில்

... மூழ்கி முழுமை உற்றிடுமே.  


    .... அனந்த் 24-11-2023  

Thursday, November 9, 2023

ஒன்று பலவாகி

 


இன்று பிரதோஷ நன்னாள்

          <> யாரே அறிவார்? <>


     ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீ நடராஜர்- கோனேரிராஜபுரம்.jpg
     
ஒருகால்* ஒயிலாய் ஒருகா லுயர்த்தி
.. ஒருகை நிமிர்த்தி உன்பே ரெழிலில்

உருகா என்றன் உளத்தை மெழுகாய்
.. உருகும் படியாய்ச் செய்வாய் மறுகால்

வருவாய் இலிங்க வடிவில் அதனில்
.. மயங்கி நிற்பேன் மற்றோர் போதில்

அருவாய் ஒளிர்வாய் ஐயா! உன்றன்
.. ஆட்டை யாரே அறிய வலரே!

(*ஒருகால் = ஒரு வேளையில்; மறுகால் = இன்னொரு வேளையில்; ஆட்டை = ஆட்டத்தை. சிதம்பரத்தில் ஐயன் உரு, அருவுரு, அரு என்னும் மூன்று வகை நிலைகளில் காட்சிதருவதைக் குறிப்பது. படம்: இணையத்திலிருந்து.)

... அனந்த் 9/10-11-2023