Saturday, May 4, 2024

                             இன்று பிரதோஷ நன்னாள்

                              திருச்சிற்றம்பலம்


   <> துணையடி சேர்ப்பாய் <>



              


வெண்மதி கங்கை கொன்றை

.. விளங்கிடும் சடையோய்! உன்றன்


கண்கவர் கோலம் கண்டும்

.. கருத்திலோர் நெகிழ்வு மின்றி


மண்ணிலோர் விலங்காய் வாழ்ந்த

.. வகையினை இன்றென் நெஞ்சில்


எண்ணிநான் வருந்தி உன்றன்

.. இணையடி சேர்ந்தேன் ஐயே!


          🌹🌹🌹

 

ஐயனே ஐயோ வென்றுன்

.. அடியிணைக் கீழ்வி ழுந்தேன்


பொய்யனே ஆயி னும்மென்

.. பிழையெலாம் பொறுப்பாய் என்று


மெய்யடி யார்கள் சொல்லல்

.. மிகையிலை என்று நம்பிக்


கையிணை குவித்துன் முன்னே

கதறினேன் காத்தி டாயோ?


         🌹🌹🌹


ஆயபல் பிழைகள் யாவும்

ஆக்கிய பிண்ட மாகக்


காயமொன் றுடையேன் பாவக்

.. காற்றையே நிரப்பி வைத்த


தீயதோர் பாண்ட மிஃதைச்

.. சுமந்துல கலையு மென்னைத்


தூயவ னாக்கி உன்றன்

துணையடி சேர்த்தி டாயோ?


          🌹🌹🌹

                                             ..அனந்த் 4/5-5-2024

Friday, April 19, 2024

 நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்


                   

ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அமைக்கஎண்ணும்

வாசமார் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்

நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்

ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே


                                       🌺🌺🌺


                                 < அரனும் அரவமும்>

                       

இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்

அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு

பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு

எண்ணிலெம் ஈசற் கிணை.

(பாம்பு:  ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய  ஆடை உண்டு.  மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.

சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)  





Friday, April 5, 2024

இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                                <>  தழல் <>

                                                  











துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை

மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்

பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்

தன்னடியார் நெஞ்சுள் சொலிக்கும் தழலெனவே.

                                     ************

                                      <> அருள் <>

                     

கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்

புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்

எண்ணிடின் அலாலிவ்  வீனனுன் னருள்பெறப்

பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.  


                                                                      .......... அனந்த் 6-4-2024





Thursday, March 21, 2024

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


                               <> அன்பருக்கு அன்பன் <>

               


 தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்

...தோன்றும் உடலை நாளுந்

.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்

.......சுழலும் அவதி நீங்கக்


காலை உயர்த்தியருள் காட்டும் கரமுடைய

.. கடவுள் உன்னை அண்டிக்

.. காலை பகலந்தி காலம் தவறாமல்

….. கரங்கள் குவிக்கு மன்பர்


மாலை யறுத்திதயத் தேபுக் காங்கவரை

… வாழ்வித் துயர்த்து முன்சீர்

….. வாய்கொண் டுரைத்திடவு மாமோ அடியனுமுன்

….. வாயில் வந்து நின்றேன்


பாலை அளித்துதமிழ்ப் பாடல் மழைபொழியப்

..பாலர்க் குதவு பரமா

..... பாலை நிகர்மொழியள் பக்கல் துணையிருக்கப்

…...பரதம் புரியு(ம்) ஐயே.


(மாலை = மயக்கத்தை, மாயையை; பாலர் – திருஞானசம்பந்தர்; ஐயே = ஐயனே. )

                                                                                  ... அனந்த் 21-3-2024

 


Thursday, March 7, 2024

பாசமறுப்பாய்

 இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்

திருச்சிற்றம்பலம்

<> பாசமறுப்பாய் <> 


 



இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்

இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார

ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த

பாசமற வேண்டிப் பரிந்து.

                              **********

                     <> உருகினேனே <> 


     



உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே

.. ஓடிவந் துற்ற என்னைக்

கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்

காத்துநீ கனகம் வேய்ந்த

மன்றினைக் காட்டி மலையையும் காட்டி

மயிலையில் அன்னை யோடு

நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட

.. நலத்தினில் உருகி னேனே.

                              **********

அனந்த்  8-3-2024

Thursday, February 22, 2024

 

                                  <>  காப்பாய் <>



                  

                  
AruNachalam.jpg

 அகந்தையின் நீட்சியாம் எண்ணம் அளிக்கும்*

சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா

வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்

அண்ணா அருளாழி யே.

(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம்சாச்வதம்.)

குறிப்பு: 1. ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்

எண்ணமே மூலமாம் உந்தீபற 

யானாம் மனமெனல் உந்தீபற;

2. அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.

அனந்த் 23-2-2024 


Tuesday, February 6, 2024

பதத்தில் இருத்திடுவாய்

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

                    <> பதத்தில் இருத்திடுவாய் <>




உனையலால் வேறொரு தெய்வம்இவ் வேழையன் உன்னானெனும்

நினைவினை விட்டிங்கு நீமௌனத் துள்ளே நிலைத்திருந்தால்

தனயனைக் காக்கத் தவறினன் என்றுனைச் சார்ந்துநிற்கும்

மனையவள் உன்னை மதியா ளிதைநீ மறந்தனையோ?

 

மறப்பதும் உன்னை மறந்தத னால்மீண்டும் வந்துலகில்                 

பிறப்பது மேபிழைப் பாகுதல் என்றன் பிழையென்பையோ?

அறத்தர சே!தில்லை அம்பல வா!என்னை ஆளும்ஐயே!

புறத்தொரு பாலினிப் போகா திருத்திடுன் பொற்பதத்தே.


..  அனந்த் 7-2-2024

 

Sunday, January 21, 2024

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

               <> இச்சை இல்லான் <>



இச்சை யில்லான் எனக்காட்ட

.. இல்லந் தோறும் எழுந்தருளிப்

பிச்சை இரக்கும் பெம்மானே

.. பிரியா துன்றன் மேனியுறை

பச்சை நிறத்தாள் முன்னமிட்ட

.. பிச்சை போன விதமென்னே?

நச்சை உண்ட நாதாஉன்

.. நடிப்பின் பொருளார் அறிவாரே!

 

…… அனந்த் 22/1/2024

Monday, January 8, 2024

நல்ல தருணம்

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

         

           <> நல்ல தருணம் <>


பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்

….. பாவியேன் அறிந்தி டாமல்

நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்

… நிலையென நிற்றல் நோக்கி

ஆர்த்திடுபொற் சிலம்புட(ன்) ஐயநீ தில்லையில்

… ஆடிடும் அழகு காட்டி

ஈர்த்தெனைநீ ஆட்கொள ஈதுநற் றருணமாய்

… எண்ணில்யான் உய்வன் அன்றே.

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.)..


.... அனந்த் 8/9-1-2024