Monday, June 27, 2022

முரண்

 திருச்சிற்றம்பலம்


      


1.

நடமாடி மகிழ்ந்திடுவாய் நானோ நன்றாய்

.. நடமாட இயலாமல் நலிந்து நிற்பேன்


இடமாக இறைவியைநீ ஏற்பாய் நானோ

.. இடமாகத் தீமைக்கே ஈவேன் நெஞ்சை


விடமுண்டு புரப்பாய்நீ வையம் எற்கும்

.. விடமுண்டு செயலில்ஊர் வெறுக்கும் வண்ணம்


உடனிந்த முரண்நீக்க விரைந்தே வந்துன்

.. உடன்நானும் ஒன்றிநிற்கச் செய்வாய் ஐயே!

 

(நடமாடுதல் = நடனம் ஆடுதல்கூத்தாடுதல்நடந்துகொள்ளல்நலிதல் = தவறுதல்சரிதல்வருந்துதல்அழிதல்மெலிதல்எற்கும் = எனக்கும்ஒன்றுதல்= பொருந்துதல்கூடுதல்நிலைபெறுதல். இச்செய்யுள் மடக்கு வகையைச் சேர்ந்தது.)

 

2.


           Dhakshinamoorthy  .jpg


வெண்ணீற்று மேனியில் கரியுரியைப் போர்த்திடுவாய்


தண்ணீரைத் தாங்கித் தழலையும்கை ஏந்திடுவாய்


கண்மூன்றும் மூடிக் கைச்சாடை பேசவைப்பாய்


எண்ணில்இம் முரணன்றே எனையுன்பால் ஈர்த்ததுவே.


...அனந்த் 26-6-2022

Saturday, June 11, 2022

சித்பரம்

 திருச்சிற்றம்பலம்

                   <>  சித்பரம் <>



4a8c3d3b-878b-4ca0-b3f1-67312863b166.jpg

 


கணமெனக் காட்டிவாழ் காலம் அறுத்திடும் கத்தியெனக்

..கருத்தினில் உறைத்திடாக் கடையன் என்னுளே காலமெல்லாம்

 

உணர்வென என்றும்நீ உறையும் உண்மையை ஓர்ந்திலனாய்

.. உலகினில் உலவிடும் வேளை உன்னடி யார்துணையால்

 

தணனிகர்ச் சடையினுள் தண்ணீர் தாங்கிடும் சங்கர!நின்

.. தாளிணை சேர்ந்திடுந் தகைமை தந்தனை தாண்டவம்செய்

 

வணமதில் மயங்கிடு வோர்தம் மனத்துளே மாற்றமின்றி

.. வாழ்ந்திடு சித்பர வடிவே தில்லைவாழ் மாமணியே.

 

(வட அமெரிக்காவில், இன்று, 11-6-2022, பிரதோஷ நாள்.; தணனிகர் = தணல் நிகர், நெருப்பையொத்த.)

 

… அனந்த் 11-6-2022