Sunday, December 25, 2016

தியாக மூர்த்தி

திருச்சிற்றம்பலம்                                                      

                                                        <> தியாக மூர்த்தி <>


தத்துவப் பொருளென உருவிலா அறிவெனத்
.. தனித்தவோர் நிலையை விட்டுத்
… தரணிவாழ் மானிடர் தமதிடர் களையுமோர்
…. தயையினால் ஐய னேநீ

அத்தனும் அன்னையும் இன்றிய நாதியாய்
… ஆங்குதித்(து) அதைய டுத்தே
….. ஆசையால் மலைமகள் கைத்தலம் பற்றினாய்
…… அதன்விளை வாக வந்த

புத்திரர் இருவருள் மூத்தவன் ஆனையாய்ப்
… பின்னவன் ஆண்டி யென்று
புவனியோர் ஏசினும் பொறுத்தனை பசிக்கையில்
… புசிப்பதற் குணவு மின்றி

இத்தரை மீதிலே இரக்கவும் செய்தனை
.. இத்தகைத் தியாகம் எல்லாம்
… எமக்கென ஏற்றநின் கருணையின் எல்லையை
…. என்சொலி ஏத்து வேனே.

..அனந்த்
26-12-2016 சோமவாரப் பிரதோஷம்

Saturday, December 10, 2016

ஒற்றைத் தனியன்

திருச்சிற்றம்பலம் 


                                      <> ஒற்றைத் தனியன் <>

                                                         

ஒற்றை ஆளாய் எருதேறி உலகைச் சுற்றி இரந்துண்பாய்
ஒற்றைச் சொல்லில் உறைந்திருக்கும் உண்மை உரையா துரைத்திடுவாய்*
ஒற்றைத் தனியாய் ஒப்பிடவே றொன்றும் இல்லாப் பரம்பொருளே!
ஒற்றிக் கொண்டேன் உன்னுடன்நான் ஒற்றி யூர்வாழ் பெருமானே.

(*மௌனமாய்)

      
               <> ஒன்று கேட்பேன் <>

Inline image 5    Inline image 6

காலொன்று தூக்கிக் கரமொன்று காட்டிக் கனகமன்றில்
கோலொன்று தாங்கிக் கிழமொன்று காணக் குதிக்குமுன்றன்
பாலொன்று கேட்பேன் பயனொன்று மில்லாத பாரிதனில்
சூலொன்றில் வீழும் துயரொன்றும் வாராச் சுகமருளே.  
(சூல் - கருப்பப் பை)


<> ஒன்றே பலவாம் <>

Inline image 7

ஒருமையே மேன்மை யென்று தனிமையில் அமர்ந்து பின்னர் 
இருமையாய்ப் பலவாய் ஆன புதுமையோய்! இயம்ப லாகாப்
பெருமையோய்! மறுமை இம்மைப் பிறப்பிலா மெய்ம்மை யோனே!
கருமைசேர் கண்டத் தோய்!என் கயமையை நீக்கு வாயே !

.. அனந்த் 11-12-2016

(சிவலிங்கம் படம்: திருவொற்றியூர் ஆதிபுரீச்வரர் - நன்றி: இணையத் தளம்)