Thursday, May 19, 2016

குறை இல்லை

திருச்சிற்றம்பலம்


<> பொருள் இல்லை <>

Inline image 3

சுட்டுப் பொசுக்கின் சாம்பரெனத்
.. தூசாய் மாறும் இவ்வுடலைத்

தொட்டுத் தடவிப் பேணிவந்து
.. சுகமீ தென்று திரிந்தேனை

நட்டம் ஒன்றை நீகாட்டி
.. நலமீ தென்றென் உளம்புகுந்து

விட்ட பின்னர் குறையென்று
.. விளம்பப் பொருளொன்(று) எனக்கிலையே


<> எல்லை இல்லை <>

Inline image 4

எட்ட நின்றுன் சொலற்கரிய
.. எழிலைச் சுவைப்பேன் ஒருபோதில்

தொட்டுன் மேனி தனில்மலரைத்
.. தூவி மகிழ்வேன் ஒருவேளை

கட்டிப் பிடித்துன் காலடியில்
.. கதறி அழுவேன் ஒருநேரம்

நட்டம் புரியும் நாத!உனை
.. நண்ணும் வகைக்கோர் வரையுண்டோ?


<> இணை இல்லை <>

Inline image 1

அழும்போ தென்னை எடுத்தணைக்கும்
.. அன்னை ஆவாய் அடுத்தகணம்

விழும்போ தென்றன் அப்பனெனத்
.. மேலே தூக்கி மகிழ்விப்பாய்

தொழும்போ தெனக்குப் போதகனாய்
.. தோன்றி வாழ்வின் பொருளுரைப்பாய்

முழுதாய் என்னை ஆட்கொண்ட
.. முதலே! உனக்கோர் இணையிலையே.


<> குறை இல்லை <>

Inline image 2

இல்லை இனியெற்(கு) எக்குறையும்
.. என்றின்(று) இறுமாந் திருக்கு(ம்)வண்ணம்

தில்லைப் பதியில் நடமாடும்
..  திருக்கோ லத்தைக் காட்டிநின்றாய்

வல்லோய்! உன்றன் வண்மையெனும்
.. வாரி தன்னில் நனையுமென்னைத்

தொல்லை இனியும் தொடர்வதுண்டோ
.. சொல்லற் கரிய சீருடையோய்!


அனந்த் 19-5-2016

Friday, May 6, 2016

ஆராயவொண்ணாதான்

திருச்சிற்றம்பலம் 




1.     <> ஆராயவொண்ணாதான் <>
            
பிட்டுக்கு மண்சுமப்பான் பிண்ணாக்குப் பணியை ஏற்பான்

கொட்டுக்குச் சடைவிரிப்பான் கொட்டுக்கு நடமும் செய்வான்

முட்டுக்கு மேலுடுப்பான் முட்டுக்குத் தாளை ஈவான்

திட்டுக்கு மனங்களிப்பான் தேட்டுக்குள் அடங்காத் தேவே.

 (பிண்ணாக்கு = பிள்நாக்குபிளந்த நாக்குபணி=பாம்புகொட்டுநீர் சொரிகைமிருதங்கம் போன்ற வாத்திய ஒலிமுட்டு = முழந்தாள்பற்றுக்கோடு;  திட்டுசுந்தரமூர்த்திநாயனாரின் வசைச்சொல்தேட்டுதேட்டம்ஆராய்வு.)



2.  <> மாயா ஜாலம் <>

இடமொரு பெண்ணாகும் ஏந்தும் மிடற்றில்

விடமோர் மணியாய் விளங்கும் - நடத்தில்விழும்

தோடு செவியேறித் தொங்குமொரு தொண்டுகிழ

மாடும் புரவிவிஞ்சு மாம்!



... அனந்த் 4-5-2016