Monday, August 29, 2016

தேரூரும் செல்வன்

                            திருச்சிற்றம்பலம் 

                Inline image 2

                   <> தேரூரும் செல்வன் <>

ஓருருவம் இல்லா ஒருவ!நீ யாமுய்யப்
பாரொருகால் ஊன்றிமறு பாதத்தை விண்ணுயர்த்திப்
பேருருவத் துள்மெய்ப் பொருளுணர்த்தும் வா(கு)என்னே! 
காருருவ மாலவனும் கஞ்சமலர் நான்முகனும்
சீருணர வொண்ணாத் திருவுருவை நித்தமுமுன்
பேருரைப்போர் சிந்தைக் குகையுள்ளே காட்டிடுவாய்
ஆருரைப்பார் இவ்வருளின் அற்புதத்தை! மாமலைபோல்
தேருலவும் தில்லைவாழ் செல்வ!எமை ஏன்றருளே.

( வாகு = அழகு, ஒழுங்கு, ஒளி; ஏன்றல்= ஏற்றல்; வெண்டளை விரவிய எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா; படம்: சிதம்பரம் நடராஜர் ஆனித்  திருமஞ்சனத் தேரோட்டம்)

..அனந்த் 29-8-2016 

Wednesday, August 17, 2016

பிடித்த பழம்

திருச்சிற்றம்பலம்

<> பிடித்த பழம் <>

Inline image 1

முற்றும் பழுத்தபழம் முனிவர்கள் உண்ணும்பழம்
... முக்திதனை அளிக்கும்பழம் மூளுகின்ற ஆசைவிளை

பற்றை அகற்றும்பழம் பார்வதியாள் பகிர்ந்தபழம்
... பக்தியுடன் உண்போரைப் பரவசத்தில் ஆழ்த்து(ம்)பழம்

குற்றம் களையும்பழம் கொடுத்துவைத்தோர்க்(கு) எந்நாளும்
… குறையாது கிட்டு(ம்)பழம் கூரைக்கீழ்க் கூத்தாடும்

சிற்றம் பலப்பழமிச் சிறியேனின் முற்றாத
.. சிந்தையுளே புகுந்(து)அதனைத் தேங்கனியாய் மாற்றிடுமே.


அனந்த் 16-8-2016