Tuesday, December 22, 2015

பற்றினேன்


திருச்சிற்றம்பலம்




<> பற்றினேன் <>

உருவமொன் றிலாமலோர் அருவமாய் நின்றநீ
..உலகுளோர் காண வேண்டி
உளங்கவர் வடிவமொன் றேற்றதன் மாண்பினில்
….உவகைநான் கொண்டு நிற்க

ஒருபுறம் உனைமணம் புரிந்தவள் தனதென
..உரிமையோ டெடுத்த பின்னர்
உன்சிரம் தன்னைஓர் மங்கையும் கொண்டிட
….உடலையும் பாம்பு மூட

இருபதம் தம்மையுன் அடியவர் துணையென
..இறுக்கமாய்ப் பற்ற, இன்னும்
இருப்பதுன் உருவினில் ஏதென இங்குயான்
….எண்ணியே திகைத்த காலை

ஒருவரும் அறிந்திடா வண்ணமாய் ஐய!நீ
..ஒளிந்தென தருகில் வந்தென்
...உள்ளமாம் வெளியினில் உன்உரு அனைத்தையும்
….ஒருங்கயான் பற்ற வைத்தாய்!

(ஒருங்க = ஒன்றாகச் சேர்த்து)

..அனந்த்
23-12-2015

Thursday, December 10, 2015

ஞானவெளி

திருச்சிற்றம்பலம்

             <> ஞானவெளி <>

ஊன்கொண்டு நுகருணர்வும் உடலமதில் உறையுயிரும்

.. உயிர்சார்ந்த வினையு மழிய



நானென்ற போதமது தானுமழி யத்தனியே

.. ஞானமெனும் வெளியில் நித்ய



மோனநிலை யதனிலுறை யோகமெனும் ஒருபேற்றை

.. மூடனிவன் பெறுவ தற்(கு)உன்



ஆனந்த நடனமதை அனவரதம் என்நெஞ்சில்

.. ஐய!நீ நாட்டி டாயோ?



... அனந்த் 8-12-2015

Sunday, November 22, 2015

அலகிலாக் கூத்தன்

திருச்சிற்றம்பலம் 
(14-சீர் விருத்தம்; அரையடி: கூவிளம் விளம் விளம் விளம் விளம் மா தேமா



                                                                        <> அலகிலாக் கூத்தன்  <>

மாமியார் தொல்லையில் லாததோர் மனையென மனமகிழ்ந் திரண்டு மாதர்
மணம்புரிந் தொருத்திஉம் உடலிலே பாதிமற் றொருத்திஉம் தலையி லேற 

ஆமிது தாங்கவொண் ணாதென ஐய!நீர் ஆங்கொரு ஓட்டை யேந்தி 
ஆனின்மீ தேறியே ஊரெலாம் அனுதினம் ஊணிரந் துண்டு வாழும்

சாமியா ராயினீர் என்றுமைச் சகத்தினர் பரிகசம்  செய்வ தைநீர்
சட்டைசெய் யாமலே திரிவதன் காரணம் அவரெலாம் அறிய மாட்டார்

யாமெம தென்னுமோர் மாயையில் யாண்டுமே சிக்கிடா ப் பரம மாம்உம்
.. அலகிலாக் கூத்தினை ஆன்றமெஞ் ஞானியர் மட்டுமே அறிகு வாரே!

..அனந்த்
23-11-2015

Monday, November 9, 2015

எனது உறவு

திருச்சிற்றம்பலம் 


​​ 
<> எனது உறவு <>

கரக்கவொரு பெண்ணிடத் திருத்தவொரு பெண்ணுளன் காமனைக் கடிந்த பரமன் 

உரைக்கவொரு சொல்லிலான் மரத்தடியி லேஅமர் உயர்ந்தஅறி வீயும்குரவன்
   
நரைத்தவிடை யேறிஊண் இரக்குமொரு ஏழைபார் புரப்பனெனப் பேர்பெற்றவன்

பரத்தில்வெளி யாகிஎவ் விறைக்குமிறை யாமிவன் எனக்குமுற வானசிவமே!   

(உயர்ந்த அறிவு = மெய்யறிவு, ஆத்ம ஞானம்)


.. அனந்த் 
9-11-2015

Saturday, October 24, 2015

காணிக்கை

இன்று பிரதோஷ நன்னாள்

திருச்சிற்றம்பலம்



<> காணிக்கை <>

(14-சீர் விருத்தம். அரையடி வாய்பாடு: தேமா காய் காய் விளம் விளம் மா மா காய் காய் காய் விளம் விளம் மா மா)


மூப்பே இல்லாத காலன்தன் கடமையை
... முற்றிலும் ஆற்றி எனக்கு
..... முதுமைநிலை தந்தெனது வசமுள்ள யாவையும்
........ மொத்தமாய்ப் பறித்த பிறகு

தோப்பாய் இருந்தவனோர் தனிமரமாய் ஆனபின்
... சொந்தமென்(று) இயம்ப என்னைத்
.... தொத்தியுள நோயோடு தொல்லைவிளை மனம்இவை
..... தொடருமிந் நிலையில், அரனே!

காப்பாய் எனஉன்றன் கழல்நீழல் வந்துளேன்
..... கடையனின் காணிக் கையாய்க்
......கைவசம்என் னிடமுள்ள  அகந்தையினைத் தருகிறேன்
..... கருணைகூர்ந் தேற்பை யானால்

பார்ப்போர் பாவியையும் பாலிக்கும் உன்னருட்     
....பாங்கினைப் போற்று வாரே
.... பத்தியுடன் எறிந்தவொரு கல்லினையும் பூவெனப்
....  பரிவுடன் ஏற்ற பரமே! 


.. அனந்த் 25-10-2015

Saturday, October 10, 2015

உதவிடுவாய்

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு  நன்னாள்.
திருச்சிற்றம்பலம்



              











<>  உதவிடுவாய் <>

(கட்டளைக் கலித்துறை)

வெள்ளை மனத்துடன் மேதினி தன்னில் விழுந்தபினர்
மெள்ள அதனுள் விடமென ஆசை விரிந்துலகம்
எள்ளும் வகையினில்  இன்றா கினன்யான் ஈச!உனை
உள்ள வழியொன்(று) உரைத்திடின் உய்வேன் உதவுவையே !

கொடுத்தாய் குறைஇலாத் தேகமும் வாழ்வும் கொடியனதைக்
கெடுத்தேன் எனினும் குணம்மிகு நல்லோர் குழுநடுவில்
விடுத்தாய் அதனையும் வீணடித் தேன்இனி மேலுமெனைத்
தடுத்தாட் கொளவோர் வகைதெரி யாமல் தவித்தனையே !

பொய்யே துணையெனக் கொண்டவிப் பாவி புனிதனுனை
ஐயே! எனவே அழைத்திடும் அந்த அருகதையை
மெய்யாய் அடைய விளங்குபொன் அம்பல மேடையிலுன்
ஒய்யா ரநடத்  துளபொருள் செப்பி உதவுவையே.

..அனந்த்
10-10-2015

Friday, September 25, 2015

எனது துணை

இன்று பிரதோஷ நன்னாள்*

            திருச்சிற்றம்பலம்


Inline image 1

​      
              <> எனது துணை <>

 

அரனென்பார் என்றுமெனக்(கு) அரணென்பேன், கங்கா

தரனென்பார் எனக்கவனா தாரமென்பேன், கருணா

கரனென்பார் என்னுறவுக் காரனென்பேன், மேலாம்

பரனென்பார் தரிப்பன்என் பாரமென்பேன், பணிந்து.

 

வானென்பார் சீலகுண வானென்பேன் கொம்புத்

தேனென்பார் விழைந்துகுடித் தேனென்பேன் கரத்தில்

மானென்பார் எனதுபெரு மானென்பேன் ஈசன்

தானென்பார் எனதுள்ளத் தானென்பேன், தெரிந்து. 

 

சிவனென்பார் என்னுள்வாழ் சீவனென்பேன், அருளு

பவனென்பார் மலையுறைசாம் பவனென்பேன், மூத்தோன்

இவனென்பார் யான்கேட்ட(து) ஈவனென்பேன், இரப்பான்

அவனென்பார் எனதுதுணை ஆவனென்பேன், அறிந்து.

 

..அனந்த் 25-9-2015

Friday, September 11, 2015

ஆட வல்லான்


                                                                  திருச்சிற்றம்பலம் 






<> ஆட வல்லான் <>


தலைமேல் தத்தும் புனல்சற்றும் 
 .. சரியா(து) அடக்கிச் சந்திரனின்

கலைமா றாமல் கவனித்துக்
.. கையில் ஏந்தும் அனலினொளி

குலையா திருத்திக் கூரையின்கீழ்
.. கொட்டும் முழக்குக் கேற்றவண்ணம்

பலவாய் ஆடும் பரமா!நின்
.. பாங்கில் என்னை இழந்தேனே!

(கூரை = தில்லை கனகசபையில் உள்ள பொன் தகட்டால் வேயப்பட்ட கூரை)

... அனந்த் 
10-9-2015

Tuesday, September 1, 2015

உருவமும் உணர்வும்


                                                                           திருச்சிற்றம்பலம்
               

                












                                                                   <> உருவமும் உணர்வும் <>

(28-சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்; வாய்பாடு: 6 கருவிளம்+ மா தேமா; 1,8,15,22 சீர் மோனை )

மனமெனும் விழிகொடு மலைமகள் துணைவ!நின் வடிவினைக் காணு மன்பர்
.... வான்நில(வு) உலவிட மாநதி புரளுமுன் விரிசடை தனில்தொ டங்கி 
... வளைந்தஉன் புருவமும் வனப்புறு நுதலிலே வன்னியோர் கண்ண தாக
..... வாய்த்ததன் வகையையும் மற்றிரு கண்களாய் மதியொடு கதிரு மாக

வனைந்துள வழகையும் வலமிடம் செவிகளில் வாய்த்த நற்குழையும் முல்லை
....வரிசையாய் எயிற்றுடைச் செவ்விதழ் வாயும்அவ் வாயிடை மலர்சி ரிப்பும்....
... வானவர் வாழ்ந்திட வரையிலாக் கருணையால் விடத்தினை உண்ட விளைவால்
.... வனப்புடன் மிடற்றினில் விளங்திடும் கருமணிப் பூணையும், புடைத்து விம்மி

அனங்கனை அழித்ததிவ் வழ(கு)எனத் திகழும்வெண் நீறணி மார்பும் அதனில்
.. அசையுமுப் புரியொடு புரண்டிடும் அரவமும் அடியரைக் காத்த ருள்செய்(து)

... அபயமும் வழங்கிடும் கரங்களும் அரையிலே புலியுரி ஆனை உரியை
.... அசைத்திடும் எழிலையும் யாவினும் மேலதாய் ஆடகப் பொற்க ழல்கள்

புனைந்தநின் திருவடி இணையையும் கண்டுளம் புளகிதம் கொள்ள வைத்துப்
... புவியிலே பிறந்ததன் பயனையாம் பெற்றனம் என்றவர் மகிழும் காலை
... புறத்திலே காண்பதை அகத்திலே பாரெனப் புண்ணியா! அருவ மான 
.... பூரண நிலையினுள் புகுந்திட வைக்குமுன் புகழினை உரைக்கப் போமோ?  

(ஆடகப் பொற்கழல்கள் என்பதை அகத்தில் ஆடும் பொற்கழல்கள் என்றும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளலாம்)

... அனந்த் 27-8-2015

Wednesday, August 12, 2015

சந்திக்கும் வேளை




                                                            திருச்சிற்றம்பலம்




                  <> சந்திக்கும் வேளை <> 


ஆட்டம் ஆடுவைநீ அம்பலத்தில் அடியேன்போர் 

.. ஆட்டம் புரிந்திடுவேன் அவனியில்;உன் அன்பர்களின்

 பாட்டில் மகிழ்வாய்;நீ பாவம்நான் பலவாயென்

.. பாட்டில் குவித்திடுவேன், பரமேசா! மெய்யடியார்

கூட்டில் களிப்பாய்நீ; நான்குடும்பம் என்னுமொரு

.. கூட்டில் அடைபடுவேன்; கும்பலுடன் தனிக்கூத்தைக்

காட்டில் பயில்வாய்;என் கால(ம்)வரும் வேளையிலே  

.. காட்டில் துயில்வேன்நான் கண்டுகொள்நீ ஆங்(கு)எனையே!

..அனந்த் 12-8-2015

Wednesday, July 29, 2015

குணமிலியைக் கொள்வையோ?

                                                            திருச்சிற்றம்பலம்


                                 <> குணமிலியைக் கொள்வையோ? <>


ஏதமில் குணத்தினர் பேதமில் மனத்தினர் என்றுமுன் நினைவின் மாறார்
... இத்தகை யாருடன் இனிதுநீ இருக்கையில் அவர்க்குள தகுதி தன்னில்
 
ஏதுமில் லாதஇவ் ஈனனை, அசடனை இரக்கமில் நெஞ்சன் என்னை
.. என்னவன் என்றுநீ ஏற்றிடென்(று) எங்ஙனம் இறைஞ்சநான் துணிவன் ஐயே!

சீதமார் பொழில்நிறை கழுமல வளநகர்ப் பாலகன் பால ருந்தச்
.. செய்தவர்க் குதவினை சிறியனேன் வெறும்மனப் பால்குடித் தேங்கி நிற்பேன்

யாதுநீ செய்தெனை ஆட்கொளும் என்பதை அரைக்கணம் சிந்தியாயோ?
.. ஆண்டவா! தில்லைவாழ் தாண்டவா! நின்பதம் அன்றியோர் சரணி லேனே!

.. அனந்த் 29-7-2015

Sunday, July 12, 2015

எல்லையிலா அருள்

               திருச்சிற்றம்பலம்  


        
















<> எல்லையிலா அருள் <>

எங்கோ தொலைவில் உளன்என்னா(து)
.. இறையே! என்றன் கைப்பற்றி
மங்காப் புகழ்சேர் தலங்களுக்கு
... வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. மன்னே! உன்றன் அருளென்னே!

எங்கோன் எனவும் எழிலாரும்
.. இடத்தாள் தூக்கி! எனவுமுனைக்                    
             
கங்குல் பகலாய் நினைவிருத்திக்
.. கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. ஈசா! உன்றன் பரிவென்னே!

அங்கம் தளர்ந்து வலுவுமிழந்(து)
.. அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. பகர ஆற்றா அந்நிலையில்
 இங்கே உள்ளேன் என்றுனையென்
.. இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. புரியும் அழகைக் காட்டுவையோ?

.. அனந்த் 13-7-2015

Monday, June 29, 2015

அவன் கோலம்

            திருச்சிற்றம்பலம்
















            <> அவன் கோலம்  <>
 
தேகம் முழுதும் சாம்ப லுண்டு சேரக் கணங்கள் திரளு முண்டு
... தேர்ந்து பூண எலும்பு முண்டு சிகையில் அணிய எருக்கு முண்டு

போகும் இடத்தில் காடு முண்டு பூத முண்டு பேயும் உண்டு 
... போற்றிப் பாடக் கிழமு முண்டு புலியு முண்டு அரவு முண்டு 

வேகும் உடலம் பலவு முண்டு விண்ணில் சேரும் கூட்ட முண்டு
.. வேதம் ஓதும் நாத முண்டு வேறு வகையில் ஒலியு முண்டு

ஆக இவனை அடைய வழியும் யாதென் றுள்ளம் அயரும் வேளை
... அகத்தில் ஆடிக் காட்ட லுண்டு அதனில் ஆழ்த்திப் பார்த்தல் உண்டே!

(கிழம் = முதிய உரு எய்திய காரைக்கால் அம்மை; புலி= வியாக்கிரபாத (புலிக்கால்) முனிவர்; அரவு = பாம்பின் உடல் கொண்ட பதஞ்சலி முனிவர்)

..அனந்த்
29-6-2015