Tuesday, December 22, 2015

பற்றினேன்


திருச்சிற்றம்பலம்




<> பற்றினேன் <>

உருவமொன் றிலாமலோர் அருவமாய் நின்றநீ
..உலகுளோர் காண வேண்டி
உளங்கவர் வடிவமொன் றேற்றதன் மாண்பினில்
….உவகைநான் கொண்டு நிற்க

ஒருபுறம் உனைமணம் புரிந்தவள் தனதென
..உரிமையோ டெடுத்த பின்னர்
உன்சிரம் தன்னைஓர் மங்கையும் கொண்டிட
….உடலையும் பாம்பு மூட

இருபதம் தம்மையுன் அடியவர் துணையென
..இறுக்கமாய்ப் பற்ற, இன்னும்
இருப்பதுன் உருவினில் ஏதென இங்குயான்
….எண்ணியே திகைத்த காலை

ஒருவரும் அறிந்திடா வண்ணமாய் ஐய!நீ
..ஒளிந்தென தருகில் வந்தென்
...உள்ளமாம் வெளியினில் உன்உரு அனைத்தையும்
….ஒருங்கயான் பற்ற வைத்தாய்!

(ஒருங்க = ஒன்றாகச் சேர்த்து)

..அனந்த்
23-12-2015

Thursday, December 10, 2015

ஞானவெளி

திருச்சிற்றம்பலம்

             <> ஞானவெளி <>

ஊன்கொண்டு நுகருணர்வும் உடலமதில் உறையுயிரும்

.. உயிர்சார்ந்த வினையு மழிய



நானென்ற போதமது தானுமழி யத்தனியே

.. ஞானமெனும் வெளியில் நித்ய



மோனநிலை யதனிலுறை யோகமெனும் ஒருபேற்றை

.. மூடனிவன் பெறுவ தற்(கு)உன்



ஆனந்த நடனமதை அனவரதம் என்நெஞ்சில்

.. ஐய!நீ நாட்டி டாயோ?



... அனந்த் 8-12-2015