Tuesday, August 27, 2019

வரையில்லாப் பரிவு


இன்று பிரதோஷ நன்னாள்.

           திருச்சிற்றம்பலம்

       


   <> வரையில்லாப் பரிவு <>

நிருத்தம் புரியும் நிமலன் எனக்குள் 
நிறைந்தென் பிறவிக்கோர்
அருத்தம் அளித்தான் அவன்இன் னருளை 

அளத்தல் அரிதாம்இவ்
விருத்தன் எழுதும் விருத்தம் தனையும் 

.. விழைந்தென் இதயத்தின்
வருத்தம் அகற்றும்  வரதன் இவன்சீர் 

.. வரைக்குள் அடங்காதே!

அடங்கா மனத்தை அடக்கும் வழியை
.. அருளிப் பவமென்னும்
விடமாம் அதனை விழுங்கிச் செரிக்கும்
.. விதத்தை அறிவிக்கத்
தடமா மலர்நேர் தாளே சரணாய்ச்
சததம் மனத்திருத்தல்
கடனாம் எனயான் காணச் செய்த
கருணை வரையிலதே  


வரையைத் தூக்க வந்தோன் சிரங்கள்
.. வருந்தும் விதம்தன்கால்
விரலைப் பதித்து வரமும் ஈந்த
.. வேந்தன் அடியேற்குக்
கர(ம்)மேல் தூக்கிக் காவென்று அரற்றும்
.. கலையைப் பயில்வித்துப்
பரமாம் அவனைப் பரவச் செய்த
.. பரிவோர் வரையிலதே.   

(விருத்தன் = வயதுமுதிர்ந்தவன்;வரை = எல்லை; மலை, சததம் = எப்பொழுதும்.  அறுசீர் விருத்தம்: புளிமா மா மா மா மா காய்)

Sunday, August 11, 2019

கரமும் பதமும்


       திருச்சிற்றம்பலம்



<> ரமும் பதமும் <>

அம்பிகையை அணைக்குங்கை ஆறிருகைப் பாலனொடு
தும்பிக்கை யானையும்மேல் தூக்குங்கை சூலத்தால்
வெம்பகையைச் சாடுங்கை மெஞ்ஞானந் தனைமுன்னம்
நம்பிக்கை தொழுதோர்க்குச் சைகையினால் நாட்டுங்கை
தம்பிக்கை பெறஓடு தாங்குங்கை இருவிழிநீர்
பம்பிக்கை தொழுமடியார் பழவினையைப் பாற்றுவைஎன்(று)
எம்பிக்கை ஏந்தினருள் கை.
(பிக்கை = பிக்ஷைபம்புதல்=பெருகுதல்பாற்றுவைஅழிப்பாய்எம்புதல் = எழும்புதல்ஏந்துதல்=கைந்நீட்டல்)

ஆடுங்கால் அடியரெல்லாம் சேவித்துச் செந்தமிழில்
பாடுங்கால் ஊணிரக்கப் பகலிரவாய் ஊரெல்லாம்
ஓடுங்கால் ஒருகால்மால் உன்னடியை மண்ணகழ்ந்து
தேடுங்கால் எனப்பலவாய்த் திகழுங்கால் தனைஎளியேன்
வாடுங்கால் மனத்திருத்தி மாதேவா உன்னருளை
நாடுங்கால் காப்பாய் நயந்து.

.. அனந்த் 12-8-2019 சோமவாரப் பிரதோஷம்