Friday, January 31, 2025

 திருச்சிற்றம்பலம்

 

                    <> தாளேனே <>




 

ஆற்றா தரற்றும் அடியேனின் தொல்லையறத்

தோற்றா திருக்கத் துணிந்தனையோ போற்றியுனை

விண்ணோரும் மாலயனும் வேண்டிநிற்க ஏழையென்னைக்

கண்ணோக்க நேரமின்மை காரணமோ தண்சடையில்

மேவிக் குளிர்விக்கும் வெண்டிரையா ளோடுன்னைத்

தாவி அணைக்கும் தளிருடலாள் கூட்டினிலே பாவியெனைப்

பற்றி நினைக்கப் பரமனுனக்(கு) ஓர்நொடியும்

சற்றும் கிடைத்திலையோ சங்கரா பற்றியகை

ஓட்டில் இடும்பலிக்காய் ஊரெல்லாம் சுற்றிவந்த

வாட்டத்தில் என்னை மறந்தனையோ- ஆட்டத்தின்

ஓட்டத்தில் இங்குயான் உள்ளேன் எனும்நினைப்பும்

ஓட்டம் பிடித்ததுவோ உத்தமர் பாட்டமுதை

அள்ளிப் பருகிற்கும் அவ்வேளை அடியேனின்

கள்ளம் நிறைமனத்தைக் கண்டென்னை ஒதுக்கினையோ

இன்னும் காக்கமனம் இளகிலையேல்

என்செய்வேன் வர்க்குரைப்பேன் ஈசஇனித் தாளேனே.


… அனந்த் 29-1-2025

Sunday, January 26, 2025

இன்று பிரதோஷ நன்னாள்.


                                 திருச்சிற்றம்பலம் 


                 

    புன்மதியைப் புனைசடையோய் புரக்கவொரு தகுதியிலாப்
       .. புன்மதியேன் தன்னையுமோர் பொருளாக்கிப் புவிவாழ்வின்

    தன்மையையான் உணரவைத்துத் தலைவபர கதியளிக்கும்
       .. தாளிணைக்கீழ் நிற்கவைத்த தயவினையின்(று)

    அன்னையவள் உடனிருக்க அம்பலத்தில் நடமாடும்
      .. அண்ண லுன்றன் முன்னின்று அடியவனேற்(கு) இயன்றவரைச்

    சொன்மலரால் அருச்சிக்கத் துணிந்துவந்தேன் ஏற்றிடுவாய்
      .. தூயபெரு வெளியினிலே துலங்கிடுமெய்த் தத்துவனே.

     (புன்மதி - குறைவுள்ள நிலா; [புன்மதி யுடைய வென்மனப் பாறையை
        நற்பதப் படுத்தி யற்புதம் விளைக்கும்- திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்; புன்மதியேன் - குறைந்த அறிவுடைய யான்.)

Friday, January 10, 2025

 இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.  

                                                            திருச்சிற்றம்பலம்

                                                        <>  போற்றி நிற்பேன் <>

                                         

                         தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத் திருவடியைச்
                            .. சேர்ந்தோரின் குறைகளைநீ தீர்த்திடுவா யெனக்கேட்டிங்

           
            கென்வகைக்கு நானுமென்ற னிழிநிலையை வகைப்படுத்தி

            … யெழுதியுன்றன் முனமியம்ப வெடுத்திடுமந் நேரத்தைப்

           

            பொன்னவையி லடியர்முனம் புன்னகையோ டாடுமுன்றன்

            … பொற்பிலுள முருகியுனைப் போற்றுதலிற் கழிப்பேனேற்

           

            பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட் டுழலாமற்    

            .. பேரின்ப நிலையிலென்றும் பேராம லிருப்பனன்றே.

                 

                  பதம் பிரித்து:

            தென்புலியூர் வாழ்துரைநின் செங்கமலத் திருவடியைச்

            .. சேர்ந்தோர்தம் குறைகளைநீ தீர்த்திடுவாய் எனக்கேட்டிங்(கு)

           
            என்வகைக்கு நானுமென்றன் இழிநிலையை வகைப்படுத்தி

            … எழுதியுன்றன் முனம்இயம்ப எடுத்திடும்அந் நேரத்தைப்

           

            பொன்னவையில் அடியர்முனம் புன்னகையோ(டு) ஆடுமுன்றன்

            … பொற்பில்உளம் உருகியுனைப் போற்றுதலில் கழிப்பேனேல்

           

            பின்னுமிந்தப் பிறப்பிறப்புச் சுழலினில்பட் டுழலாமல்    

            .. பேரின்ப நிலையிலென்றும் பேராமல் இருப்பனன்றே.

 

            (பேராமல் – பெயராமல், விலகாமல்.)

 

                                                ….. அனந்த் 10-1-2025