Tuesday, November 27, 2012

காத்து நிற்பாய் 25-11-2012

திருச்சிற்றம்பலம்
<> காத்து நிற்பாய் <>














எள்ளள வேனு முன்னை

… இறைஞ்சிட நினையார் தாமிங்(கு)

…..எடுத்துள உடலம் தன்னை

…… ஏனையோர் ஒருநாள் கையால்

அள்ளியோர் காட்டில் சுள்ளி

… அடுக்கிய சிதையாம் தட்டில்

…..அளித்திடும் வேளை நோக்கி

…… ஆங்கதைச் சுவைப்ப தற்காய்

ஒள்ளெரி காத்து நிற்கும்

… உண்மையை உணர்ந்துன் பேரை

…… ஒருதரம் உரைக்கின் காக்கும்

…… உறுதியோ(டு)ஒற்றைக் காலில்

வெள்ளிய சடையோய்! தில்லை

… வெளியினில் காத்து நிற்கும்

…..விளிம்பிலாக் கருணைப் பாங்கை

…… விதத்தலும் ஆமோ ஐயே!

பாங்கு = தகைமை, அழகு; விதத்தல் = சிறப்பித்துக்கூறல், மிகுத்துரைத்தல்.

யாப்பு: பன்னிருசீர் விருத்தம்:அரையடி: கூவிளம் மா தேமா கூவிளம் மா தேமா; 1,4,7,10 சீர் மோனை

குறிப்பு:ஒருபக்கத்தில் மனிதர் இறந்தபின் சுற்றத்தார் அவரது மாமிச மயமான உடம்பைச் சிதை என்னும் தட்டில் இட்டுத் தனக்கு அளிப்பதை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் நெருப்பு. மறுபக்கத்தில், இவ்வாறு அழியும் உடலின் தன்மையைத் தாம் உயிரோடு வாழும்போதே உணர்ந்து சிவ நாமத்தை ஒருதரமேனும் மாந்தர் கூறினால் அவருக்கு அருள்புரிவேன் என்னும் உறுதியோடு தில்லைத் தலத்தில் காத்து நிற்கும் நடராசப் பெருமான். இவ்வாறு மாந்தருக்காகக் காத்திருக்கும் இருவரைச் சுட்டி, அம்பலத்தரசனின் சொல்லில் வடிக்க இயலாக் கருணை உள்ளத்தைப் போற்றுவது இப்பாடலின் கருத்து.

..அனந்த்

25-11-2012
-------------------------------------------------------------------------------------------
ண்ணா (பிரதோஷ) நோன்பின் பேறு உங்களின் வரிகளென்று மனசு படிக்கப் படிக்க மகிழ்கிறது ஐயா. படிக்க முடிந்ததில் பேரின்பம் கொண்டேன்..  நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்
-----------
Nice song highlighting the choice that we have! 
நிலையாமையை நினைவுறுத்தும் அழகிய பாடல்.
காத்து நிற்கும் எரி!
காத்து நிற்கும் அரன்!
அன்புடன், வி. சுப்பிரமணியன்

ஒரு முறை நாமம் சொன்னால் ஓடி வந்து காப்பான் இவன் .. சிவன் எனும் அழகான பாடல்..
நீங்கள் கொடுத்த விளக்கம் .. வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும் .
அன்புடன், அகிலா
------------
முரண்களைச் சமன் செய்யும் முதல்வனின் இருகரங்களைப் பற்றிய உங்களின் வித்தியாசமான (அர்த்தமுள்ள) பார்வை மிக அருமை. "ஒற்றைக் காலில்" என்பதைச் சிலேடையாக அமைத்த விதமும் அருமை.
சந்தர் சுப்பிரமணியன்
----------
நல்ல கவிதை, நல்ல பொருள் விளக்கமும் கூட.
சங்கரன்
-----------------

> எள்ளள வேனு முன்னை
> …
இறைஞ்சிட நினையார்
Dear Sri Ananth,
You seem to have reduced the meaning of the above phrase to
மனிதர் in
your explanation. The phrase tells much more! One who things of the
God when alive retains some connection with Him upon rejecting his
body to the fire. God awaits this stage to bless that one who never
cared to pray to Him when alive!
It seems to me that Lord Pradhosha moorthy has brought out His
Svabhaavam through your poetry, and you may need to read it again to
realise it.
Best wishes,
gopal.
------------
>> God awaits this stage to bless that one who never cared to pray to Him when alive!

அன்புள்ள கோபால்,

உங்கள் அழகிய விளக்கத்திற்கு நன்றி. சைவசித்தாந்தத்தில் இக்கருத்தை ஐந்தொழில்களில் ஒன்றான திரோதானம் (மறைத்தல்)குறிக்கும். இச்சொல்லுக்கு மிகவும் ஆழமான பல விளக்கங்கள் உண்டு. ஒரு எளிய கண்ணோட்டத்தில் பார்க்கையில், படைத்தல்,காத்தல், அழித்தல் ஆகிய செயல்களுக்கு அடுத்துவரும் மறைத்தல் செயலால் ஈசன் தன்னுள்ளே அவை யாவும் ஒடுங்கும்படி செய்தலைத் திரோதானம் என்னலாம்; இதை நடராஜனின் ஊன்றிய கால் குறிக்கும். அதன் பிறகு, எல்லாவற்றிற்கும் மேலான செயலாக, அருளுதல் தொழிலை(வலத்திலுள்ள அபயகரத்தால்) செய்கிறான். அதன் முக்கிய நோக்கம், தங்கள் ஜீவித காலத்தில் ஈசனை நினைந்தோருக்கு மட்டுமன்றி அல்லாதார்க்கும் அவனை நினைப்பதற்கும் அதன் வழியே மாயை என்னும் கட்டினின்று விலகவும் மீண்டுமொரு வாய்ப்பைக் கொடுத்தல் ஆகும். எனவே, அழித்தலைத் தனது இடது கரத்தாலும் அருளுதலை வலது கரத்தாலும் செய்து சமத்துவத்தைக் காட்டும் இறைவன், இவற்றிற்கிடையே மறைத்தல் தொழிலைச் செய்து அடுத்து (எல்லா மனிதர்க்கும் மற்றுமுள்ள ஜீவராசிகளுக்கும்)அருள்வதற்காக “ஒற்றைக்காலில்” நிற்கிறான் என்று பொருள் கொள்ளலாமெனப் படுகிறது.

அனந்த் 27-11-2012


இது செய்வையோ? - October 27 2012

திருச்சிற்றம்பலம் 

<> இது செய்வையோ? <>
 

போக்கற்று நிற்குமெனைப் பரிவோ(டு) உசாவியுன்
... பொற்பதம் காட்டி உன்னை 

வாக்கிட்டுப் பாவியற்றும் வகையையும் கூட்டியுன்
... வடிவினைப் பாடு மாறு 

நாக்கிற்றேன் ஊட்டிப்பின் நாளும்நீ ஆடிடும்
.. நாட்டியம் காண வைப்பின் 

மூர்க்கர்க்கும் அருள்செய்யும் மூர்த்திநீ என்றுபார்
.. மொழிந்துனைப் போற்று மன்றே?
 

நாவிற்றேன் ஊட்டி – நாவில் தேன் ஊட்டி;

மூர்க்கர்= கீழ்மக்கள்,இழிஞர்


பாடல் பொருள் கீழே:

ஐயனே!

நல்வழி எதுவென்று அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை
நீ கவனித்து,
பரிவுடன் என் குறை என்னவெனக் கேட்டு (உசாவி),
இங்கே பார் என்னுமாறு உன் பொன்னான திருவடிகளைக் காட்டி,
உன்மேல் நல்ல சொற்கள் கொண்ட பாடல்களை இயற்றும் விதத்தையும் எனக்குக் கைகூடவைத்து,
அதன் பின் உன் திருமேனி அழகைக் கூறும் பாடல்களை இசையோடு பாடுவதற்காக எனது நாவில் தேனை ஊட்டிப் பாடவும் வைத்து (அதனால் உன் உளம் மகிழ்ந்து)
எனக்கு நீ அனவரதமும் (புறத்தே தில்லையிலும் அகத்தே என் நெஞ்சுள்ளும்) ஆடும் திருநடனத்தைக் காண வைத்துவிடு.

(ஏன் நீ இவ்வாறெல்லாம் வேண்டுமென்று கேட்பாயானால்)

அப்படி நீ செய்தால்தான் என்போல் இழிந்த நிலையில் உள்ளவர்களுடைய குற்றங்களை அறிந்தும் அவர்மேல் சினம் கொள்ளாது, அதற்கு மாறாக, உனது திருவருளை அவர்களுக்கு நல்கும் இறைவன் என்று உலகத்திலுள்ளோர்களிடமிருந்து உனக்குப் புகழ்மொழி கிட்டும்

(எனவே கீழ்ப்பட்டவனான எனக்கும் உன் அருளைத் தருவாயாக).

உணர்ந்தோர் அவரே - October 13 2012

திருச்சிற்றம்பலம் 

<> உணர்ந்தோர் அவரே <>



இல்லாத ஒன்றினைய(து) உள்ள தென்றும்
.. இருக்கின்ற ஓர்பொருளை இல்லை யென்றும்

நில்லாத உலகில்நமை மயங்கச் செய்து
.. நிரையாகப் பிறவிகளை எடுக்க வைக்கும்

பொல்லாத சாலமொன்றைப் புரிவாய் உன்னைப்
.. புரிந்தோர்கள் புறக்கண்ணால் உலகில் காணும்

எல்லாமும் அனுபவிப்பார் இன்பம் துய்ப்பார்
.. எனினுமவை மாயையென உணர்வார் தாமே.

ாப்பு: எண்சீர்; அரையடி வாய்பாடு: தேமாங்காய் காய் மா தேமா

அனந்த் 13-10-2012 

=====================
ின்னூட்டங்கள்:



இனிய பாடல்.


சம்பந்தர் தேவாரம் ஒன்றை ஞாபகப்படுத்தியது.


சம்பந்தர் தேவாரம் - 1.28.1

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
சிவசிவா (வி. சுப்பிரமணியன்)

நன்றி.

கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
.. மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
.. கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய்
ரிபுகீதை, 18-13
... அனந்த்

……………
துய்த்திடும் யாவுமே பொய்த்திடு மென்பதைப்
புரிந்தவர் சொல்லிடக் கேட்டிட லின்பம்

கைத்தல மிருந்திடும் கனியினை யறிந்தே
கண்டிடும் மாயையை விடுத்திட லின்பம்

மெய்க்கொரு பொருளாம் மகேசன் தாளிணை
யாண்டும் பற்றியான் கிடந்திட லின்பம்

தைத்திடும் வகையிற் பைந்தமிழ்ப் பாவால்
உரைத்திடு மன்பரை வணங்குத லின்பமே!

சங்கர் குமார்