Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - March 13 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று சனிப் பிரதோஷமும் மஹாசிவராத்திரியும் சேர்ந்து அமைந்த சிறப்பு நன்னாள்.

மேலுமொரு ஆடல்

அஞ்சல்ல பத்தல்ல அறுபத்து நால்வகை ஆடல்கள் அந்த நாளில்
.. ஆலவாய் நகரிலே கோலமாய் ஆடிய(து) அடியனேன் அறிவனையா!
மிஞ்சுமொரு விளையாடல் வேண்டியின் றுன்னிடம் விரைந்துநான் வந்து நின்றேன்
.. மேதக்க தேவரீர் திருச்செவி மடுத்ததைக் கேட்டருள் புரிய வேணும்
நெஞ்சமெனும் மன்றொன்று நினக்காக நான்பல நாட்களாய் நிறுவி வைத்து
.. நேரமும் அதன்மிசை நின்னடி பதியுமோர் நினைப்பினில் ஆழ்ந்தி ருந்தேன்
பஞ்சையிவ னென்றென்னைப் பாராமல் என்னுளே பரதமொன் றாடி விட்டால்
.. பாரோரும் உன்செயல் பார்த்ததை மெச்சியுன் பக்கலை நாடிவருமே

No comments: