Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - November 25 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிக்கெனப் பிடித்தாய் (10)

போதயன் மாலும் புரந்தரா தியரும்
.. போந்துநின் திருச்சபை முன்னே
யாதெமக் களிக்கும் பணியென வேண்ட
.. ஆங்கவர்க் கருள்செயும் ஐய!
ஏதொரு சிறப்பும் இலனெனத் தெரிந்தும்
.. இரங்கிநீ வந்தென தகத்தே
சோதியாய்த் தோன்றிச் சிக்கெனப் பிடித்தாய்
.. சொல்லவும் யாதினி உளதே

புரந்தராதியர் - இந்திரன் முதலாய தேவர்கள்


வாதவூர் அண்ணல் வாசகத் துள்ளே
.. மறைசொல முயன்றுமே தோற்ற
போதகப் பொருளாய்த் துலங்கிடும் சிவமே!
.. போற்றவோர் முறையெதும் அறியாப்
பேதையேன் இங்குப் பிழைகளே மலிந்த
.. பிதற்றலாய் மொழிந்ததை ஏற்(று)உன்
மாதயை உலகோர் அறிந்திடச் செய்வாய்
.. வளர்திருச் சிதம்பரத் தரசே!

No comments: